இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனின் ஐந்தாவது படம் டெடி. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்: டிக்: டிக் என அவரது அனைத்துப் படங்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வித்தியாசமான கரு கொண்ட படங்கள். டெடியும் அப்படியே!
OBE – Out of Body Experience. உடலுக்கு வெளியே நிகழும் அனுபவத்தை அழகான புனைவுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார் சக்தி செளந்தர் ராஜன். அவ்வனுபவத்தில் உடலை விட்டு உயிர் வெளியேறி விடும். அவ்வுயிருக்கு ஏற்படும் அனுபவங்களையே OBE என அழைப்பார்கள். புனைவின் சுவாரசியத்திற்காக, கோமாவில் உள்ள ஸ்ரீயின் உயிர், டெடி எனும் கரடி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அதாவது ஸ்ரீயின் உயிர் ஒரே சமயம் அவரது உடலிலும் இழையோடுகிறது, கரடியின் உடலிலும் இருக்கிறது. மாயாஜாலம் போல! அது புனைவிற்கு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது.
அழகான சயிஷா, படத்தில் டெடியாக மட்டும் வலம் வருவது சற்றே வருத்தமான விஷயம். எனினும் டெடியின் க்யூட்டான கண்களும், அதன் காமிக்கலான உடற்மொழியும் ரசிக்க வைக்கின்றன. மனித உடலுறுப்புகளுக்காக நிகழும் கடத்தல் பற்றித் தமிழில் ஏற்கெனவே பல படங்கள் வந்திருந்தாலும், சக்தி செளந்தர் ராஜன் அந்தப் படங்களை ஞாபகப்படுத்தாத வண்ணம் திரைக்கதைக்கு மெனக்கெட்டுள்ளார். எனினும் விமானம் ஏறும் பொழுதே, அஸுபைஸான் (Azerbaijan) தூதரகத்து அதிகாரியின் நட்பு நாயகனுக்குக் கிடைப்பதெல்லாம், ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு மட்டுமே சாத்தியம்.
இமைக்கா நொடிகள் படத்தில், தன் பின்னணி குரல் மூலமாகவே மிரட்டியிருப்பார் மகிழ் திருமேனி. டெடியில், அறிமுகமாகியிருக்கும் அவரை மிரட்டலாக சக்தி செளந்தர் ராஜன் பயன்படுத்தியிருப்பார் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கதை முடிந்த பிறகும், மேலும் 10 நிமிஷம் இழுத்துள்ளதால் ஒரு நிறைவு கிடைக்காமல் போகிறது. நாயகனின் எல்லாப் பாடுகளும் எதற்காக? நாயகனின் வெற்றி பார்வையாளனின் வெற்றி. ஆனால் அந்த மேஜிக் தருணத்தைக் கலைத்து, சட்டென ‘ஒரு வருடத்திற்குப் பிறகு’ என்று வரும் எழுத்துகள் ஓர் ஏமாற்றத்தை அளிக்கின்றன. ஒரு வருடத்திற்குப் பிறகும், அது ஒரு மேஜிக்கல் தருணமாக இல்லாமல், ஏனோ தானோ என படம் முடிகிறது. ஆனால் அதை ஈடுகட்டும் விதத்தில் படத்தின் கடைசி ஃப்ரேமை, “ஷிவா…” என்ற டெடியின் குரலில் முடித்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்திற்குச் சான்று.