32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

லெனின் பாண்டியன் விமர்சனம் | Lenin Pandian review

Dinesh R சேலம் Published: 23/09/2026 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

போலி என்கவுன்ட்டர்க்கு ஒத்துக் கொள்ளாத லெனின் எனும் இடதுசாரி சிந்தனையுள்ள காவலர் அலுவல் நேரத்தில் இறந்துவிட, அந்த வேலை அவரது மகன் மாறவர்மன் சுந்தரபாண்டியனிற்குக் கிடைக்கிறது. குடிகாரனால் அடித்து சாக்கடையில் தள்ளப்படும் மாறவர்மன் சுந்தரபாண்டியனிற்குக் காவல்நிலையத்தில் வேலையை நியமித்து சல்யூட் அடித்துக் கொண்டே இருக்கும்படியான நூதனமான அவமானத்தைத் தருகின்றனர். துரைராசு எனும் முதியவர், மகள் என நினைத்து வளர்க்கும் ஆட்டினை, மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரி ஒன்று மோதிக் கொன்று விடுகிறது. சாமானியனான துரைராசு, நீதிமன்றத்திற்குச் செல்ல, ஒரு துப்பாக்கியுடன் மாறவர்மன், துரைராசுக்குப் பாதுகாப்பாக நியமிக்கப்படுகிறார். அதிகாரத்தின் கொடும் கரங்களை எதிர்த்து மாறவர்மன் தாக்குப்பிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மாறவர்மன் சுந்தரபாண்டியன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக தர்ஷன் கணேசன் அறிமுகமாகியுள்ளார். இவர், சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகனாவார். கொஞ்சம் பயம் கலந்த கதாபாத்திரத்திற்குப் பொருந்திப் போகும் நடிப்பைக் கச்சிதமாக அளித்துள்ளார். மாறவர்மனின் மனைவி பிரியாவாக ஷ்ரித்தா ராவ் நடித்துள்ளார்.

சந்தனம் எனும் கதாபாத்திரத்தில் ரோஜாவும், அவரது கணவர் துரைராசுவாகக் கங்கை அமரனும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும், ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (1998)’ படத்திற்குப் பிறகு ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தனம், மழையில் முட்டைக்காளானைச் சேகரிக்கும் காட்சியோடு படம் கவித்துவமாக முடிகிறது. அவருக்கும், துரைராசுக்கும் இடையே ஓர் அழகான காதல் உள்ளது. அதை வசனங்களில் இயக்குநர் கடந்துவிட்டாலும், ரோஜாவின் கண்களில் அதைக் காண முடிகிறது. சாமானியராகக் கங்கை அமரன், நீதிபதி பீமாராவ் கொண்ணமுத்துவாக ஜார்ஜ் மரியான், காவல்துறை அதிகாரியாக போஸ் வெங்கட் மூவரும் இடம்பெறும் நீதிமன்றக் காட்சி ஒன்று, பார்வையாளர்கள் கரவொலியில் திரையரங்கம் அதிரும் வண்ணம் மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் மரியான் பிரமாதப்படுத்தியுள்ளார்.

கதையாக ஈர்த்த அளவு, திரைக்கதையாகச் சுவாரசியப்படுத்தத் தவறியுள்ளார் இயக்குநர் D.D.பாலசந்திரன். கோர்வையாக அல்லாமல் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியதாக உள்ளது படக்காட்சிகள். ‘உன்னைத் துப்பாக்கி தொட விடமாட்டேன்’ என்று சூளுரைப்பவரின் கையாலேயே மாறவர்மன் துப்பாக்கி பெறுகிறார். அது ஒரு மாஸ் காட்சியாக உருவாகியிருக்க வேண்டும். ஆனால் காட்சி அடுக்குகளில் அது நீர்த்துப் போய்விடுகிறது. அதே போல், துரைராசு மிக அப்பாவியானவர் என்பது இயல்பாக உருப்பெறாமல் திணிக்கப்பட்டதாக உள்ளன. பாரதிராஜாவை மனதில் வைத்து துரைராசு பாத்திரத்தைப் படைத்துள்ளார் இயக்குநர். முதல் மரியாதை பின்னணி இசையைப் பயன்படுத்தியுள்ளார் இளையராஜா. ஒருவேளை ஸ்ஃபூப் செய்திருக்கிறாரோ என்ற ஐயப்பாடும் எழாமல் இல்லை. ‘பாண்டி முனி’ பாடல் திரையில் உருவாக்கியிருக்க வேண்டிய மேஜிக்கைச் செய்யத் தவறிவிடுகிறது. சாமானியன் வெல்வது போல் நிறைவை அளிக்காமல், உருக்கத்தை நோக்கிப் பயணிக்கிறது திரைக்கதை.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.