Shadow

புஷ்பா: தி ரைஸ் விமர்சனம்

ஓரு தெலுங்கு சினிமாவை விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்வதா என்ற தயக்கம் என்னிடம் எப்போதுமே உண்டு. பார்வையாளர்களின் சிந்தனையை முடக்கிப் போடும் தெலுங்குத் திரையுலகின் ஹைப்பர் சினிமாத்தனமும், லாஜிக்கல் அத்து மீறல்களும் உலகமே அறிந்த ஒன்று. இதற்கு புஷ்பா மட்டும் விதி விலக்கா என்ன?

இல்லை. இது அச்சு அசல் ஒரு தெலுங்கு சினிமாதான். அதே லட்சணங்களோடுதான் இந்தப் படமும் இருக்கிறது. ஆனாலும் என்னைக் கவர்ந்த சில அம்சங்கள் இதில் இடம் பெற்று இருப்பதை நான் குறிப்பிட்டு ஆக வேண்டும்.

அவை, பாத்திர வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வட்டார மொழிப் பயன்பாடு, உடல்மொழி, இலக்கு மாறாமை ஆகியனவாகும்.

சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ என்ற படத்தின் வெற்றி குறித்து விதந்தோதிக் கொண்டிருந்தோம். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ‘சீரியசான’ முக பாவத்தோடு நடித்து இருந்ததற்கு வெகுவான பாராட்டினைப் பெற்றிருந்தார். சீரியசான ஒருவரை திரையில் கொண்டுவர, சிவ கார்த்திகேயன் ‘பொம்மை’ வகை உடல் மொழியைப் பயன்படுத்தி இருந்தார். அல்லது ‘ரோபாட்’ வகை எனலாம். ஒரு ரோபாட்டைப் போல அசைவற்று நிற்பது, கீ கொடுக்கப்பட்டதைப் போல திரும்புவது, உட்காருவது, எழுவது, ஒரு ரோபாட்டைப் போல சொற்களை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பேசுவது என்று என் போன்றவர்களை வதைத்து எடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். ஒரு சீரியசான கேரக்டர், ஒரு பொம்மையைப் போல உணர்ச்சிகள் அற்று நடந்து கொள்ளும் என்று சிவகார்த்திகேயனுக்கும் அவரது இயக்குநருக்கும் யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

‘புஷ்பா’ படத்தில், புஷ்பராஜ் ஏன் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான், அவன் முகத்தில் ஏன் சிரிப்பையே காண முடியவில்லை, ஏன் அவன் காதலைக் கூட வன்முறையாக செய்கிறான், அவனுக்கு ஏன் நிறைய நண்பர்கள் இல்லை, அவன் ஏன் பாமரத் தனமாக நடந்து கொள்கிறான் என்பதற்கு எல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிற ஃப்ளாஷ் பேக் சிறப்பாக அமைந்துள்ளது.

ஐந்து வயதிலேயே அப்பாவை இழப்பது, அம்மா தன் கண் முன்னாலேயே அவமானப்படுத்தப்படுவதைப் பார்ப்பது, வீட்டில் உள்ள பொருட்கள், சொத்துக்கள் எல்லாவறையும் இழந்து தெருவில் அநாதையாக விடப்படுவது, அப்பன் பேர் தெரியாதவன் என்ற அவல நிலைக்குத் தள்ளப்படுவது என புஷ்பா கதாபாத்திரத்தின் வார்ப்பு தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் அவன் ஒரு முரடனாகவே வளர்கிறான். மரம் வெட்டிப் பிழைக்கும் திருட்டுத் தொழிலுக்குத் தள்ளப்படுகிறான். குழந்தையில் இருந்து இத்தனை கொடுமைகளை அனுபவித்த ஒருவனால் எப்படி சாதாரண வாழ்வை நினைத்துப் பார்க்க முடியும்!

ஆனாலும் அவன் ஒரு ரோபாட்டைப் போல உணர்ச்சியற்று அல்ல முற்றிலும் உணர்ச்சிக் கொந்தளிக்கும் மன நிலையோடு தோன்றுகிறான். அவனை பார்வையாளனால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு படிக்காத, பாமர, நாகரீகம் அற்ற காட்டுப் புறத்தானின் உடை அலங்காரம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது புஷ்பாவின் உடை. படத்தில் உள்ள அத்தனை கேரக்டர்களுடைய காஸ்ட்யூமும் அப்படித்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டு எல்லையை ஒட்டி வாழும் தமிழர்களும் தெலுங்கர்களும் பேசிக்கொள்ளும் பேச்சு மொழியை நான் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட அந்த ‘டோன்’ கச்சிதமாக இந்தப் படத்தில் வந்திருக்கிறது.

படத்தின் முதலில் இருந்து கடைசி வரை குறிபிட்ட அந்த வட்டார ‘ஸ்லாங்’ அசத்தலாக இடம்பெற்று இருக்கிறது. எல்லாவிதமான காட்சிகளிலும் அந்த அசத்தலான வட்டார ஸ்லாங்கினை விடுபடாமல் கொண்டு வந்து இருப்பது அருமை.

புஷ்பாவின் உடல் மொழி மிகச் சரியாகத் தனித் தன்மையோடு, காரண காரிய பின்புலத்தோடு அமைந்திருப்பது இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனலாம். தனது இடது தோளைத் தூக்கியபடி ஒரு முரட்டு நடையை புஷ்பா உருவாக்கிக் கொடுக்கும்போது அதை நம்மால் அனுபவிக்க முடிகிறது. பீடி குடிக்கும் போது, சும்மா நடக்கும் ஒரு நடையின்போது, சின்னச் சின்ன அசைவுகளின்போது, எதிரிகளிடம் பேசும் போது, சண்டைகளின்போது என்று பாத்திரத்தின் உடல் மொழியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.

ஒரு தெலுங்குப் படத்தைப் பார்க்கவும். விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளவும், அதை மற்றவர்களுக்கு பரிந்துரைச் செய்யவும் எனக்கு இவையே போதுமானவையாக உள்ளன.

படம், திருட்டுத்தனமாக மரம் வெட்டும் தொழிலில் தொடங்கி அதே லொக்கேஷனில் நடந்து, அதே மரம் வெட்டும் தொழிலில் வெற்றி அடைவதோடு முடிகிறது.

– ம.தொல்காப்பியன்