நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் செல்வது என்பார்களே அப்படி ஓர் அனுபவம் தான் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு பேய்படம் பார்ப்பதும். அந்த இரவில் அந்த அமைதியில் அந்த திகிலில் ஜிலீரென நம்முன் வந்து நிற்கும் அந்தப் பேயை நினைத்துப்பாருங்கள். கற்பனை செய்து பார்க்கவே ஜிலீரென்று இல்லை!
அன்னபெல் – கம்ஸ் கோம் நள்ளிரவு காட்சிக்கு முன்பதிவு செய்யும் போது என்னையும் சாண்டியையும் தவிர அரங்கில் வேறு யாரும் முன்பதிவு செய்திருக்கவில்லை. ஒருவேளை கடைசிவரை யாருமே முன்பதிவு செய்யாதிருந்தால் அந்த அனுபவம் இன்னும் திகிலாக இருந்திருக்கும். விதி வலியது. பாதி அரங்கம் நிறைந்திருந்தது. AMC Dolby Sound system உடனான அரங்கம். இசையின் துல்லியமும் உச்சத்தில் இருக்கும்.
காஞ்ஜூரிங் சீரஸ் பார்க்கும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், இவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டவை என்பது தான். எட் மற்றும் வாரன் தம்பதியினர் நடத்தி வரும் அருங்காட்சியகத்தில் அன்னபெல் இன்னும் பேயுள்ள ஒரு காட்சிப்பொருளாக வைக்கபட்டிருக்கிறது என்பது மிக முக்கியமான விஷயம். அன்னபெல் – கம்ஸ் கோம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் வாரன் தனது 92 ஆவது வயதில் மரணித்துள்ளார். அவருக்கே இந்தத் திரைப்படத்தினைச் சமர்ப்பித்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.
அன்னபெல் முடியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது அன்னபெல் – கம்ஸ் கோம். தீயசக்தி புகுந்து பேயாட்டம் ஆடிய அன்னபெல் பொம்மையைக் கைப்பற்றி அதனைத் தங்களுடைய வீட்டிற்கு எடுத்து வருகின்றனர் எட் மற்றும் வாரன் தம்பதியினர். எடுத்து வரும் முன்னரே அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டகப்படுகிறது, இந்த பொம்மையை அழித்துவிட்டால் என்ன? அதற்கு எட், ‘பேயானது இதனுள் இருக்கும் வரைதான் நம்மால் இதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும், அழித்துவிட்டால் இதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இது மிக மிகப் பத்திரமாகப் பாதுக்காக்கப்பட வேண்டிய ஒரு பொருள்’ எனக் கூறுகிறார்.
நள்ளிரவில் தன்னந்தனியாக எட் மற்றும் வாரன் அன்னபெல்லைப் பின்னிருக்கையில் வைத்தபடி தங்கள் வீடு நோக்கிப் பயணிக்கிறார்கள். சாலையில் ஏற்கனவே நிகழ்ந்திருந்த விபத்து, இவர்கள் பயணத்தை வேறுபாதையில் மாற்றியமைக்கிறது. அதிலிருந்து சரியாக சில நிமிடங்களில் கார் மக்கர் செய்ய, மயானத்தின் முன் வண்டி நிற்கிறது, அன்னபெல் லேசாக தன் வேலையைக் காண்பிக்கிறது. வாரனுக்கு ஆவிகளைக் காணும், அவற்றோடு பேசும் சக்தி உண்டென்பதால், அந்த சம்பவத்தை மிக லாவகமாக கையாள்கிறார். அன்னபெல் வீடு வந்து சேர்க்கிறது. மந்திர உச்சாடனத்திற்குப் பின், அன்னபெல் ஒரு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கபடுகிறது.
