Shadow

ஆக்கம் விமர்சனம்

aakkam-movie-review

‘எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!’

என்ற கண்ணதாசனின் இந்த வரிகள் தான் படம் சொல்லும் கருத்து.

ஆக்கம் என்றால் முன்னேற்றம், வளர்ச்சி எனப் பொருள் கொள்ளலாம். அது, ஒரே சூழலில் வளர்ந்த இருவருக்கு எப்படி அமைகிறது என்பதோடு படம் முடிகிறது.

பலமுறை பார்த்துப் பழகிப் புளித்துப் போன கதை. வடச்சென்னையில் பிறந்து வளரும் ஒருவனுக்குச் சென்னையையே கலக்கும் ரெளடி/தாதா ஆகவேண்டும் என்று ஆசை. 

படத்தின் ஒளிப்பதிவும், சில நுணக்கமான டீட்டெயிலிங்கும் அசர வைக்கின்றன. ஒரு மரண ஊர்வலத்தில் நாயகன் ஆடிக் கொண்டு வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்கேயே G.A.சிவசுந்தரின் ஒளிப்பதிவு உங்களை ஈர்க்கத் தொடங்கிவிடும். அந்த ஊர்வலம், தொழுகை நேரத்தில் மசூதியைக் கடக்கும் பொழுது அமைதி காக்கின்றது. 

சொக்குவாக சத்தீஷ் ராவண். அன்றாடம் நாம் காணும் எண்ணற்றவர்களில் ஒருவன் சொக்கு. அவன் முகம் சட்டென மனதில் பதியாது. சாதாரண கொள்ளைகளில் ஈடுபடும் வரை ஒன்றும் தெரியவில்லை. காரணமே இன்றி, ஒருவனின் கழுத்தை அறுத்துப் போடும் பொழுதுதான் படம் ஏன் ‘A’ சான்றிதழ் பெற்றதென உணர முடிகிறது.

இயக்குநர் வேலுதாஸ் ஞானசம்பந்தத்திற்கு இது முதல் படம். கண்டிப்பாகக் கவனிக்கத்தக்க படம் தான் என்பதில் ஐயமில்லை என்ற பொழுதிலும், கோர்வையில்லா அசுவாரசியமான திரைக்கதை மிகப் பெரும் பலவீனம். ‘சங்கரா மீன்’ என நாயகனால் அழைக்கப்படும் ஜெயாவாக டெல்னா டேவிஸ் நடித்துள்ளார். நாயகனின் மீது இவருக்கு எழும் காதலைக் கடைசி ஃப்ரேம் வரையிலுமே கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. நாயகனைப் பாடுபொருளாகக் கொண்ட படமென்பதால், வழக்கம் போல் நாயகிக்கான முக்கியத்துவம் ஊறுகாய் அளவுக்கே! பலநாள் கழித்துத் திரையில் தோன்றும் ரஞ்சித் கூட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டுப் பொசுக்கென்று ஊரை விட்டுக் கிளம்பி விடுவது துரதிர்ஷ்டம். எதார்த்த பாணியில் கதை சொல்ல முனைவது சரி தான் என்றாலும், சுவாரசியத்தைக் காவு கொடுத்து விட்டுத்தான் அதை அடையவேண்டும் என்பதில்லை.

நாயகனின் நண்பன் ஒருவன் திருநங்கையாக மாறி விடுகிறான். ‘அவளை’ எந்தச் சங்கடமும் இன்றி ஏற்றுக் கொள்கின்றனர் அந்நண்பர்கள். இத்தகைய நுண் சித்தரிப்புகளால், இயக்குநரின் ஆக்கம் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.