Shadow

அருவி சுருங்கிய புள்ளி

Condemning Aruvi movie

அருவி படம் அற்புதமானதொரு உணர்வைத் தந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கும் சுதந்திரம் ஓர் இயக்குநருக்கு முழுமையாக உண்டு.

ஆனால், அதன் ஊடாக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் விதைக்கும் விஷமத்தனம் ஆபத்தானது. அனைத்துமே கற்பனை என்ற டிஸ்க்ளெயிமர் போட்டு விட்டால், ஜீ டிவியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி தான் டார்கெட் என்ற உண்மையை மறைக்க இயலாது. ஒரு நிகழ்ச்சியைக் கலாய்ப்பது என்பது வேறு, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரைக் கேரக்டர் அசாஸினேட் செய்வது என்பது வேறு. ‘Bee டிவியின் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ நிகழ்ச்சித் தொகுப்பாளரான ‘ஷோபா பார்த்தசாரதி’ முந்தானையை நழுவ விடுவதாகக் காட்சி அமைத்திருப்பார். அது முற்றிலும் கற்பனை தான் என இயக்குநர் சொன்னாலும், இனி ஆகப் போவது ஒன்றுமில்லை. சமூகப் பிரக்ஞையுடைய படமெனப் போற்றப்படும் படைப்பில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எனும் ஒரு தனி நபரை மிக வக்கிரமாகச் சித்தரித்துள்ளதை என்னவென்று சொல்ல?

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் ஓர் எபிசோட் கூட முழுமையாகப் பார்த்தது இல்லை. ‘தாங்கள் சேவை செய்கிறோம்’ என லக்ஷ்மி ஆவேசப்பட்ட பொழுதும் ஒரு சின்ன புன்னகை மின்னி மறைந்தது. ஆனால், இந்தப் படம் அந்நிகழ்ச்சியைச் சகட்டுமேனிக்குக் கிண்டல் செய்திருக்கும் பட்சத்திலும், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மீது மரியாதையைத்தான் ஏற்படுத்தியுள்ளது. திருநங்கை எமிலியோ, அல்லது வீட்டினரால் புறக்கணிக்கப்பட்ட அருவியோ, தாங்கள் பாதிக்கப்பட்டோம் என்று சொல்வதற்கென ஓர் இடம் இச்சமூகத்தில் வேறு ஏதேனும் உள்ளதா என யோசித்துப் பார்க்கிறேன். அருவியாலோ, எமிலியாலோ காவல் நிலையத்துக்குச் சென்றிருக்க முடியுமா??

‘சொல்வதெல்லாம் உண்மை’ என்பது அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்துக் கல்லா கட்டும் நிகழ்ச்சி என்றார் நண்பர். ஆம், அருவி படம் பார்க்காதிருந்தால் அப்படித்தான் என் பொதுப்புத்தியும் அந்நிகழ்ச்சி பற்றி. ஏற்றிருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அந்நிகழ்ச்சி பேசுவதற்கு ஒரு பிளாட்ஃபார்ம் வழங்கியிருப்பின்/வழங்குமாயின் – நிச்சயம் அது கேலிக்குரிய விஷயமில்லை. அந்தச் சேனலோ, நிகழ்ச்சியோ தனக்கே உரிய வணிக, பொருளாதாரப் பசியோடு தனி நபரின் விஷயங்களை அணுகினாலும், பெற்ற தந்தை அருவிக்கு வழங்காத வாய்ப்பை, ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ தானே வழங்கியுள்ளது?

Director Arun Prabuஅருவியின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், ரேப்பிஸ்ட்களுக்கும் மென் பக்கம் உண்டு எனக் காட்டியிருப்பார். ஆனால், ஷோபா பார்த்தசாரதியைக் கேலிக்குரியவராகவே தொடக்கம் முதல் சித்தரித்திருப்பார். புடவை டிசைனில் கவனம், முந்தானையை நழுவ விட்டு குறை சொல்வது, 4 மணி நேர வேலைக்கு 30000/- சம்பளம் என இயக்குநரால் கேலி செய்யப்படுவது (இயக்குநர் எதற்காகப் படம் பண்ணுகிறார்?), கேமிரா “ரோலிங்”கில் இருக்கும் பொழுது பிராமணரான ஹிப்னோ-தெரபிஸ்ட்க்கு எழுந்து வணக்கம் சொல்லுதல் எனப் பார்த்துப் பார்த்து கேலி செய்துள்ளனர். இதில் அசிஸ்டென்ட் இயக்குநர் முன் முந்தானையை நழுவ விடுவது கேலியில் வருகிறதா, கேரக்டர் அசாசினேஷனில் வருகிறதா என்பதை உங்களின் புரிதலுக்கே விட்டுவிடுகிறேன்.

