

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன்.
‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் மைதீன், “துஷ்யந்த்தை நடிக்க வைக்க அணுகியபோது, அவர், ‘அப்பா தான் முடிவு சொல்வார்’ என்றார். எனக்கு அப்போது ஜெயப்பிரகாஷ் சார் தான் அவரது அப்பா என்பது தெரியாது. ஜெயப்பிரகாஷ் சாரைச் சந்தித்து முழுக் கதையைச் சொன்னேன். கதையைக் கேட்டு, ‘அழகர் கேரக்டர் யார் செய்கிறார்கள்?’ என்று கேட்டார். ‘நான் உங்களைக் கூட நினைத்திருந்தேன். ஆனால் சம்பளம் பெரிதாகிவிடும்’ என்றேன். ஆனால், ‘சம்பளம் ஒரு விஷயமே இல்லை. நான் நடிக்கிறேன்’ என்று வந்தார். அவர் மனதுக்கு என் பெரிய நன்றி.
ஜேம்ஸ் வசந்தன் சாரிடமும் அப்படித்தான் தயங்கிச் சென்றேன். ‘கதை பிடித்தால் தான் சொல்வேன்’ என்றார். கதை படித்துவிட்டு, ‘இதை அப்படியே எடுத்து விடுவீர்களா?’ என்றார். நான் கண்டிப்பாக எடுப்பேன் என்றேன். அப்படி என்றால் நான் கண்டிப்பாக இசை அமைக்கிறேன் என்று சொன்னார். அவருக்கு என் நன்றிகள். இம்மாதிரியான ஆளுமைகள், உதவிகளால் தான் இப்படம் சாத்தியமானது. நம் தேடலை எப்போதும் நிறுத்தக்கூடாது. என் தயாரிப்பாளர் மோகனா மேடம் அவர்களுக்குப் பெரிய நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும்” என்றார்.
நடிகை ஜனனி, “இயக்குநர் மைதீன் முதன்முதலில் என்னைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னபோதே, கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக கதையின் பின்னணியும், படப்பிடிப்பு நடைபெறவிருந்த லொகேஷன்கள் குறித்த அவரது அணுகுமுறையும் என்னைக் கவர்ந்தது. இயக்குநர் மைதீன் கதையை மிகவும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன விதத்திலேயே இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. ‘ஆல் பாஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
நடிகர் துஷ்யந்த், “இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது திரைப்பயணத்தில் இந்தக் கதாபாத்திரத்தை நிச்சயம் மறக்க முடியாத வகையில் நினைவில் வைத்திருப்பேன். இந்தப் படத்தில் எனது தந்தையும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இது என்னுடைய நான்காவது படம். என்னுடைய முதல் படமான ‘ஈசன்’ படத்திற்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இயக்குநர் சசிகுமார் சார் இயக்கிய அந்தப் படத்தில் நான் மிகவும் சிறிய வயதில் நடித்தேன். அப்போது எனக்கு சினிமா மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. ஒரு படத்தில் நடிப்பதே எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. சினிமா பற்றி எதுவும் தெரியாத அந்தக் காலகட்டத்தில் சசிகுமார் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார். இந்தப் படத்தின் இயக்குநர் மைதீன் வடசென்னையை ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதே போல் எடிட்டர் சார் முற்றிலும் வித்தியாசமான பார்வையுடன் படத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்” என்றார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முழுமையாகக் கதையைச் சொன்னார். கதையில் இருந்த ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அழகாக எடுத்துச் சொன்னார். அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை நான்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். ‘இயக்குநர் நடிப்பீர்களா?’ என ஆச்சரியமாகக் கேட்டார். ‘நடிக்கத்தானே வந்திருக்கிறோம். கண்டிப்பாகச் செய்கிறேன்’ என்று சொன்னேன். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது.
இயக்குநர் மைதீன் இந்தப் படத்தை மிகவும் இயல்பான படமாக உருவாக்கியிருக்கிறார். நான் முதலில் கேட்ட கதைக்கும், பின்னர் டப்பிங் செய்யும்போது பார்த்த படத்திற்கும் எந்த மாற்றமும் இல்லை. படத்தில் பேசப்படும் வசனங்களாக இருந்தாலும் சரி, காட்டப்படும் வீடுகளாக இருந்தாலும் சரி, அனைத்துமே அந்த வாழ்வியலை விட்டு விலகாமல் இருக்கிறது. ஒரு சமையல்காரர், ஒரு பெயிண்டர், ஒரு சைக்கிள் கடைக்காரர் என மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்து, அவர்களுடைய குடும்பங்கள், குழந்தைகள், அவர்களுக்குள் நடக்கும் சந்தோஷங்கள், சண்டைகள் என மிகவும் இயல்பான விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு இந்தப் படத்தில் மிகவும் பிடித்திருந்தது.
சினிமாவில் நிறைய அனுபவம் கொண்ட சரத் சார் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவருடைய பங்களிப்பும் பாராட்டுக்குரியது. பாடல்களும் இசையும் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. சில காட்சிகளில் இசை அந்தக் காட்சியின் உணர்வை இன்னும் அழகாக கொண்டு சென்றிருக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் சார் பசங்க படத்திற்கும் ஈசன் படத்திற்கும், இசையமைத்துள்ளார், இப்போது இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மகிழ்ச்சி.
வடசென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் காட்டாமல், அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கையை இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது. வடசென்னை மக்கள் இப்படித்தான் இருப்பார்கள், இப்படித்தான் பேசுவார்கள், குழந்தைகளுக்குள் இப்படித்தான் நட்பு இருக்கும் என்பதை மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் காட்டியிருக்கிறார்கள்” என்றார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், “நான் எல்லாப் படத்தையும் மனதுக்கு நெருக்கமாகப் பார்ப்பேன், அப்படி சில படங்களைப் பார்க்கும்போது, ஏன் இவ்வளவு வன்முறை எனத் தோன்றும். ஆனால் இந்தப்படம் பார்க்கும் போது உங்களுக்கு இப்படி எந்தக் கேள்வியும் தோன்றாது. மன அமைதி கிடைக்கும். இப்படத்தின் கலை இயக்குநருக்குத் தேசிய விருது கிடைக்கும். அந்தளவு உழைத்திருக்கிறார். மோகன் ராஜன் என்னுடன் தான் முதல் படத்தில் பணிபுரிந்தார். அவர் வளர்ச்சி எனக்கு சந்தோஷம். இப்படத்தில் நான்கு பாடல் எழுதியுள்ளார். இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். இயக்குநர் வடசென்னையை யாரும் காட்டாத கோணத்தில் காட்டியுள்ளார்” என்றார்.


