32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Don’t trouble the trouble – பேயைக் கடத்தும் மேஜிக் படம்

Dinesh R சேலம் Published: 28/09/2026 4 நிமிட வாசிப்பு Updated: 01/10/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

அர்கா மீடியா ஒர்க்ஸ், ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா, எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோண்ட் டிரபிள் த டிரபிள்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்தியேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.எஸ்.ராஜமௌலி, எஸ்.எஸ்.கார்த்திகேயா, ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன் நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, ”இது எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம். இந்தப் படம் நேர்மையான, இனிமையான திரைப்படம். எஸ்.எஸ். ராஜமெளலி வழங்கும் என்றால், இந்தப் படத்தின் பட்ஜெட்டை விட, அவருடைய படங்களில் உள்ளதைப் போன்ற எமோஷனைச் சொல்லும் படம் என்று குறிப்பிடலாம். அது உங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். இப்படத்தின் இரண்டாம் பாதியில் இடம் பிடித்திருக்கும் எமோஷனல் உங்கள் அனைவரையும் கவரும்” என்றார்.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, ”இந்தப் படத்தின் முன்னோட்டத்திற்குப் பின்னணி குரல் கொடுத்த ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நன்றி. ஒரு முறை என்னிடம் மிகப் பெரிய கட்டிடக் கலை நிபுணர் சொன்னார். ‘நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டிடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால் அதுதான் மிகச் சிறந்த கட்டிடம்’ என்றார். இது என்னைப் பொறுத்தவரை திரைப்படத்திற்கும் பொருந்தும். இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாகச் சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஷஷாங்கிடம் சொன்னேன்.

இயக்குநர் கதை சொல்வதற்காக என்னைச் சந்தித்தார். அப்போது அவர் எனக்கு மூன்று மணி நேரத்தைத் தாருங்கள். இப்படத்தின் கதையைச் சொல்கிறேன் என்றார். அவரிடம் நிச்சயமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாது. உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையைச் சொல்ல முடியுமா எனக் கேட்டேன். ‘அது எப்படி சாத்தியம்?’ எனக் கேட்டார். ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால், அது எனக்குப் பிடித்திருந்தால், நான் இரண்டரை மணி நேர கதையைக் கேட்கிறேன் என்றேன்.‌ அப்போது அவர் யோசித்து, ‘எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம். ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக் கதையை சொல்கிறேன்’ என்றார்.

‘ஒரு பேயைக் கடத்திய மனிதனின் கதை’ என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விஷயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது” என்றார்.

ஃபஹத் பாசில், ”நான் இதுவரை இப்படி ஒரு கதையைக் கேட்டதும் இல்லை, இப்படி ஒரு படத்தைப் பார்த்ததும் இல்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நான் நடித்ததில்லை. இது மிகவும் புதிது. அதனால் தான் இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தேன். நாங்கள் இந்தப் படத்திற்காக 100, 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இப்படத்தினை அண்மையில் பார்த்தபோது வியந்தேன்.

என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திய குழந்தை என்றால் அது சாரா தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் என்னிடம், ‘இப்படி பேசலாமே!’ என என்னுடைய வசனத்தையும் அவள் சொல்லிக் காட்டுவாள். என்னுடன் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் யாருமில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அற்புதமான சக நடிகை தான் சாரா. நாங்கள் இருவரும் இணைந்து இந்தப் படத்தில் அற்புதமான மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறோம். இந்தப் படம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், அந்த அளவிற்கு அழகான அற்புதமான படம்” என்றார்.

சூர்யா, “சினிமா என்பது என்னைப் பொறுத்தவரை நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும். நாம் பிறந்ததிலிருந்து சினிமாவை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். எனக்கு தற்போது ஐம்பது வயதாகி விட்டது. ஒவ்வொரு சினிமாவும் புதுப்புது படங்கள், புதுப்புது முயற்சிகள் என நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதைப் போலத்தான், நான் இந்தத் திரைப்படத்தையும் பார்க்கிறேன். யாரும் எதிர்பார்க்காத ஒரு காம்பினேஷன். ஃபஹத் பாசில், ராஜமௌலி, கார்த்திகேயா கூட்டணியில் இப்படி ஒரு திரைப்படம் உருவாகும் என நாம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இப்படி ஒரு ட்ரெய்லர். அதில் இப்படி ஒரு கதை. ஒருவர், ‘ஒரு பேயைக் கடத்தி விட முடியுமா?’ என கற்பனை செய்ய முடியாத ஒரு விசயம் தான் கதை. கடத்திவிட்டால் என்ன ஆகும் என்பதை யாராலும் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான், நான் இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.