வலி மிகுந்த வாழ்க்கை யாருக்குத்தான் இல்லை? ஆனாலும் வலிகளை இல்லாமல் ஆகச் செய்யும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை இல்லாத மனிதர்கள்தான் அந்த நம்பிக்கையை உணராமல் தங்களையும் தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள் . ஆனால் எல்லா வலிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாக அன்பு இருக்கிறது என்று நம்புகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் எத்தனை சோதனைகளைச் சந்திக்கின்ற போதும் அவற்றை நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து போய்விடவே விரும்புகிறார்கள்
எத்தனை வலிகள் இருந்தபோதும் அன்பிலும் அது தரும் நம்பிக்கையிலுமே வாழ்க்கையின் மதுரம் இருக்கிறது என்பதுதான் மதுரம் திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.
மிகச் சாதாரணமான இந்தக் கதையை தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் மூலமாக அன்றாடம் நாம் சந்திக்கின்ற எளிய மனிதர்களின் சின்னச் சின்ன உணர்வுகளைக் காட்சிப் படுத்துவதன் மூலமாக ஓர் அபாரமான அனுபவத்திற்குத் தயார்படுத்தி இருக்கிறார்கள் இந்தப் படக்குழுவினர்.
மருத்துவமனையில் நோயாளிகளின் துணைக்காக வருகின்றவர்கள் தங்குவதற்காக அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய கூடம் தான் இந்தப்படத்தின் களன்.
இந்தக் கூடத்தில் தங்கியிருப்பவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அழைத்து வந்த நோயாளிகள் குணம் பெற்று தங்களோடு வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடும், “அவர்களுக்குச் சரியாகிவிட வேண்டுமே” என்ற பதைபதைப்போடும் கலவை உணர்ச்சியோடு இருப்பார்கள்.
இருந்தபோதிலும் அந்த உணர்வுகளிலிருந்து வெளியாகி, பிற நோயாளிகளிக்குத் துணையாக வந்து தங்கி இருப்பவர்களோடு தங்களது கதைகளைப் பகிர்ந்து கொண்டும், இணக்கமும் பிணக்கமும் கொண்டும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அடுத்தவருக்கு ஆறுதலாக முனைந்து, அதன்மூலம் நெருக்கமாகி, புதிய நட்புகள் தழைக்கும் காட்சிகளின் வழியாக எல்லா மனிதர்களுக்குள்ளும் இயல்பாக இருக்கும் அன்பை, அடுத்தவர்கள் மீதான கரிசனையை மெல்லிய இழையாய் படம் முழுதும் உலவ விட்டிருக்கிறார்கள்.
உணர்ச்சிகரமாகக் கதை சொல்லும் உத்திதான் என்றாலும் “மெலோ டிராமா” வாக மாற்றி அழுது புரளாமல் இயல்பான சம்பவங்களோடு காட்சிக்குக் காட்சி ஒன்ற வைத்திருக்கிறார்கள்.
கப்பலில் வேலைக்குச் சென்று விட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் சாபுவுக்கும், சாபுவிற்கு இணக்கமான நண்பரின் பிரியாணி கடைக்கு அப்பளம் விற்பனைக்கு வரும் சித்ராவுக்குமிடை யே உருவாகும் அந்தக் காதல்தான் படத்தின் அடிநாதம்.
பெரிய ஆர்ப்பாட்டங்களில்லாத, சிறிய கடையின் அடுக்களையில், பிரியாணியில் தொடங்கும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிகளைத் தவிர்த்து காட்சிப்படுத்தப்படும் அந்தக் காதல், சாரல் மழையில் நனைந்தபின் உடல் மெல்ல நடுங்கும் நிலையில் ஆவி பறக்கக் குடிக்கும் சூடான தேநீரின் இதத்தோடு மதுரமாய் இனிக்கிறது. ஜோஜு ஜார்ஜும் ஸ்ருதியும் நல்ல ஜோடியும் கூட.
நாற்பதாண்டு கால மனைவியுடனான காதல் வாழ்க்கையை எப்போதும் சிலாகித்துக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் இந்திரன் வாழ்ந்திருக்கிறார். “உனக்கு வருத்தமாக இல்லாவிட்டால் ஒன்று சொல்லவா?” என்று எல்லாரிடமும் அவர் கேட்கும் அந்த வசனமுமே கூட ஓர் உதாரணம். ஆரம்பத்தில் நகைச்சுவைபோலத் தோன்றும் இதே வசனத்தை மனைவி குணமாகி வீடு திரும்ப யத்தனிக்கும் வேளையில் ஜோஜு ஜார்ஜிடம் அவர் சொல்லும்போது அந்த வசனத்தின் தொனி வேறாக மாறி நிற்கும்.
படத்தில் சில கதாபாத்திரங்களின் பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றனவே தவிர அவர்கள் காட்சியில் வருவதில்லை. என்றாலும் ரவியின் மனைவி சுலேகாவும், தாஜினுடைய தகப்பனாரும், நீது என்ற பெண்ணின் அக்காவும், கெவினுடைய அம்மாவும் நாம் காணாமலேயே நமக்கு அறிமுகமானவர்களாகிவிடுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் இன்னும் ஒரு சுவாரசியம்.
படத்தின் காட்சிச் சட்டங்களை அழகுறப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டாலினிஸ்லாஸ். ஜோஜுவும் ஸ்ருதியும் காதலைப் பகிர்ந்து கொள்ளும்போது பின்னணி மழையில் அந்த அழுக்கான அடுக்களையும் கூட ஒளிப்பதிவின் மிகைவால் மின்னுவதோர் உதாரணம் மட்டும்.
மலையாளப் படங்களுக்கேயுரிய மெதுவான தொடக்கமும், கதாபாத்திரங்களுக்கான அறிமுகமும் இருந்தாலும் சற்றும் சலிப்படைய வைக்காத, மனித உணர்வுகளின் எல்லா அம்சங்களையும் தொட்டுச் செல்கிற அபாரமான திரைக்கதை.
ஆஷிக் அமீர், ஃபாஹிம் ஸஃபர் (தாஜ் என்ற வளைகுடாவாசி கதாபாத்திரத்திலும் இவர்தான் நடித்திருக்கிறார்) இருவருடைய பங்களிப்பில் மிளிர்கிறது.
எந்தப் பூச்சுகளுமின்றி, படம் பார்க்கிறவர்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் முடிவோடு படத்தை இயக்கி, அதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் அஹம்மது கபீர். ‘ஜூன்’ என்ற முதல் படத்திலேயே நம்பிக்கை விதைத்த இயக்குநர் இவர்.
சொல்ல மறந்து விட்டேனே?! படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மதுரம் கூட்டவே செய்திருக்கின்றன. இசை அமைப்பாளர் ஷிஹாம் அப்துல் வஹாபுக்கு வாழ்த்துகள்!
சினிமா ‘ஹராம்’ என்று இங்கே சிலர் கதறிக் கொண்டிருக்கும் நிலையில் மலையாள சினிமா இளம் இஸ்லாமியர்களின் கலைப் படைப்புகளோடு புதிய பாய்ச்சல் காணத் தொடங்கியிருப்பது மேலும் நம்பிக்கையளிக்கிறது.
மனிதாபிமானமும், அன்பும், நம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையை எதிர்கொள்வதில் எந்த அகச்சிக்கலும் இருக்காதென்பதை விழிகளை நனைத்துச் சொன்னாலும், “மதுரம்” நிச்சயம் இனிப்பான அனுபவம்தான்.
– ஆசிப் மீரான்