
நார்வே நாட்டில் வசிக்கும் டி.எஸ்.ஜெயராஜன், தலைவாசல் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சாய்பாபா பற்றிய திரைப்படமான ‘அபூர்வ மகான்’ படத்தில் இரண்டு பாடல்களைப் பாடி, பின்னணிப் பாடகராக அறிமுகமானார். தஷி இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும் படமும் பரவலான கவனத்தை ஈர்த்தது. டி.எஸ்.ஜெயராஜின் குரலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, தஷி இசையமைப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ஹார்ட் பீட், ‘மாய வீடு’ ஆகிய படங்களிலும் பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜனுக்கு, மேலும் பல படங்களில் பாட வாய்ப்புகள் வந்துள்ளது.
திரைப்படங்களில் பாடுவதோடு, பல இசை ஆல்பங்களில் பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜன், ஐயப்பன், சாய் பாபா, வள்ளலார் ஆகியோர் பற்றிய 50 க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களைப் பாடித் தயாரித்துள்ளார். பக்திப் பாடல்கள் பாடுவதைத் தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக வைத்திருக்கும் இவர், பக்தி பாடல்களை எழுதிப் பாடுவதோடு, தனது சொந்த செலவிலேயே இசை ஆல்பங்களாகத் தயாரித்து, அதைப் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
இப்படி பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு இலவசமாகப் பக்திப் பாடல்கள் ஆல்பத்தை வழங்கி வரும் டி.எஸ்.ஜெயராஜனின் தொண்டினைக் கெளரவிக்கும் வகையில், இண்டர்நேஷனல் க்ளோபல் பீஸ் யுனிவர்சிட்டி (International Global Peace University) கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது சாதனைகளைப் பாடல்களாகப் பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜன், அப்பாடல்களை சிடி-யாகத் தனது சொந்த செலவில் தயாரித்துள்ளார். எப்போதும் போல இந்தப் பாடல்கள் சிடி-யையும் அவர் நார்வே மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.