Shadow

பிரம்மா.காம் விமர்சனம்

Brahma.com movie review

பிரம்மா என்பது நேரடியாகப் படைக்கும் கடவுளையும், டாட் காம் என்பது தற்கால டிஜிட்டல் உலகத்தைக் குறிக்க உதவும் குறியீட்டுச் சொல்லாகவும் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாமம் போட்ட என்.டி.ஆரில் இருந்து படம் தொடங்குகிறது. ஆனால், படத்தில் லாஜிக் இல்லா மேஜிக்கைச் செய்வது சிவன் கோயிலில் தனி சன்னிதி அமையப் பெற்ற கடவுள் பிரம்மா தான். சிவன் அவரது தலையைக் கிள்ளி நான்முகனாக மாற்றிய பின், ‘நமக்கெதுக்கு வம்பு?’ எனப் புராணங்களிலேயே ஓரமாகத்தான் தள்ளி இருப்பார். ஆனால் இப்படத்தில் கலக்கலாய் திருவிளையாடல் புரிகிறார்.

காமேஸ்வரனுக்கு தான் ராமேஸ்வரனை விட எல்லா விதத்திலும் பெஸ்ட் என்பது எண்ணம். ஆனால், அனைவரையும் படைத்த பிரம்மன் சிலரிடம் ஓர வஞ்சனையாக நடந்து கொள்வதாகக் காமேஸ்வரன் கருத, பிரம்மன் காமேஸ்வரனின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்கிறார். பின் காமேஸ்வரனின் வாழ்க்கை என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

ராமேஷ்வரனாக சித்தார்த் விபின் நடித்துள்ளார். படத்தின் வில்லன் போல்! ஆனால் படம் ஃபேண்டஸி காமெடி ஜான்ரா ஆகும். விளையாட்டாய்ப் படத்திற்கும் இசையையும் இவரே அமைத்துள்ளார். படத்தின் தொடக்கமே ஒரு கனவுப்பாடல் தான். க்ரிப்பிங்கான திரைக்கதை, தொடக்கத்தில் இருந்தே மிஸ்ஸிங். ஆனால், படத்தின் மையக்கரு அழகான ஃபேண்டஸி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எழுதி இயக்கியுள்ள P.S.விஜயகுமார் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கிறது என்று காட்டப்பட்டாலும், அப்படி ஆவதில்லை. டாஸ் போடும் காயின் பூவாக இருந்தால் ஒரு வாழ்க்கை, தலையாக விழுந்தால் ஒரு வாழ்க்கை என்றில்லாமல், மிகத் தட்டையாக ராமேஷ்வரனின் வாழ்க்கை காமேஷ்வரனுக்கும், காமேஷ்வரனின் வாழ்க்கை ராமேஷ்வரனுக்கு ஸ்வாப் ஆகி விடுகிறாது. ராமேஷ்வரனாக நகுல் நடித்துள்ளார். ‘மொக்க பசங்களுக்கு செம ஃபிகர் கொடுக்கிற கடவுளே!’ என அங்கலாய்க்கும் சாதாரண இளைஞனாக வருகிறார். முதலில் பணமும் வசதியும், பின் காதல் தான் பிரதானம் என நம்புபவன். இடையில் தனது க்ரியேட்டிவிட்டி என்ற பகுதி பற்றிலாம் பெரிதாகக் கவலைப்படாமல் ஒற்றைச் சிந்தனையோடு இருக்கிறான் காமேஷ்வரன். நகுலின் அம்மாவாகக் கெளசல்யா நடித்துள்ளார். நாயகி ஆஷ்னா சவேரிக்குச் சிறந்த விளம்பரப்பட இயக்குநரென வாட்ச்சைப் பரிசாக வாங்குபவரைக் காதலிக்கும் வேலை. திறமையானவருக்குத்தான் அது கிடைக்குமென்ற பட்சத்தில். இத்தார்த் விபினும் திறமையானவர் என நிறுவி விடுகிறார் இயக்குநர். பின் ஏன் இந்த நகுல் சும்மா சும்மா சித்தார்த்தைக் குறை சொல்கிறார் என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

புளி வியாபாரியாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்துள்ளார். அவரது மகளாக வரும் பாத்திரத்தை உருவக் கேலி செய்து நகைச்சுவையெனப் படைத்துள்ளனர். இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி என்ற அயற்சி மேலோங்குகிறது. நக்லின் நண்பராக வரும் வழக்கமான ஜெகனும், அவரது காதலியும் தான் கொஞ்சமாவது படத்தில் ஆசுவாசம் அளிக்கின்றனர்.