32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா

Dinesh R சேலம் Published: 19/02/2014 2 நிமிட வாசிப்பு கட்டுரை
எழுத்து அளவு:

Director BharathiRaja

என் இனிய தமிழ்மக்களே!

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை.

22 வருட அனைத்துலக தமிழர்களின் போராட்டத்திற்குப் பின் விடுதலை.

செங்கொடியின் வீரமரணத்திற்குப் பின் விடுதலை.

இந்த 22 வருடங்களாய் என்னென்னவோ பார்த்தாயிற்று. ராமேஸ்வரத்து மீனவர்களின் இடர், இறுதியுத்தம் எல்லாவற்றிற்கும் மேலாய் தாங்கொணா வலியையும் வேதனையையும் தமிழர் வாழ்வில் வீசிப்போயிற்று.

இத்தனை பேரிடரை சமன் செய்யாவிட்டாலும் எம் தமிழ் வாழ்வும் தமிழ்மனமும் இந்த 2014 பிப்ரவரியில் முதன்முறையாக தன்னிறைவு அடைந்தது. பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்து என்ற தீர்ப்பின் மூலமாக இத்தனை பெரிய இந்திய கண்டத்தில் தமிழர்கள் முன்வைக்கும் நீதியை நம்புவதற்கும், கோரும் கருணையைப் புரிந்து கொள்வதற்கும் ஜனாதிபதிகளாலேயே முடியாதபோது தமிழர்களின் உயிர்வலியை உணர்ந்த நீதியரசர் சதாசிவம் மற்றும் அவர் குழுவினர் இந்நாட்டின் மீதும் நீதியின் மீதும் எங்களுக்கு மீண்டும் நம்பிக்கைத் தந்துள்ளனர். இந்த நேரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனைத்துலக தமிழர்களும் கண்ணீரால் நன்றி சொல்ல கடமைப்படுகிறோம்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவருக்கும் குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தண்டனை நிறைவேறும் தருவாயில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து தங்கள் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தீர்கள்.

இருந்தும் தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு மூவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நேரத்தில் நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் நேற்று தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யும் பொறுப்பினை தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்து மகிழ்ச்சி கொண்டாடும் இவ்வேளையில், மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவருக்கும் தாய்மையுள்ளத்தோடு ஒரே நாளில் உங்களுடைய ஒற்றை வார்த்தையில் வாழ்க்கை கொடுத்தது மட்டுமில்லாமல் 23 ஆண்டுகளை சிறைச்சாலையிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து, வாழ்க்கையே கேள்விக்குறியாய் நின்று கொண்டிருந்த சகோதரி நளினி, ராபர்ட் பயஸ், ஜே.குமார், ரவிசந்திரன் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டு, உலகத்தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்துள்ளீர்கள். இந்த நாள் பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்படவேண்டிய மகத்தான நாள்! தமிழர்களின் வரலாற்று சுவட்டில் மறக்க முடியாத நாள்.

மேலும், ‘மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் இந்திய அரசியல் நிர்ணய சட்டப்பிரிவு 432-ஐப் பயன்படுத்தி உடனே விடுதலை செய்வேன்’ என மரண அடி கொடுத்து மாநில சுயாட்சியை நிலைநிறுத்தியது உங்களால் மட்டும்தான் முடியும். நாங்கள் விதைத்தோம். தங்கள் ஆட்சியில் துளிர் விட்டுள்ளது!

மலரும் நம்பிக்கையோடு இருக்கின்றோம்!
மனமார்ந்த நன்றி

Bharathi Raja

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.