Shadow

ஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை

Andhra-Mess---Pooja-Devariya

நான்கு சுவருக்குள், பெண்ணால் அவமதிக்கப்படும் ஓர் ஆண் இயலாமை குமைய வெளியேறுகிறான். வெளியில் வந்து, அந்த இயலாமையைக் கோபமாகத் தன்னை விட பலவீனமான நபரிடம் காட்டுகிறான். அந்த நபர் மற்றொரு ஆணாக இருப்பான். ஓர் ஆண் தோற்க, அவனுக்குச் சம்பந்தப்பட்ட பெண் காரணமாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. அந்த ஆணுக்குத் தெரிந்த மற்றொரு ஆணுக்குச் சம்பந்தப்பட்ட பெண், பல ஆண்கள் தோற்கக் காரணமாக இருப்பாள்.

“உன்னால மீனுக்கு ஒரு பொறி கூட வாங்கிப் போட முடியாது” என்ற வசனத்தில் தொடங்குகிறது தோற்ற ஆண்களின் கதை. எத்தனை பேர் வந்தாலும், தெறிக்க விடும் நாயகர்களுக்குப் பழக்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் நிச்சயமாகப் புதுமையான திரை அனுபவத்தைத் தருமென நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படக்குழுவினர். ராஜ் பரத், தேஜஸ்வினி, ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை முகேஷ்.ஜி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை பிரபாகர் கவனிக்கிறார்.குட்டி ரேவதி, மோகன் ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்

வரது, ரத்னா, ரிச்சி, சேது ஆகியோர் தேவராஜ் என்கிற லோக்கல் தாதாவிடம் வேலை செய்கிறார்கள். ஒரு தருணத்தில், வரது தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, அவனது வாழ்க்கையில் ஒருமாற்றம் நடக்கிறது. அதன் பிறகு நடக்கிற தொடர்ச்சியான சம்பவங்கள் வரதுவின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இதனால் வரது, தேவராஜிடமிருந்து பிரிவதற்கு முடிவெடுக்கிறான்.

சில சம்பவங்களால், வரதுவும் அவனது மற்ற சகாக்களும், ஒரு குக்கிராமத்தில் வசிக்கிற பழமைவாதியான ஜமீன்தார் மற்றும் ஜமீன்தாரின் அழகிய மனைவியிடம் தஞ்சம் அடைகிறார்கள். அங்கேயே சில நாட்கள் தற்காலிகமாகத் தங்கிப் பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்துயோசிக்கிறார்கள். அந்த அழகும், அமைதியும் நிறைந்த அந்தக் கிராமம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு பாதையைக் காண்பிக்கிறது.

இந்த நான்கு பேரும் பழையதை எல்லாம் மறந்து விட்டு புத்தம் புதிய வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். ஆனாலும், இவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று தேவராஜ் தேடிக் கொண்டிருக்கிறான். வரதுவும், அவனது சகாக்களும் தாங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்களா? தேவராஜ் அவர்களை என்ன செய்தான்? என்பதே படத்தின் கதை.

“தற்காலத்தில், அல்லது தற்போது உள்ள சூழ்நிலை ஆண்களைப் பலவீனப்படுத்துகிறது எனச் சொல்கிறீர்களா?” என்ற கேள்விக்கு,

“ஆண்கள் எல்லாக் காலத்திலுமே பலவீனமானவர்கள் தான்” என்று சட்டெனப் பதிலளித்தார் இயக்குநர் ஜெய். நூற்றுக்கும் மேற்பட்ட பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ள ஜெய்க்கும், அவரது நண்பரான ஒளிப்பதிவாளர் முகேஷ்க்கும் இதுவே முதற்படம்.

ஆந்திரா மெஸ் – அடுத்த தலைமுறை தமிழ் சினிமா.