32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

Dinesh R சேலம் Published: 24/06/2015 3 நிமிட வாசிப்பு Updated: 20/01/2016 சினிமா
எழுத்து அளவு:

மாயலோகத்தில்..
வடுவூர் துரைசாமி ஐயங்கார்

1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை. கதாகாலட்சேபம் மாதிரி பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான் அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அம்மாதிரியான சூழலில் 1935இல் ‘மேனகா’ என்றொரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகாலப் படம். சமூகப் படம். டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள். இயக்குநர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த ராஜா சாண்டோ. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இப்படத்தின் மூலமாகத் திரை உலகில் பிரவேசித்தார்.

இந்தப் படத்தின் கதை வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல். வடுவூர் துரைசாமி ஐயங்கார் அப்போது மிகவும் பிரபலமாக விளங்கிய துப்பறியும் நாவல்கள் எழுதும் எழுத்தாளர். எனவே சினிமாவில் நுழைந்த ஆரம்பகால எழுத்தாளராக வடுவூராரைச் சொல்லலாம்.

மேனகா (1935) திரைப்படத்தைத் தொடர்ந்து 1937இல் மைனர் ராஜாமணி, மற்றும் பாலாமணி அல்லது பக்காத் திருடன் என்ற இவரது கதைகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. 1941இல் இவரது கதையொன்று திருவள்ளுவர் என்கிற பெயரில் படமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. சில கால இடைவெளிகக்குப் பின் 1946இல் ‘வித்யாபதி’ என்கிற இவரது நாவல் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.

இவரது துப்பறியும் கதைகளுக்கு மவுசு குறையாத காரணத்தால் 1950இல் இவரது பிரபலமான நாவல் ‘திகம்பர சாமியார்’ மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை ஈட்டியது.

‘ஊசிப்பட்டாசே, வேடிக்கையாய் தீ வைத்தாலே வெடி டமார் டமார்’ என்கிற இப்படப்பாடல் அப்போதெல்லாம் பட்டி தொட்டிகள் எங்கும் முழக்கமிட்டிருக்கின்றன. அதேபோல் இதே படத்தில் மிகவும் வெற்றி பெற்ற இன்னுமொரு பாடல் ‘பாருடப்பா, பாருடப்பா, பாருடப்பா பார், கல்ல உடைடப்பா உடைடப்பா உடை டப்பா நீ’ என்கிற பாடல், இந்தப் பாட்டின் மெட்டு ஒரு பிரபலமான இந்திப் பாடலின் அப்பட்டமான தழுவல் என்றாலும், இப்பாடல் தமிழ்நாட்டில் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்டது!

எம்.என்.நம்பியார் இப்படத்தில் துப்பறியும் சிங்கமாக நடித்திருப்பார். குடுகுடுப்பைக்காரன், சாமியார் மற்றும் ஏராளமான வேஷங்களில் நடித்து பிரமிப்பூட்டுவார். நம்பியாருக்கு மிகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்த ஆரம்ப காலப்படங்களில் இது மிகவும் முக்கியமான திரைப்படம்.

டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பின் உச்சத்திலிருந்தபோதே படத்தயாரிப்பிலும் இறங்கினார். ‘சின்னதுரை’ என்றொரு படம் இவரது தயாரிப்பில் 1952இல் வெளிவந்தது. இதில் மகாலிங்கத்தின் ஜோடி எஸ் வரலட்சுமி. இதன் கதை வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ‘இருமன மோகினிகள்’ என்கிற நாவல். இவரது மற்றொரு நாவலைத்தழுவி 1959இல் வெளிவந்த படம் சுமங்கலி. பாலாஜி கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெறவில்லை.

1935இல் தயாரிக்கப்பட்டு வெளிவந்த ‘மேனகா’ கதையை மறுபடியும் 1959இல் தயாரித்தார்கள். இப்படத்தில் கே.ஆர் ராமசாமி, லலிதா ஜோடி, இப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. வடுவூர் துரை சாமி ஐயங்கார் சில காலம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனுக்கள் எழுதிக் கொடுத்து பிழைத்து வந்தார் என்கிற செய்தியும் உண்டு. கடைசி வரை சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து அங்கேயே மறைந்தார் வடுவூரார்.

இவரது சில நாவல்கள் அக்காலத்தில் அல்லயன்ஸ் கம்பெனியார் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். இப்பொழுது அவைகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை. தேவைப்படுவோர் முயற்சித்துப்பார்க்கலாம், அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும்.

அல்லயன்ஸ் வெளியீடாக வந்த வடுவூராரின் புதினங்கள்:

1) சௌந்திர கோகிலம்
2) மேனகா
3) பூர்ண சந்திரோதயம்
4) மதன கல்யாணி
5) திவான் லொட படசிங் பகதூர்
6) இருமன மோகினிகள்
7) துரை கண்ணம்மாள்
8) வசந்த மல்லிகா
9) நங்கை மடவன்னம்
10) வித்யா சாகரம்
11) டாக்டர் சோணாசலம் அல்லது பிள்ளையார் குரங்காய் போனது
12) விலாசவதி
13) லட்சுமி காந்தம்
14) திகம்பர சாமியார்
15) சிங்கார சூர்யோதயம்
16) மிஸ்டர் பூச்சாண்டி எம்மே
17) மிஸஸ் லைலா மோகினி அல்லது மயன் காலம்
18) வித்யாபதி

– கிருஷ்ணன் வெங்கடாசலம்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.