32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

உலகளாவிய ECMO சமூகத்தை ஒன்றிணைத்தது சென்னை | SWAAC ELSO & ESOI மாநாடு 2026

Dinesh R சேலம் Published: 08/02/2026 4 நிமிட வாசிப்பு Updated: 09/02/2026 இது புதிது
எழுத்து அளவு:

பிப்ரவரி 7 மற்றும் 8, 2026 அன்று ரேடிசன் ப்ளூ ஜிஆர்டியில், 15 ஆவது வருடாந்திர தேசிய ECMO சொசைட்டி ஆஃப் இந்தியா (ESOI) மாநாட்டுடன், தென்மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பிரிவின் எக்ஸ்ட்ரா கார்போரியல் லைஃப் சப்போர்ட் ஆர்கனைசேஷன் (South West Asia and Africa Chapter of the Extracorporeal Life Support Organisation (SWAAC ELSO) இன் 12 ஆவது வருடாந்திர சர்வதேச மாநாட்டை நடத்தியதன் மூலம், சென்னை ஒரு உலகளாவிய தீவிர மருத்துவத்திற்கான மையமாக உருவெடுத்தது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த மதிப்புமிக்க மாநாட்டை, ECMO & VAD இயக்குநரும், இருதய மார்பு பிரிவு மூத்த ஆலோசகரும், ECMO, VAD & மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் K. மதன் குமார் மற்றும் மூத்த ஆலோசகரும், குழந்தை மருத்துவ தீவிர சிகிச்சை நிபுணருமான மருத்துவர் இந்திரா ஜெயக்குமார் ஆகியோர் காவேரி மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்தனர். மேலும் இம்மாநாட்டில், தீவிர பராமரிப்பு, இருதய மார்பு பிரிவு அறுவை சிகிச்சை, இருதயவியல், குழந்தை மருத்துவம், மயக்கவியல், நுரையீரல், நர்சிங் மற்றும் ஊடுபாய்வு (perfusion) தொழில்நுட்பம் ஆகியவற்றிலுள்ள உலகின் முன்னணி நிபுணர்களை ஒன்றிணைத்தனர்.

நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 650க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, மேம்பட்ட உயிர்-பராமரிப்பு (life – support) மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மையமாக சென்னையின் வளர்ந்து வரும் வளர்ச்சியை எடுத்துக் காட்டினர். 

கடுமையான இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு நோயாளிகளை நிர்வகிப்பதில் எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேஷனின் (ECMO – Extracorporeal Membrane Oxygenation) விரிவடையும் பங்கை இந்த மாநாடு மையமாகக் கொண்டது. கடந்த 15 ஆண்டுகளில், தீவிர மற்றும் அவசர சிகிச்சையின் தன்மையை ECMO மாற்றியுள்ளது. ஒரு காலத்தில் ஆபத்தானதாகக் கருதப்பட்ட நோய் பாதிப்பு நிலைமைகளுக்கு, நம்பிக்கையையும் மேம்பட்ட குணமாகும் வாய்ப்பையும் வழங்குகிறது.

இத்துறையின் பரிணாம வளர்ச்சி, மாநாட்டு அமர்வு உரையாடல்களில் பிரதிபலித்தது. பேச்சாளர்கள், நிஜ உலக மருத்துவ அனுபவங்கள், வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ECMO பராமரிப்பில் வளர்ந்து வரும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அறிவியல் நிகழ்ச்சியில் உலகளாவிய ELSO சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உட்பட சர்வதேச மற்றும் தேசிய ஆசிரியர்களின் வலுவான கலவை இடம்பெற்றது. முக்கிய சொற்பொழிவுகள் மற்றும் குழு விவாதங்களுக்கு மேலதிகமாக, ECMO கேனுலேஷன் (cannulation), மேம்பட்ட VA மற்றும் VV ECMO, ECPR மற்றும் குழந்தைநல ECMO பற்றிய பயிலரங்கில் பங்கேற்பாளர்கள் ஆர்வம் காட்டினர். இப்பயிலரங்குகள், செயல்முறை மற்றும் திறன் அடிப்படையிலான கற்றலை அளிக்கும் வகையில் அமைந்தன.

இந்த நிகழ்வில் பேசிய மருத்துவர் K. மதன் குமார், “ECMO, தற்போது ஒரு கடைசி முயற்சி சிகிச்சையாக இல்லாமல், நவீன தீவிர சிகிச்சையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருகிறது. இந்த மாநாட்டின் மூலம் அறிவைப் பகிர்ந்து கொள்வது, நடைமுறைகளைத் தரப்படுத்துவது மற்றும் சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள ECMO ஆதரவை வழங்க சுகாதார நிபுணர்களுக்கு அதிகாரமளிப்பது எங்கள் நோக்கமாகும். குறிப்பாக மற்ற அனைத்து முறைகளும் உதவ முடியாத சிக்கலான இதய மற்றும் நுரையீரல் செயலிழப்புகளின் பொழுது செயல்திறன்மிக்க ECMO பேருதவியாக இருக்கும்” என்றார். மேலும், “இந்த சர்வதேச மாநாட்டை சென்னையில் நடத்துவது, மேம்பட்ட தீவிர சிகிச்சை மற்றும் மாற்று மருத்துவத்தில் நகரத்தின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது” என்றார்.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ், “காவேரி மருத்துவமனை, உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு, வலுவான மருத்துவ நிபுணத்துவம், தொடர்ச்சியான கற்றல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மாநாட்டை ஆதரிப்பதும் நடத்துவதும், பிராந்தியம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு மேம்பட்ட உயிர்காக்கும் தொழில்நுட்பங்களை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது” என்றார். மேலும், “எங்கள் ECMO குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். இது போன்ற மாநாடுகள் நமது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துகின்றன. மேலும் இறுதியில், மிகவும் மேம்பட்ட தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குப் பயனளிக்கின்றன” என்றார்.

SWAAC ELSO, ESOI உடன் இணைந்து, வசதிகள் குறைவாக உள்ள சூழல்கள் உட்பட, ECMO இன் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மாநாட்டின் நோக்கம் பரந்துபட்டு, ஒருங்கிணைப்பையும், ஆராய்ச்சியையும் மற்றும் அறிவுப் பகிர்தலையும் நாடெங்கும் கொண்டு செல்வதில் கவனம் கொள்கிறது.

SWAAC ELSO & ESOI மாநாடு 2026 சிறப்பாக முடிவடைந்தது. பங்கேற்பாளர்களுக்கு மேம்பட்ட மருத்துவ நுண்ணறிவுகள், வலுவான தொழில்முறை கூட்டமைவுகள் மற்றும் உலகளவில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் உயிர்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை மாநாடு அளித்தன.

இம்மாநாட்டில், ECMOவின் தந்தையென அழைக்கப்படும் மருத்துவரான திரு. ராபர்ட் பார்ட்லெட் (Robert H. Barlett) அவர்களின் மார்பளவு சிலையைத் திறந்து கெளரவித்தனர். அவரது கண்டுபிடிப்பான ECMO, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காத்துள்ளது. அவரது லெகசியைத் தொடர்ந்து கொண்டு செல்ல மாநாட்டில் உறுதியேற்கப்பட்டது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.