
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!
– புதுமைப் பெண், பாரதியார்
மகாகவி இறந்தே 100 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால், ஆண் வகுத்த வல்லாதிக்க விதிகளை மீறி, பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பின் மூலம், இந்த இழிநிலையை மீண்டும் பொதுத்தளத்தில் ஓர் அழுத்தமான விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத்.
‘அர்ஜுன் ரெட்டி’ போன்று ஆணாதிக்கத்தை ஹீரோயிசமாகப் பேசும் படத்தினை ரீமேக் செய்யும் சம காலத்தில், அஜித் போன்ற மாஸ் ஹீரோ, “பின்க் (Pink)” எனும் அற்புதமான ஹிந்திப் படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவெடுத்தது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு. மசாலாக்களை மட்டுப்படுத்தி, சமூகப் பிரக்ஞையுடைய ஒரு படத்தில் பெரிய நடிகர்கள் நடிப்பது மிக அவசியமானதொரு முன்னகர்வு. அதற்கான முதல் அடியை எடுத்து வைத்த அஜித்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
பின்க் எனும் ஹிந்திப் படத்தின் கருவினைச் சிதைக்காமல், அதற்கான உச்சபட்ச நியாயத்தினைச் செய்துள்ளார் இயக்குநர். அஜித் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வண்ணம், இடைவேளைக்கு முன் ஒரு நீண்ட சண்டைக்காட்சியையும் வைத்து அசத்தியுள்ளனர். பூங்கா மற்றும் கார் கேரேஜில் நிகழும் அந்த சண்டைக் காட்சியில், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் அதி அற்புதம். படத்திற்குள் அச்சண்டையைத் திணிக்காமல் அழகாகக் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், இடைவேளைக்குப் பிறகான அந்த ஃப்ளாஷ்-பேக் தான், எதனோடும் ஒட்டாமல் படத்தின் வேகத்தையும் பின்னுக்கு இழுக்கிறது. அதிலும் அந்த ஃப்ளாஷ்-பேக் அத்தியாயத்தின் வசனங்களை எழுதியவர்கள், இடது கையால் வேண்டாவெறுப்பாக எழுதியிருப்பர் போல. கதைக்கோ, படத்துக்கோ, அஜித்துக்கோ, அவரது ரசிகர்களுக்கோ, பின்க் படத்தை வியந்தவர்களுக்கோ, நல்ல படத்தை விரும்புபவர்களுக்கோ என அது யாரையுமே கவராமல் போய்விடுவது துரதிர்ஷ்டம். இது அஜித்தின் தனிப்பட்ட விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் இருக்கும் என்பது சம்சயம். கல்யாணத்திற்குப் பிறகான ரொமான்ஸ்/ காதல் என்பது தமிழ்ப்படங்களில் நிகழாத, நிகழ மறுக்கும் அதிசயம். என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவுடனான ஒரு மெச்சூர்ட் காதல் விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்டது. கபாலி, காலாவில் ரஞ்சித் அத்தகைய ரொமான்ஸை அழகாகத் தொட்டிருப்பார். அஜித்தின் சமீபத்திய படங்களில் அவர் அதற்காக மெனக்கெட்டு முயல்வது போல் தெரிகிறது. விவேகம் படத்தின் மையக்கருவாகவே அதைக் கொண்டு போயிருப்பார்கள். விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பாதியில், தந்தை – மகள் பாசத்தில் படம் பயணித்தாலும், அந்தப் படத்திலும் அந்த ரொமான்ஸிற்கான சின்ன மெனக்கெடல் இருக்கும். அதைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் வம்படியாக அந்த ரொமான்ஸை முயற்சி செய்துள்ளனர். ‘சரி போய்த் தொலையட்டும்’ என்ற மனநிலையில், வித்யாபாலனைக் கொண்டு அவசரமாக ஒரு திட்டமிடாத அத்தியாயத்தை இயக்குநர் வைத்திருப்பதாகத் தெரிகிறது. கல்யாணத்திற்குப் பிறகான ரொமான்ஸைத் திரையில் காட்டுவது ஆரோக்கியமான முன்னெடுப்பு என்றாலும், அது இயல்பாய் அமைந்தால் பரவாயில்லை. படத்தின் ஃப்ளோ பாதிக்கப்படும் அளவும் வம்படியாகத் திணிக்கப்படாது; கூடாது.
மீராவாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஃபமிதாவாக பிக் பாஸ் அபிராமி, மேகலயாவில் இருந்து வந்து சென்னையில் பணி புரிபவராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஆகிய மூவருமே கச்சிதமான கதாபாத்திர வார்ப்புகள். பின்க் படத்தில் நடித்த ஆண்ட்ரியாவையே அந்தப் பாத்திரத்தில் பயன்படுத்தியிருப்பது மிகப் புத்திசாலித்தானமான முடிவு.
“வேண்டாம் என்றால் வேண்டாம் என்பது மட்டுந்தான் (A No is a NO)” என்ற பெண்களுக்கிற்கான அடிப்படை உரிமையை அழுத்தம் திருத்தமாகத் தமிழிலும், ஒரு மாஸ் ஹீரோ பேச, அதைத் திரையில் காணக் கிடைக்கும் என்பது ஓர் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிதான். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்பதும் பாரதியின் ஆசைகளில் ஒன்று.
வாதத் திறமையுடைய சாணக்ய வக்கீலாகக் களமிறங்கியுள்ளார் ரங்கராஜ் பாண்டே. சின்னச் சின்ன அசைவுகள், உதட்டுச் சுழிப்புகள் மூலம் அவர் காட்டும் எகத்தாளமும் அலட்சியமும், தமிழ்நாட்டிலேயே இவரை விட்டால் அந்தப் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் எவருமில்லை என்பது போல் ‘இயல்பான’ பாத்திரத்தில் தோன்றிப் பிரமிக்க வைத்துள்ளார். நாயகன் அஜித் வழக்கில் ஜெயிக்கிறார் என்பதை விட, வில்லன் ரங்கராஜ் பாண்டே தோற்பதைத் திரையில் காண ஆயிரம் கண்கள் வேண்டுமென்றால் அது மிகையில்லை.
அஜித்தின் மாஸ் படங்களில் இது முதன்மையானதாக இருக்கும். உண்மையில், இப்போதைக்கு இது மட்டுமே அவரது மாஸ் படமாக எஞ்சும். ஒரு பாலத்தின் மத்தியில் நூறு துப்பாக்கிகளுக்கு மத்தியில், அவை குண்டு மழை பொழிய, அதிலிருந்து தப்பிக்கும் அபத்தத்திற்குப் பெயரா மாஸ்? நேர்கொண்ட பார்வையும், அதற்கான முன்னெடுப்பும் தான் உண்மையில் மாஸ்.