
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், வினய், சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி. இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், “முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பெரியாரின் தொண்டன் என்பதால், அது தொடர்பான ஒரு விழாவிற்குக் கலந்து கொள்ள சென்றேன். அப்போது நான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் இயக்குநர், ‘சார் இதெல்லாம் ரிஸ்க். நீங்கள் மேடையேறி ஏதாவது பேச, அது படத்தின் பிசினசுக்கு நெகட்டிவா போய்விடும். அது மட்டுமல்ல உங்கள் மார்க்கெட்டே போய்விடும்’ என்றார். அப்போது அவரிடம், ‘மார்க்கெட் போனாலும் பரவாயில்லை. நான் பெரியாரின் தொண்டன் என்பதை ஒருபோதும் மறுக்க மாட்டேன். மறக்க மாட்டேன். நிச்சயம் அந்த விழாவில் கலந்து கொள்வேன்’ என்றேன். இன்று சூர்யாவின் படங்களில் தொடர்ச்சியாக பெரியாரின் புகைப்படங்களும், அம்பேத்கரின் புகைப்படங்களும் இடம்பெறுகின்றன. ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’ போன்ற படங்களில் பெரியார், அம்பேத்கார் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பார். எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. இந்தப் படத்தில் வினய் அவர்களின் வில்லத்தனத்தை பார்த்துவிட்டு, சூர்யா ரசிகர்களுக்கும் முன், ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். பொருத்தமான கதாபாத்திரம் அமைந்தால் நான் மீண்டும் வில்லனாக நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஏனெனில் ஒரு தலைமுறைக்கே நான் வில்லன் நடிகர் என்பது தெரியாமல் போய்விட்டது. தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும், அட்டகாசமான வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் வில்லனாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.