படத்தின் தலைப்பே கதையைச் சொல்கிறது. ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கிறது. அது யாருக்கு கிடைக்கிறது, எப்படி கிடைக்கிறது, அதை அந்தக் கதாபாத்திரத்தால் அனுபவிக்க முடிந்ததா, அந்தப் பொற்காசுகளை பயன்படுத்துவதில், சொந்தம் கொண்டாடுவதில் எத்தனை சவால்கள் வந்தன என்பதே இந்த ஆயிரம் பொற்காசுகளின் கதை.
பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் “ஆயிரம் பொற்காசுகள்” ஆகும். அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார். விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவர்களோடு ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார். விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்ததோடு ‘ஈரமான ரோஜாவே’, ‘அலெக்சாண்டர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கேயாரின் கே.ஆர்.இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சிறு கிராமத்தில் இக்கதை நடக்கிறது. படம் தொடங்கியதில் இருந்தே இப்படத்தில் சீரியஸாகவோ, சோகமாகவோ எதுவுமே நடந்துவிடாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக விளங்கிவிடுகிறது. இதனாலேயே காதல் காட்சிகளோ, எமோஷ்னல் காட்சிகளோ, திடுக்கிடும் திருப்பங்கள் அடங்கிய காட்சிகளோ எந்தக் காட்சியாக இருந்தாலும் ஒரே மீட்டரில் ஏறாமல் இறங்காமல் திரைக்கதை சென்று கொண்டே இருக்கிறது. ஆங்காங்கே ஜார்ஜ் மரியான் மற்றும் ஹலோ கந்தசாமி வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகிறது. ரசனையான, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘ப்ரெண்ட்ஸ்’ போன்ற காலகட்டங்களில் இருந்து ‘கலகலப்பு’ வரை பார்த்து வரும் சேஸிங் வகைமையின் வழமையான நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்திலும் இடம் பெறுகின்றன. ஆனால் அவை திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மட்டுமே வந்து நம்மை அசரடிக்கிறது.
அரசாங்கம் கொடுக்கின்ற இலவசங்களை வாங்கி வைத்துக் கொண்டு, ஊரில் இருக்கும் கோழி சேவல்களைத் திருட்டுத்தனமாக அடித்து உணவாக்கிக் கொண்டு உடலை வளர்க்கும் மாமன் (சரவணன்), அவனிடம் அடைக்கலம் தேடி வந்து ஒட்டிக் கொண்ட உதவாக்கரை மருமகன் (விதார்த்), எதிர்வீட்டில் இருந்து கொண்டே இந்த மாமன் மருமகனை வேவு பார்ப்பதை ஓவர் டைம் வொர்க்காகப் பார்த்து வரும் மீன் வியாபாரி (ஹலோ கந்தசாமி), கக்கூஸுக்கு குழி தோண்ட வந்த ஜார்ஜ் மரியன் கூட்டணி, வெள்ளிக் கொலுசை வெறுமனே வெளுத்துக் கொண்டிருக்கும் ஆசாரி, போக்கத்த போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பாரதி கண்ணன், பாம்பு பிடிக்க வரும் கதாபாத்திரம், பெட்டிக்கடை நடத்திக் கொண்டு சிகரெட் வாங்க வரும் நாயகனைப் பார்த்ததும் காதல்வயப்படுபவராக வரும் நாயகி அஞ்சலி நாயர் கதாபாத்திரம், நாயகன் மீது ஒருதலைக் காதலில் உருகும் செம்மலர் அன்னம் கதாபாத்திரம், ஊர் பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரம் இவர்களோடு திண்ணையில் படுத்துக் கிடக்கும் வட இந்திய பிச்சைக்கார கதாபாத்திரம் என படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள்.
