அகவன் என்றால் உள்ளிருப்பவன் எனப் படத்தின் உபத்தலைப்பிலேயே விளக்கம் உள்ளது. ஏகனான சிவன், அனைத்து உயிரினங்களுள்ளும் அநேகனாய் உறைந்துள்ளான் என்பதே படத்தலைப்பின் பொருள்.
பெருவெள்ளம் ஏற்பட்ட காலத்தில், லிங்கோத்பவராய் உயர்ந்து நிற்கும் சிவனின் ஓவியத்தைக் கண்ட ராஜராஜ சோழனுக்கு ஓரெண்ணம் எழுகிறது. அதன் படி, ஒவ்வொரு கோயிலின் ராஜ கோபுரத்திலும் சில ரகசிய ஏற்பாடுகளை அமைக்கிறார். அதென்ன ரகசியம் என்பதும், அந்த ரகசியத்தை அறிந்து கொண்ட தீயவர்களின் சதித்திட்டம் எப்படிக் கலையப்படுகின்றது என்பதும்தான் படத்தின் கதை.
தத்துவச் சாயலுடைய தலைப்பெனினும், படம் நல்லதொரு த்ரில்லராய் ஈர்க்கிறது. மூன்று பொண்டாட்டிக்காரராக வரும் தம்பி ராமய்யாவின் காட்சிகளைக் கத்தரித்து, படத்தின் நீளத்தைச் சுருக்கி, முழு நீள த்ரில்லராய்த் தொடக்கம் முதலே கொண்டு போயிருக்கலாம் இயக்குநர் APG. ஏழுமலை. சிராஸ்ரீ, நித்யா ஷெட்டி எனப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பது படத்தின் மையக்கருவை நீர்த்துப் போகச் செய்கிறது. படத்தில் நிறைய இரவுக்காட்சிகள் வருகின்றன. அவையனைத்தும், பால பழனியப்பனின் ஒளிப்பதிவில் மிளிர்வது சிறப்பு.
திண்டிவனத்தின் அருகே அனந்தமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயிலில் கதை நிகழ்வதாகச் சித்தரிக்கப்படுகிறது. கும்பகோணத்தில் உடையார்பாளையம், அச்சரப்பாக்கத்தில் நடு பழனி, அனந்தமங்கலம் கோயில் என மூன்று கோவில்களில் படம்பிடிக்கப்பட்டு அழகாக மேட்ச் செய்துள்ளனர். இரவுகளில் சிவன் கோயில் பிரகாரம் மிளிரும்படி அழகாக லைட்டிங் தந்து அசத்தியுள்ளனர்.
படத்தின் நாயகனான கிஷோர் ரவிச்சந்திரன், கோயிலில் முடி வெட்டும் தொழில் புரிபவராக வருகிறார். அந்தக் கோயிலில், இரவில் நடக்கும் அமானுஷ்யச் சம்பவங்களைத் துப்புத் துலக்கவும் செய்கிறார். கற்கோயில் சார்ந்த சிலைகள், சிற்பங்கள் என அனைத்தும் கேட்பாரற்றுச் சுரண்டப்பட்டு வரும் சூழலில், இந்தப் படம் அதை நினைவுப்படுத்தும் வண்ணம் அழகானதொரு நகைமுரணாய் வந்துள்ளது.