Shadow

ஆலம்பனா – குழந்தைகளை மகிழ்விக்க வரும் பூதம்

aalambana---kids-movie

குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வித்தியாசமான படங்களுக்குத் தமிழ்த் திரையுலகு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால், அவர்களைக் கவர்வது மிகவும் கடினம். இந்தக் கவரும் யுக்தியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே செய்திருக்கிறது ‘ஆலம்பனா’ படக்குழு. இந்தப் படத்தை  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

இது ஒரு ஃபேண்டஸி படம் என்பதை மட்டுமே தகவலாகப் படக்குழு தெரிவித்தது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் மூலமாகக் குழந்தைகள் முதல் முதியோர் வரை குஷிப்படுத்தும் பூதத்தை மையப்படுத்தி ‘ஆலம்பனா’ உருவாகியுள்ளது. இப்படத்தில் பூதமாக நடித்து அனைவரது மனதைக் கொள்ளைக் கொள்ளவுள்ளார் முனீஸ்காந்த். நாயகன் வைபவ் மற்றும் முனீஸ்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து பார்வையாளர்களைக் கிறங்கடிக்கவுள்ளது.

தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு கதை அம்சத்தில் ‘ஆலம்பனா’ உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய  படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர் துபான் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

இயக்குநர் பாரி கே.விஜய் பேசிய போது, “படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு என்னை நெகிழச் செய்கிறது. இதற்காகத் தான் இவ்வளவு கடுமையாக உழைத்தோம். இந்தக் கதையையும் என்னையும் நம்பிப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள ராஜேஷ் சார் மற்றும் சந்துரு சார் ஆகியோருக்கு முதலில் நன்றி.

போஸ்டரிலேயே இது எந்த மாதிரியான கதைக்களம் என்பதைத் தெரிவித்துள்ளோம். பூதத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். நாயகனாக வைபவ் சாரும், பூதமாக முனீஸ்காந்த் சாரும் நடித்துள்ளனர். அவர்களுக்கு இடையேயான காட்சிகள் கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

இந்தப் படத்தின் கதைப்படி சில காட்சிகளைப் படமாக்குவது கடினம். அதைத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் படமாக்கி இருக்கிறோம். இப்போது சொல்வதைவிட, படமாகப் பார்க்கும்போது அதை உணர்வீர்கள். ஒரு சண்டைக் காட்சியை வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளோம்.

அதே போல் 72 மணி நேரம் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றது. இடையே ஒரு சின்ன இடைவெளி மட்டும் விட்டு, தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு, ‘புதுமுக இயக்குநர் தானே!’ என்று கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் ஒத்துழைப்புக் கொடுத்த வைபவ் சார், முனீஸ்காந்த் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் மிகப் பெரிய நன்றி. இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஹிப் -ஹாப் ஆதி சார் பின்னணி இசையமைக்கவுள்ளார். கிராபிக்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில நாட்களில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளோம். அதில் பல்வேறு ஆச்சரியமூட்டும் அறிவிப்புகள் இருக்கும். கண்டிப்பாக ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் எப்படி உங்களைக் கவர்ந்ததோ, அதே போல் படத்தின் டீஸர் தொடங்கி அனைத்து விஷயங்களும் உங்களைக் கவரும். அனைத்துக்கும் உங்களின் ஆதரவு வேண்டும்” என்று தெரிவித்தார் இயக்குநர் பாரி கே.விஜய்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளன. வைபவ் நடித்து வெளியான படங்களில், இது தான் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளராக ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பீட்டர் ஹெய்ன்,  கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவுற்று, விரைவில் திரையரங்குகளில் மக்களை மகிழ்விக்க ‘ஆலம்பனா’ தயாராகி வருகிறது.