மாஃபியாகளிடம் ரியல் எஸ்டேட் சிக்கிக் கொண்டது என்பதன் குறியீடு தான் படத்தின் தலைப்பு.
ஸ்டீஃபன் எனும் சிவில் இன்ஜினியர் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார். அவரது ஆவி அந்த பில்டிங்கில் சுற்றுவதாக பீதி பரவ, அதை விசாரிக்க எஸ்.ஐ. கர்ணா நியமிக்கப்படுகிறார். ஸ்டீஃபன் கொலையிலுள்ள மர்மமென்ன என்பதுதான் படத்தின் கதை.
படம் நேரடியாகக் கதைக்குச் செல்லாமல், கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதற்குப் போதுமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ரஹ்மான், நிகில் மோகன், தலைவாசல் விஜய், ஸ்வாதி தீக்ஷித், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, ஆகாஷ், இனியா, மனோபாலா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தின் அறிமுகம் முடிந்த பின்னும், திரைக்கதை சூடு பிடிக்காதது படத்தின் மிகப் பெரும் குறை. அதை விட கொடுமையான சங்கதி, ரஹ்மான் இரண்டே காட்சிகளில் தலைகாட்டுவதோடு மாயமாகி விடுகிறார். நாயகி ஸ்வாதி தீக்ஷித்தோ மூன்றே மூன்று காட்சியிலும், ஒரு பாட்டிலுமே மட்டுமே வருகிறார். ரஹ்மானும் ஸ்வாதி தீக்ஷித்தும் இல்லையென்றாலும் படத்தின் கதைக்கு ஒரு பங்கமும் விளைந்திருக்காது.
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். த்ரில்லர் போல் தொடங்கி மெல்ல அமானுஷ்யத்திற்கு மாறுகிறது. அதைத் தக்க வைக்க திரைக்கதை உதவாதது குறை. ஃபகத் எனும் ரியல் எஸ்டேட் மாஃபியாகவாக, ‘வாம்ம்மா மின்னல்’ டைப் வில்லனாக பிரதாப் போத்தன் மின்னி மறைகிறார். ஹீரோயினுக்கும் வில்லனுக்கும் பாகுபாடு பார்க்காத இயக்குநரை வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்தப் படத்தின் தலைப்பையும் கதையையும் நியாயப்படுத்த வேண்டிய ஒரு பிரதான கதாபாத்திரத்தையே பாஸிங் க்ளெடாகக் கடந்துள்ளார் ஜெய்சன்.
ஸ்டீஃபனாக தயா ஃபெலிக்ஸ் நடித்துள்ளார். ஆவியாகத் திரியும் அவரது நோக்கமென்ன, என்ன சாதிக்க நினைக்கிறார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. அவர் நல்லவரா கெட்டவரா என்ற குழப்பம் தீரும் முன் இனியாவுடன் டூயட் பாடுகிறார். படம் முழுக வருவதால், இனியாவைப் படத்தின் கதாநாயகியாகக் கொள்ளலாம். வழக்கை முடிக்க படம் முழுவதும் அல்லாடும் எஸ்.ஐ. கர்ணாவாக நடித்திருக்கும் நிகில் மோகனை நாயகனாகக் கொள்ளலாம். இது அவரது முதற்படமென்பதைக் கட்டியம் கூறாமலே உணரமுடியும்.
பயந்த சுபாவம் கொண்ட டி.எஸ்.பி.யாக தலைவாசல் விஜய் மாறுபட்ட நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். படத்தில் வரும் ஒரே சீரியசான நடிகராக இவர் மட்டுமே. மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா ஆகியோரின் நகைச்சுவை படத்திற்கு உதவவில்லை. இனியாவைக் காதலிக்கும் இம்மானுவேலாக ஆகாஷ் நடித்துள்ளார். அவரது அறிமுகத்தின் பொழுது, இது தெலுங்கு டப்பிங் படமோ என்ற சந்தேகத்தை எழுப்பி விடுகிறார்.
மாஃபியாக்களால் சதுர அடியின் விலை எப்படி தாறுமாறாய் உயர்ந்தது என்றோ, சாமானிய மக்கள் அதனால் எப்படிப் பாதிக்கப்படுகிறார்களோ என்றோ கதை செல்லவில்லை. அப்படிச் சென்றால், படம் பார்ப்பவர்களுக்குப் பொருத்திப் பார்க்க ஏதுவாய் இருக்கும். தன் லட்சிய கட்டிடத்தைக் கட்டும் ஒரு சிவில் இன்ஜினியரின் கனவுகள் எப்படித் தகர்ந்தது என்பதை அழுத்தமின்றிப் பதிந்துள்ளார் இயக்குநர் ஜெய்சன்.