இப்படி பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் நம்மால் எந்தக் கதாபாத்திரத்துடனும் ஒன்றிப் போகவோ, தொடர்ந்து செல்லவோ முடியாதபடி எல்லாக் கதாபாத்திரங்களும் நம்மிடமிருந்து தள்ளியே நிற்கின்றன. இதில் ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான் மற்றும் ஜார்ஜ் மரியானின் கூட்டாளி கதாபாத்திரம் போன்றவை நம்மைக் கொஞ்சம் ஈர்க்கின்றன. எந்தவொரு இலக்கும் இல்லாமல் சுற்றிக் கொண்டு திரியும் நாயகன் விதார்த் மேலோ அல்லது அவரது மாமன் சரவணன் மீதோ நமக்கு எந்தவொரு உணர்வுப் பிணைப்பும் கடைசி வரை ஏற்படவேயில்லை என்பது கதையின் பலவீனம். வட இந்திய பிச்சைக்காரக் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் திரைக்கதை ஓட்டத்திற்குப் பெரிதாக உதவாமல் வெறும் ஒட்டத்திற்கு மட்டுமே உதவி இருக்கிறது.
ஆயிரம் பொற்காசுகள் யாருக்கு அகப்பட்டாலும் ஓகே தான் என்கின்ற மனநிலையோடே நாம் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆங்காங்கே சிறுசிறு காமெடிகள் ஒர்க்-அவுட் ஆகி இருக்கிறது. அது போல் படத்தின் கடைசி இருபது நிமிடங்களிலும் காமெடி சிறப்பாக ஒர்க்-அவுட் ஆகி இருக்கிறது. மற்றபடி நாம் என்ன நடக்கும் என்று நினைக்கிறோமோ அது அது அப்படி அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் நடக்கிறது. அதைத் தவிர்த்து படத்தில் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லை.
அறிமுக இயக்குநர் ரவி முத்தையா, ஓர் அருமையான ஒன் லைனரைப் பிடித்திருக்கிறார். அந்த ஒன் லைனரை சுவாரசியப்படுத்துவது போல் சில காமெடி காட்சிக் கோர்வைகளையும் சிறப்பாக அமைத்திருக்கிறார். இவற்றோடு சேர்த்து கதை என்கின்ற வஸ்துவையும் ஏதாவது ஒரு இடத்தில் வலிய திணித்திருக்கலாம். ஒட்டு மொத்த ஊரையும் ஒரே ஸ்டேஷனுக்குள் அடைத்து பங்கு பிரிக்க முயலும் திட்டங்கள் எல்லாம் சிரிக்கும்படி இருந்தாலும் சிந்தனைக்கு இடையூறாகத் தான் இருக்கின்றன. மேலும் ஒட்டு மொத்த ஊரிலுள்ள கதாபாத்திரங்களுக்கும் ஆயிரம் பொற்காசுகளை அடைவதைத் தவிர்த்து வேறெதுவும் ஆக்கபூர்வமான தேவைகளே இல்லாதது போல் கதையும் கதைமாந்தரும் அதற்குப் பின்னே ஓடிக் கொண்டே இருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்படையச் செய்கிறது.
எளிய காமெடிக் காட்சிகளுக்கு கூட உங்களுக்கு இயல்பாக சிரிப்பு வரும் என்பவர்களுக்கும், கதை என்கின்ற வஸ்துவோ, திரைக்கதை என்கின்ற கருமாந்திரமோ எங்களுக்குத் தேவையில்லை; ஆங்காங்கே எங்களை குஷிப்படுத்தி சிரிக்க வைத்தாலே போதும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் “ஆயிரம் பொற்காசுகள்” அருமையான டைம்பாஸ் படமாக அமையும். ஆனாலும் உங்கள் பொறுமையை முதல்பாதி கொஞ்சம் சோதிக்கவே செய்யும்.
மொத்தத்தில் ஆயிரம் பொற்காசுகள் அரை மணி நேர காமெடி காட்சிகளுக்கு உத்திரவாதம் அளிப்பதைத் தவிர்த்து வியந்தோத வேறேதும் இல்லாத ஒற்றைப் பொற்காசு.
– இன்பராஜா ராஜலிங்கம்