அந்த அறை முழுவதுமே அமானுஷ்ய சக்திகள் அடங்கிய பொருள்களாக நிறைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தருணத்தில் பிடிபட்டவை. அவையனைத்தும் சுதந்திரமாக காற்றாட இருக்க, புதிதாக வந்த அன்னபெல் மட்டும் இரண்டடுக்குப் பாதுகாப்புக் கருதி கண்ணாடிப் பேழையினுள் நுழைகிறது. “எக்காரணத்தைக் கொண்டும் திறக்காதீர்கள்” என்ற எச்சரிக்கையின் பின் அன்னபெல் மிக சுவாரசியமாக அமரிந்திருக்கிறாள். அமானுஷ்ய சமாச்சாரங்கள் பாதுகாத்து வைக்கபட்டிருக்கும் அறை என்பதால் அதன் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு வாரமும் அறை முழுமையும் மந்திரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எட் வாரன், அலுவல் காரணமாக வெளியூர் பயணப்பட, அவர்களது குழந்தை ஜுடியை கவனித்துக்கொள்ளும் பொருட்டு மேரி எலனும், டேனியலும், வாரனின் வீட்டிற்கு வருகிறார்கள். டேனியலின் குறுகுறுப்பு காரணமாக, அமானுஷ்ய அறை திறக்கபடுகிறது. சிறுவயதிலேயே இறந்து போன அவள் அப்பாவை அங்கு தேட முயல்கிறாள். நிஜமாகவே அது ஓர் அமானுஷ்ய அறை என்றால் அதை நிரூபிக்கும் பொருட்டு ஏதேனும் ஒரு சமிக்ஞை வேண்டும் எனப் பேய்களிடம் கட்டளையிட, கெஞ்ச, பேய்கள் எதுவும் அசைந்து கொடுக்காத விரக்தியில் டேனியலா அங்கிருந்த கிளம்ப எத்தனிக்க, அந்த நொடியில் ஓர் ஆச்சரியம் நிகழ்கிறது. இங்கிருந்து ஆரம்பமாகிறது ரோலர் கோஸ்டர் ரைட்.
அன்னபெல் உருவாகிய கதை தெரியும், காஞ்சஜுரிங்கில் அன்னபெல் எவ்வாறு விளையாட்டுக் காட்டியது என்பதும் தெரியும். அன்னபெல் – கம்ஸ் கோம், இரண்டுக்கும் இடைப்பட்ட கதை என்பதால், நல்லவேளை பிளாஷ்பேக் எதுவும் இல்லை என்பது லேசான மன ஆறுதல். வழக்கமான ஒரே வீடு, ஓர் அறைக்குள் நிகழும் வகையறா திரைக்கதை என்றாலும், கதை என ஒரு ஓரத்தில் சில உணர்ச்சிகரமான மென்மையான சம்பவங்களும் நிகழ்கின்றன.
அன்னபெல் – ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவரையும் வகைவகையாய் மிரட்ட, முழுமையான சுழலுக்குள் சிக்குவது என்னவோ டேனியலா தான். எட் வாரன் தம்பதிகள் வீட்டில் இல்லாத போது அன்னபெலின் அட்டகாசத்திற்குள் சிக்கிக்கொண்ட இந்த மூவரும் என்னவாகிறார்கள், யாரேனும் பிழைத்தார்களா, அன்னபெல் என்னவானது என்பதை மிக ஜாலியான திரைக்கதையாக எழுதி இருக்கிறார்கள். மூவரின் நடிப்பும் அபாரம். ஒரு பேய்ப்படத்திற்கான அத்தனை பேயம்சங்களும் உள்ள படம்.
படத்தின் ஒரே குறை பேய்த்தனமான காட்சிகளுக்கான வாய்ப்புகள் திரைக்கதையில் ஏராளமாக இருந்தாலும் அவற்றை ஏன் முறையாக உபயோகபடுத்தவில்லை என்பதுதான். பேய்ப்படத்தில் திடீர் ஜிலீர் காட்சிகள் இல்லை என்பது ஒரே குறை மட்டுமில்லை பெருங்குறையும் கூட. அதற்காக படம் ரசிக்கும் படி இல்லையா என்றால், என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டமாகவே இருந்தது. என்ன சிக்கன் பிரியாணியை எதிர்பார்த்துச் சென்றவனுக்கு பரோட்டா சால்னாவைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். மற்றபடி படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.
– நாடோடி சீனு