Shadow

அனபெல் சேதுபதி விமர்சனம்

ஒரு மிகப் பெரிய அரண்மனை. பெளர்ணமி அன்று அங்கு யாரேனும் தங்கினால், அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். அத்தகைய அரண்மனைக்குள், திருட்டைத் தொழிலாகக் கொண்ட ஓர் ஏமாற்றுக்காரக் குடும்பம் நுழைகிறது. பின் என்னாகிறது என்பதை, பேய்ப்படத்திற்கான டெம்ப்ளேட்டில் இருந்து மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளார் தீபக் சுந்தர்ராஜன்.

இயக்குநர் சுந்தர்.சி-இன் அரண்மனை, அரண்மனை 2, ஜாக்ஸன் துரை, பெட்ரோமேக்ஸ் என தமிழில் வரிசை கட்டிக் கொண்டு, அண்மையில் வந்த பேய்ப்படங்களின் வரிசையே மிக நீளம். பார்த்துப் பழகி அலுத்துவிட்ட ஒரு ஜானரில், கொஞ்சம் சுவாரசியமான மாற்றத்தை வழங்கினால் கூட பார்வையாளர்களால் படத்தோடு ஒன்ற இயலும். படம் அப்புள்ளியைத் தொடுவதற்கு பதில், பார்வையாளர்களுக்கு அரண்மனையைச் சுற்றிக் காட்டுவதில் அலாதி இன்பம் காட்டுகிறது.

இதில் கொடுமை என்னவென்றால், பல காலமாக அடைப்பட்டுக் கிடக்கும் வில்லன் பேயும், நாயகியோடு சேர்ந்து ஆச்சரியமாக அரண்மனையைச் சுற்றிப் பார்க்கிறது. க்ளைமேக்ஸிலாவது வில்லன் பேய், ஒரே ஒரு துரும்பையாவது அசைத்து பயமுறுத்தும் எனப் பார்த்தால், சீக்கு வந்த அம்னீஷியாவால் பாதிக்கப்பட்ட கோழியாகவே இருக்கிறார் படம் முடியும் வரை.

அரண்மனையைச் சுற்றிப் பார்த்ததும், லண்டனில் இருந்து ஒரு கேமிராவுடன் வந்த அனபெலுக்கும், ஒரே ஒரு சமையற்காரனை உடைய மன்னர் வீரசேதுபதிக்குமான காதல் அத்தியாயம் தொடங்குகிறது. இருவரும் இணைந்து வாள் சண்டை போட்டு, தங்களைக் கொல்ல வரும் வீரர்களைக் கொல்கின்றனர். பாகுபலி 2 இல், பிரபாஸும் அனுஷ்காவும் இணைந்து ஒரே வில்லில் அம்புகள் தொடுத்தது போல் ஒரு ஃபீல் கொண்டு வரும் முயற்சி போலும்.

ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா, யோகி பாபு, சேத்தன், தேவ தர்ஷினி, மதுமிதா, ஜார்ஜ் மரியான், சுரேகா வாணி, வெண்ணெலா கிஷோர், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, லிங்கா, சீதக்காதி புகழ் சுனில் ரெட்டி என நட்சத்திரப் பட்டாளத்தில் 95% பேய்களாக வருகின்றனர். ஆம், கதைப்படி படத்தில் மனிதர்கள் கம்மி.

சமையற்காரர் ஷண்முகமாக யோகி பாபு நடித்துள்ளார். அவரது கதாபாத்திர வார்ப்பு மட்டுமே படத்தில் கொஞ்சம் பிடிப்போடு உள்ளது. விசுவாசப் பேயாக வருகிறார். அந்த டிப்பார்ட்மென்ட்டில் கட்டப்பாவே இவர் முன் பத்தடி பின் தள்ளித்தான் நிற்கவேண்டும். அனபெல்லாக டாப்சி. பின்க், தப்பட், கேம் ஓவர் என சீரியசான படங்களில் கரை ஒதுங்கியவர், சற்றே இளைப்பாற ஒரு நகைச்சுவைப் படம் முயலலாம் என நினைத்தது, பப்படம் போல் நொறுங்கிவிட்டது. விஜய் சேதுபதியின் கணக்கில், ‘இதுவும் இன்னொரு படம்’ ஆக வரவு வைக்கப்பட்டுள்ளது.