
அன்பும் அறிவியலும் கலந்த ஓர் இயல்பான உறவை விசித்திரமாகச் சித்தரிப்பது மடமை என்பதை வணிக சமரசமின்றிப் பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
“பெண்களை உள்ளே விட்டால் வீடு விளங்காது” என்ற கொள்கை கொண்டவர் முத்துக்குமார். நாயகன் சனந்தின் அப்பா அவர். அவருக்கு சனந்தோடு சேர்த்து மூன்று மகன்கள். மூத்தமகன் மனைவியை அடித்துத் துரத்தியிருப்பார். இரண்டாவது மகன் திடீரென திருமணம் முடித்து வருவார். ஆனால் அவரின் மனைவியைக் குடும்பமே சேர்ந்து கொன்றுவிடும். இப்பேர்ப்பட்ட ஆணாதிக்க குடும்பத்திலுள்ள கடைக்குட்டி சனந்த் தனக்குள்ளிருக்கும் பெண் தன்மையை உணர்ந்து பென்ணாக மாறினால் என்ன நடக்கும், நடந்தது என்பதே படத்தின் கதை
சனந்திற்கு இந்தப்படம் வாழ்நாள் பொக்கிஷம் எனலாம். அவ்வளவு சிறப்பான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் நண்பராக வரும் ரிஷிகாந்தும் மிரட்டியுள்ளார். முத்துக்குமார் தாய்கிழவிக்குப் பிறகு இதில் இன்னும் வீரியம் காட்டியுள்ளார். செளந்தர்ராஜா உட்பட துணை கதாபாத்திரங்கள் அனைவருமே அசத்தல். ஸ்பெஷல் மென்சன் கீர்த்தி சுரேஷ். அவர் ஏன் இந்தப்படத்தில் இந்தக் குட்டி ரோலில் நடிக்கச் சம்மதித்தார் என்பதற்கான பதில் படத்திலிருக்கிறது.
திருவின் ஒளிப்பதிவு 1980களின் நிலவியலை அச்சு அசலாகக் காட்டியுள்ளது. இந்தப்படம் ஒரு விஷுவல் புரட்சி எனலாம். கதையோடு மிக நன்றாக ஒத்திசைந்துள்ளது இளையராஜாவின் இசை. ‘முத்துமணி’ பாடல் வரும்போது சிலிர்த்து விடுகிறது.
ஆண்பால், பெண்பால், பலவின் பால் என்பதை இலக்கியம் ஏற்றுக்கொள்ளும். சமூகம் ஏற்றுக்கொள்ளுமா என்றால் இல்லை. அது இழுத்துப்போட்டு கொல்லும் என்பது தான் 1980 கால கட்டங்களில் நிஜம். அதுவும் கிராமங்களில் சொல்லவே வேண்டாம். அப்படியொரு கொடுமை நிறைந்த சமூகத்தையும் மனிதர்களையும் காட்டியுள்ளார் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ். படத்தில் மிகச்சில இடங்களில் மட்டும் தடம் புரளும் திரைக்கதையும், கூடுதலாகப் பயணிக்கும் கிளைமாக்ஸும் நெருடலாக இருக்கிறது. அவற்றையும் கண்டுணர்ந்து களையெடுத்திருந்தால் இந்த டோரதி கருத்தியலோடு அல்லாமல் கமர்ஷியலாகவும் ஈர்த்திருக்கும். எப்படிப் பார்த்தாலும் தமிழ்ச் சமூகத்தில் டோரதி மிக முக்கியமான பதிவு.
– வெண்பா தமிழ்