ஒரு காட்சி பார்வையாளனை எப்படிச் சென்றடையும் என்ற அதீத துல்லியத்தை இயக்குநர் கணக்கிட்டிருப்பதைப் படம் நெடுகேவும் காண இயலும். ஷோபா பார்த்தசாரதி என்ற கதாபாத்திரத்தை எங்கு, எப்படிக் கிண்டல் செய்தால் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தெளிவு இயக்குநருக்கு இருந்தும், மனமறிந்தே செய்துள்ளார். அருவிக்காகப் பார்வையாளர்கள் இரக்கப்படவேண்டும், ஆனால் ஷோபா பார்த்தசாரதி, அதாவது லக்ஷ்மி ராமகிருஷ்ணன், இளக்காரமாக அசூயையுடன் பார்க்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார். அருவி ஒரு நீண்ட வசனத்தில், ‘பணமிருந்தால் யாரை வேண்டுமானாலும் அடி’ எனச் சொல்வார். ஆனால், துப்பாக்கி முனையில் அருவி நடத்தும் விளையாட்டில், கணவனாக நடிக்கும் கணவான் ஷோபா பார்த்தசாரதியை அடித்துக் கொண்டே இருப்பார். “மனைவியை அடிக்காதே!” எனச் சொல்லமாட்டார் தொகுப்பாளராக நடிக்கும் அருவி. சமூகம் பற்றி மூச்சு விடாமல் வசனம் பேசும் அருவிக்கு அந்தக் குறைந்தபட்சம் இங்கிதமாவது இருந்திருக்கவேண்டும். ஆனால், அதெல்லாம் நகைச்சுவைக் காட்சி என்ற தெளிவும் தீர்மானமும் இயக்குநருக்கு இருந்தது திண்ணம். இதுவா நகைச்சுவை? 

அச்’சொல்வதெல்லாம் சத்தியம்’ அத்தியாயம் முழுவதும் படத்தில் கலகலப்பாக ரசிக்கும்படியாக உள்ளது. ஏனெனில் அதன் டீட்டெயிலிங் பிரமிக்க வைக்கிறது. இயக்குநர் ஆய்ந்து ஆராய்ந்து அறிந்து உண்மையைத்தான் காட்டியிருக்கிறார் என்று எந்தக் கேள்விகளும் இன்றி மனம் ஏற்கிறது. பார்வையாளர்கள் மனதில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பற்றிய பிம்பம் மலிவானதாய்ப் பதியும். அது இயக்குநரின் புத்திசாலித்தனமான திட்டமிடுதல் என்பது அருவி படத்தின் மேக்கிங் செய்நேர்த்தி கொண்டு யூகிக்கலாம்.

அந்நிகழ்ச்சியைத் தொகுப்பது ஏதோ பெருங்குற்றம் போலவும், ‘இனி நான் வேலைக்குப் போக மாட்டேன்’ என ஷோபா பாரத்தசாரதி மனம் மாறுவதாகக் காட்டியிருப்பார் இயக்குநர்.

Lakshmi Ramakrishnan

படத்தின் ஒரு காட்சியில், ‘என்ன படம் எடுக்கிறாங்க?’ என அருவிக்குக் கோபம் எழும். அது உண்மை என்பதால் தான் அந்த வசனம் கைத்தட்டல்களைப் பெற்றது. ஆனால் எதிலும் சில விதிவிலக்குகள் உண்டு அல்லவா? லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய படங்கள் அவ்வகையைச் சேர்ந்தது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ போன்று மார்க்கெட்டிங் செய்திருந்தால், ஒருவேளை எமிலியோ, அருவியோ லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஆரோகணம், அம்மணி போன்ற படங்களைப் பார்த்திருக்கக்கூடும். அருவி போல் ரசனை மிகு மாண்டேஜ்களாலும், ஒரு நிகழ்ச்சியைக் கலாய்த்து ஒப்பேத்தாமலும், ஆரோகணம் ஒரு பெண்ணின் மனப்பிறழ்வைத் துல்லியமாகப் பதிந்திருக்கும். புடவையிலும், ஸ்டேட்டஸிலும் மட்டுமே அக்கறையுள்ளவராகச் சித்தரிக்கப்பட்டவர், அம்மணி என்ற படத்தின் கதையை ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு வந்த ஒரு தன்னம்பிக்கை பாட்டியால் இன்ஸ்பையராகி எடுத்திருப்பார். ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் ஆதிக்க சாதியின் ஆணவப் போக்கை வெளிச்சமிட்டிருப்பார். ஆக, தொகுப்பாளர் பற்றிய இயக்குநரின் மேம்போக்கான டீட்டெயிலிங்கில் உண்மையில்லை என்றாகிறது. அருணை விடவும் சமூகப் பிரக்ஞையுள்ள, பொறுப்புணர்வுள்ள படைப்பாளியான லக்ஷ்மி ராமகிருஷ்ணனைத் தரக்குறைவாகச் சித்தரித்திருப்பதற்கு “அருவி” படக்குழுவினதுக்குக் கடும் கண்டனங்கள். ஆரோக்கியமான படைப்பான அருவியில், அதுவும் ஒரு பெண்ணை மையப் பாத்திரமாய் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்தில், சக பெண்ணுக்கு எதிரான இத்தகைய சாதுரியமான சாமர்த்தியமான விஷமத்தனம் ரொம்பவே அருவருக்கத்தக்கது.

நன்றி: இம்சையரசி RJ Ophelia

– தினேஷ் ராம்