![]()
ஸ்கிட்சோஃப்ரீனியா ஆராய்ச்சி அறக்கட்டளை (SCARF), ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 22 வரை, சென்னையில் உள்ள தி சவேரா ஹோட்டலில், ஸ்கிdசோஃப்ரீனியா (மனச்சிதைவு) பற்றிய சர்வதேச மாநாட்டின் (IConS XII) 12வது பதிப்பின் நிகழ்வை நடத்தியது. இம்மாநாடு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடினர். ஸ்கிட்சோஃப்ரீனியா ஆராய்ச்சி அறக்கட்டளையால் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் IConS, ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களை ஒன்றிணைத்து, ஸ்கிட்சோஃப்ரீனியா மற்றும் மனநல ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில் ஏற்படும் புதிய முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சர்வதேச மேடையாகும். இந்த மாநாட்டில் உரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் போஸ்டர் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
“மனநல மேம்பாட்டில் புதுமைகள்: ஆராய்ச்சி மற்றும் நடைமுறை” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில், மாநாட்டுக்கு முந்தைய பட்டறைகள், 6 ஆவது டாக்டர் சாரதா மேனன் சிறப்புரை, முழுநிலை அமர்வுகள், கருத்தரங்குகள், ஸ்பாட்லைட் விவாதம் மற்றும் போஸ்டர் விளக்கக்காட்சிகள் அடங்கிய விரிவான அறிவியல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
ஸ்கார்ஃப்பின் இணை நிறுவனரும், தற்போதை துணை தலைவருமான மருத்துவர் தாரா ரங்கசாமி, “நான், IConS எனும் கனவைப் பிரசவித்த தாய். அதற்கு இப்போ 25 வயதாகிறது. இப்போ ஜென்-ஸீ தலைமுறை வந்துவிட்டனர். முதன்முறையாக இந்த மாநாட்டைத் தொடங்கிய பொழுது மின்னஞ்சல்கள் கூட இல்லை. இரவு முழுவதும் கண் விழித்து, Dial-Up இணைப்பில் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருப்பேன். மனச்சிதைவுக்கான சர்வதேச மாநாட்டைச் சென்னையில் நடத்தவேண்டும் எனச் சொன்ன பொழுது, ‘உங்களிடம் சொல்வதற்கு என்ன உள்ளது? சென்னைக்கு எப்படி நிபுணர்கள் வருகிறார்கள்? அது ஒரு அழகான நகரம் கூடக் கிடையாதே!’ எனக் கேட்டனர்.து என்னை மேலும் உறுதியுடனும் பிடிவாதத்துடனும் மாநாட்டை நடத்த உந்தியது. நண்பர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்தனர். அவர்கள் அனைவரும் வந்தனர். யாருக்குமே ஸ்கார்ஃப் ஸ்பான்சர் செய்து இதுவரை வரவைத்ததில்லை. ஜப்லோன்ஸ்கி, கோயல் போன்ற உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் தொடர்ந்து நம் மாநாட்டில் பங்குபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கருத்தரங்கு நடத்துவதற்கான சரியான கன்வென்ஷன் சென்டர் சென்னையில் இல்லை. சென்னையில் நல்ல கருத்தரங்கு மையம் அமைக்கும்படி அரசிற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அப்படி அமைக்கப்பட்டால், மாநாட்டிற்கான செலவு குறையும். அதனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இருந்தும், லோக்கலில் இருந்தும் நிறைய இளம் மருத்துவர்கள் கலந்து கொள்ள உதவியாக இருக்கும்” என்றார்.
இம்மாநாட்டிற்குத் தலைமை விருந்திரனாக ஐ.சி.எம்.ஆர். (ICMR) நிறுவனத்தின் டெலிவரி ரிசர்ச் பிரிவின் தலைவரும் அறிவியலாளருமான மருத்துவர் அஷூ க்ரோவர் கலந்து கொண்டார். அவர், “1911 இல் தொடங்கப்பட்ட ICMR, நூறாண்டுகளைக் கடந்து செயற்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ்க்குத் தடுப்பூசி கண்டுபிடித்த நிறுவனம் என இந்தியர்கள் அனைவருக்கும் தெரியும். ICMR, மருத்துவ ஆராய்ச்சிக்கு நல்கை (grant) அளிக்கும் நிறுவனமாகும். என்னை இம்மாநாட்டிற்கு அழைத்ததன் மூலம், ஒரு கதவைத் திறந்துவிட்டனர் என்றே சொல்லவேண்டும். மக்களுக்கு உதவும் ஒரு மருத்துவ மாடலிற்கான ஆராய்ச்சியைத் தரவுகளோடு சமர்ப்பித்தால், ICMR தன் ஆதரவை அளிக்கத் தயாரிக்க உள்ளது. முன்பு போல் அல்லாமல், தற்போது தனியார் நிறுவனங்களுக்கும் ICMR நல்கை வழங்குகிறது. எங்களது நோக்கம், நன்மை பயக்கும் ஆராய்ச்சி முடிவுகளைப் பொது சுகாதாரத்திற்குத் தக்கவாறு சீரமைத்துக் கொண்டு செல்வதேயாகும்” என்றார்.
