ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம். அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அன்பழகனும் அறிவழகனும் இரட்டையர்கள். மனைவியிடம் அன்பை விட்டுவிட்டு, தன்னுடன் அறிவை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார் இரட்டையர்களின் தந்தை. பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை.
இரட்டையர்கள் ஒருநாள் சந்தித்துக் கொண்டு படம் சுபமாக முடியும் என்பது வி.எஸ்.ராகவன் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் சினிமா ஃபார்முலா. ஆக, எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதில் மட்டுமே சுவாரசியம் காட்ட இயலும். ஆனால் சுவாரசியம் ஒரு பொருட்டே இல்லை என்ற ரீதியில் திரைக்கதை பயணிக்கிறது. படம் தொடங்கியதும் வில்லன் விதார்த் மைண்ட் வாய்ஸில், குடும்பம் எப்படிப் பிரிகிறது, ஊர் ஒன்றுபடாமல் ஏன் இருக்கிறது என சுருக்கமாக ஃப்ளாஷ்-பேக்கை முடித்து விடுகிறார்கள். பிறகு கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சுமார் ஒன்றரை மணி நேரம் அலைக்கழிக்கின்றனர். பிறகு, அறிவு வந்து குடும்பத்தை ஒன்று சேர்க்க முயற்சி செய்வதாகக் கதையை ட்ராக்கிற்குள் கொண்டு வருகின்றனர். படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ் இன்னும் அதிக்கபடி கறார்த்தனத்தைக் காட்டியிருக்க வேண்டும்.
காஷ்மீரா பர்தேசி, ஷிவானி ராஜசேகர், நெப்போலியன், ஆஷா சரத், தீனா என படத்தில் நடிகர்கள் ஏராளம் என்றாலும், ஆதிக்கு பாடிகார்டாக வரும் சீனத்தமிழன் தோன்றும் காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கின்றன.
ஹிப்ஹாப் ஆதிக்கு, சிரித்துக் கொண்டே சண்டையிட ஓடுவதும், மீசையை அடிக்கடி முறுக்கிக் கொள்வதும் நன்றாக வருகிறது. அதனால் இதையிரண்டையும் தேவைக்கு அதிகமாகவே செய்துள்ளார். இளைஞர்களுக்கு ஏதாவது நல்ல அட்வைஸ் செய்தே ஆகவேண்டும் என்ற அவரது ஆர்வத்தைக் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்வது நல்லது. தாயின் அன்பிற்காக ஏங்குவதையும், அப்பாவின் மீது கோபப்படுவதையும், ஆதி நடிப்பில் கொண்டு வந்திருந்தால் படம் மிகக் குறைந்தபட்ச தாக்கத்தையாவது ஏற்படுத்தியிருக்கும்.