Shadow

அரிமாப்பட்டி சக்திவேல் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாப்பட்டி என்கின்ற கிராமத்தில் இன்றளவும் இருந்து வரும் சாதியக் கொடுமைகளைப் பற்றி ஆவணப்படுத்தும் திரைப்படம் தான் அரிமாப்பட்டி சக்திவேல்.

கதை என்று பார்த்தால் பழகி சலித்தக் கதை தான். கீழ் சாதி என்று சொல்லப்படுப்படும் வகுப்பை சேர்ந்த நாயகன், மேல் சாதி என்று சொல்லப்படும் வகுப்பை சேர்ந்த நாயகி. இருவருக்குமான காதல், சாதிய பாகுபாட்டால் அந்த காதலுக்கு வரும் எதிர்ப்பு, தனிப்பட்ட முறையில் நாயகனுக்கு முதலில் இயக்குநராக வேண்டும், பின்பு தான் திருமணம் என்கின்ற லட்சியம், இந்தப் பிரச்சனைகளையெல்லாம் கடந்து காதல் கைகூடியதா..? இல்லையா..? என்பதே அரிமாப்பட்டி சக்திவேலின் மொத்தக் கதை.

கதையாகவும் திரைக்கதையாகவும் பார்த்தால் எந்த வித புதுமையும் சுவாரஸ்யமும் இல்லை. குறைந்தபட்சம் காட்சி அமைப்புகளாவது ஈர்ப்புடன் அமைக்கப்பட்டு இருக்கிறதா..? என்றால் அதுவும் இல்லை.

சமூகத்தில் நிலவும் அவலங்களைப் பற்றி படம் எடுத்தாலே படம் மிகச்சிறப்பாக ஓடி நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துவிடும் என்று நினைத்து இது போன்ற திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றதா..? என்று தெரியவில்லை.

சார்லி போன்ற் மகா கலைஞனை வீணடித்திருக்கிறார்கள். நாயகனின் அப்பாவாக வரும் சார்லிக்கு நடிப்பதற்கான காட்சிகளே இல்லை. இருப்பினும் கிடைத்த இடங்களில் இலகுவாக நடிப்பில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

அரிமாப்பட்டி சக்திவேலாக கதையின் நாயகனாக நடித்திருக்கும், பவண் சிறந்த நடிப்பைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் பாஸ் மார்க் கூட வாங்கவில்லை. நாயகியாக மேக்னா ஹெலன், அழகாக இருக்கிறார். அவரின் நடிப்பைப் பற்றி பேச வேண்டுமென்றால் பிற படங்களில் எப்படி நடிக்கிறார் என்பதை பார்த்துவிட்டு தான் பேச வேண்டும்.

நாயகியின் அண்ணனாக வரும் பிர்லா போஸ், அரசியல்வாதியாக வரும் இமான் அண்ணாச்சி, பஞ்சாயத்து தலைவராக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி இவர்கள் அனைவரும் ஓரளவிற்கு சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

மணி அமுதவன் இசையில் அந்தோணிதாசன் குரலில் வரும் வண்ண வண்ண இறகு பாடலும் பிற பாடல்களும் வசீகரிக்கின்றன. பின்னணி இசை பலவீனமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெ.பி.மென் தன் கேமராவால் படத்திற்கு நியாயம் சேர்க்க முற்பட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி வீரியமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு, அந்த வீரியத்தை கதைக்களம் மற்றும் காட்சிகளில் கொண்டு வருவதில் திணறி இருக்கிறார்;.

மொத்தத்தில் அரிமாப்பட்டி சக்திவேல் நல்ல முயற்சி. ஆனால் வெற்றி அல்ல.