இம்மாநாட்டிற்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது (IAS) கலந்து கொண்டார். அவர், “தமிழ்நாட்டில், தாய்மார்கள் இறப்பு விகிதத்தைச் சீரிய முயற்சியால் தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. ஆனால், மனநலப் பிரிவைப் பொருத்தவரை நாம் போகவேண்டிய தூரம் மிக அதிகம். மாவட்டத்திற்கு இரண்டு, மூன்று நிபுணர்களைக் கொண்டு, பெருகி வரும் மனநலன் சார்ந்த தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. தற்கொலைகளைத் தடுக்க தனியார் நிறுவனமான SNEHA பெரிய உதவியாக இருக்கிறது. கைவிடப்பட்ட மனநலன் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க தனியார் நிறுவனமான BANYAN உதவுகிறது. மனநலன் சார்ந்த ஆராய்ச்சியில் SCARF ஈடுபட்டு வருகிறது. இப்படியான தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து, எப்படி மாநிலத்தின் மனநலன் சார்ந்த பொது சுகாதாரத்தை ஒருங்கிணைத்து மேம்படுத்துவது என்பதற்கான விதிமுறைகளுக்கு இறுதி வடிவம் அளிக்கும் பணி நடைபெறுகிறது” என்றார்.
இம்மாநாட்டில், ஜிப்மரைச் சேர்ந்த மருத்துவர் நடராஜன் வரதராஜனுக்கு ஸ்டெலர் (STELAR) விருது அளிக்கப்பட்து. இவ்விருதைப் பெறும் முதல் நபர் எனும் பெருமையையும் அவர் பெற்றார். முதல்முறையாக விருது அறிவிக்கப்பட்ட பொழுதும், இந்தியாவெங்கும் இருந்து நிறைய விண்ணப்பங்கள் வந்திருந்தன என மகிழ்ச்சியாக அறிவித்தார் மருத்துவர் மோகன் ஐசக். இவ்விருதை உருவாக்கி, அதற்கான பணத்தை, மருத்துவர் தாரா ரங்கசுவாமி தான் வாங்கிய ‘காயத்ரி ஜெய்ப்பூரிய விருது 2026’ விருதில் இருந்து அளித்துள்ளார்.

ஸ்கார்ஃபின் நிறுவனரும், இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவருமான மருத்துவர் சாரத மேனனின் நினைவில் நடத்தப்பட்ட, ‘6ஆவது டாக்டர் சாரதா மேனன் சிறப்புரை’யை, ஹார்வர்ட் மருத்துவப் பள்ளிப் பேராசிரியரும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனநல மருத்துவரும் நரம்பியல் விஞ்ஞானியுமான மட்சேரி எஸ். கேசவன் வழங்கினார். “ஸ்கிட்சோஃப்ரீனியாவிற்கு பெயர் மாற்றம்” என்ற தலைப்பிலான அவரது உரை, நோய் கண்டறிதல், அடையாளம் மற்றும் மொழியின் தாக்கம் தொடர்பான கண்ணோட்டங்களை ஆராய்ந்தது.
ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெற்ற கருத்தரங்குகளில், புதிதாகத் தொடங்கும் மனப்பிறழ்வு (psychosis), உடல் நலம், இளைஞர் மனநலம், வாழ்க்கை அனுபவங்கள், டிஜிட்டல் மனநலம், துணை வேலைவாய்ப்பு, மீட்பு, அறிவாற்றல் குறைபாடு, ஒருங்கிணைந்த மருத்துவம், நரம்பியல்-அறிவாற்றல் ஆராய்ச்சி, நரம்பியக்கத் தூண்டல், ஆரம்பகட்ட மனப்பிறழ்வு மற்றும் சமூக மனநல தலையீடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியிருந்தன.


