Shadow

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்

யார் ஆண்டாலும் கவலையில்லாமல் வாழ கெட்டப் பய காளியால் 1978 இல் முடிந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில், யார் ஆண்டாலும் அவர்களால் ஒரு பயனும் இல்லையென்ற விரக்தியிலேயே மக்கள் வாழ்கின்றனர். படத்தின் மையப்பகுதியாக அந்த விரக்தியே உழல்கிறது.

பூச்சேரி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த குன்னிமுத்து என்பவர் வளர்க்கும் காளை மாடுகளான வெள்ளையனும் கருப்பனும் காணாமல் போய் விடுகிறது. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் சலசலப்பைப் பற்றியும், அச்சலசலப்பு, மாடுகள் கிடைக்க எந்த அளவு உதவின என்பதாகப் பயணிக்கிறது படத்தின் திரைக்கதை.

அரசியல் நையாண்டி தான் படத்தின் ஜானர். ‘இன்ஜினியரிங் படித்த பரோட்ட மாஸ்டர்கள் தேவை’ என ஒரு போர்டின் மூலம் போகிற போக்கில் சமூக அவலத்தை நையாண்டி செய்திருந்தாலும், சில காட்சிகளை வலிந்து திணித்துள்ளனர். உதாரணத்திற்கு, பெட்ரோல் விலை ஏற்றிக் கொண்டே உள்ளனர் என்பதால் மண்திண்ணி என்பவர் தனது டிவிஎஸ் 50-ஐயைத் துறந்து சைக்கிளில் பயணம் செய்வதாக வரும் திணிக்கப்பட்ட துண்டுக் காட்சியைச் சொல்லலாம்.

படத்தின் முதல் பாதியோடு ஒன்ற முடியாமல் போகிறது. படத்தின் மையக் கதாபாத்திரங்களான குன்னிமுத்துவும், வீராயியும் மண்ணின் மனதோடு மனதில் பதியாமல் போகின்றனர். குன்னிமுத்து – வீராயியின் மகிழ்ச்சியோ, துன்பமோ தங்களுடையதாகப் பார்வையாளர்களால் உணர முடியவில்லை. குன்னிமுத்துவிற்குத் தரப்பட்டிருக்கும் அதிகப்படி வெள்ளந்தித்தனத்தால், படம் யதார்த்தத்தைத் தவறவிடுகிறது. காளை மாடுகளுக்குமான பிணைப்பை உணர்ச்சிபூர்வமாகக் காட்சிப்படுத்தத் தவறியுள்ளார் இயக்குநர் அரிசில் மூர்த்தி. மழையைப் பார்க்காத ஊர் எப்படிப் பிழைக்கிறது, அவர்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறார்கள் என்பதற்குள் எல்லாம் படம் போகாததே அதற்குக் காரணம்.

முதற்பாதியின் நாயகன் என்று சொல்லுமளவிற்கு, மண்திண்ணி கதாபாத்திரத்தில் வெள்ளையும் சொள்ளையுமற்றும் வலிய வலம் வருகிறார் வடிவேலு முருகன் (V ஸ்டுடியோ கோடாங்கி). அவருக்கு ஏற்றதொரு அருமையான பாத்திரம் என்றாலும், அப்பாத்திரமும் வேரின்றியே படத்தில் பயணிக்கிறது.

மத்திய அரசை விமர்சிப்பது போல் தோன்றினாலும், இயக்குநர் ஷங்கரின் படம் போல் மாநில அரசின் ஊழலே வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது எனும் புள்ளியைச் சுற்றி வளைத்துத் தொட்டுள்ளது. வாணி போஜனின் வரவிற்குப் பிறகே, இரண்டாம் பாதியில் படம் சற்று விறுவிறுப்பு அடைகிறது. மாஸ் ஹீரோ என்றழைக்கப்படும் அதி நாயகர்கள் செய்யும் வேலையைச் செய்கிறார்.

படத்தில் அரசியலும் உண்டு, நையாண்டியும் உண்டு. ஆனால், அவ்விரண்டும் இழையோடிருக்க வேண்டிய திரைக்கதையின் குவிமையம் இலக்கற்று தைத்துள்ளது.