32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் காவல்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ் | John Doe

Dinesh R சேலம் Published: 04/11/2026 4 நிமிட வாசிப்பு Updated: 06/11/2026 இது புதிது
எழுத்து அளவு:

அர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ (John Doe)’ வரும் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை அனுபமா, “‘ஜான் டோ’ மிகவும் முக்கியமான, ஆழமான உளவியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குள் செல்லும்போது நீங்கள் ஒரு நபராக இருப்பீர்கள். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிச்சயமாக இன்னொரு நபராக மாறியிருப்பீர்கள். அந்த அளவுக்கு இப்படம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.

நடிகர் படவா கோபி, “இந்தப் படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு உளவியல் போராட்டம் இருக்கிறது. கமல் சார் சொன்னதுபோல, கடவுள் பாதி, மிருகம் பாதி என்பதுதான் மனிதர்களின் இயல்பு. அந்த மனநிலையைப் படத்தில் வித்தியாசமாக அணுகியிருக்கிறார்கள். அர்ஜுன் தாஸின் நடிப்பு, அவருடைய உணர்வுபூர்வமான காட்சிகள் எனப் பல விஷயங்கள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளன.

இந்தப் படத்தின் தலைப்பான ‘ஜான் டோ’ என்பதன் அர்த்தம் எனக்குத் தொடக்கத்தில் தெரியவில்லை. மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயர்தான் ஜான் டோ; பெண் நோயாளியாக இருந்தால் ஜேன் டோ என்று குறிப்பிடுவார்கள் என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். அந்த அளவுக்கு வித்தியாசமான பெயரையும், கதைக்களத்தையும் கொண்ட இந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கிய மதுமிதாவுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் பிரீதா ஜெயராமன், “‘ஜான் டோ’ திரைப்படத்தில் ஒளிப்பதிவு ரீதியாக எங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது நீருக்கடியில் படமாக்கிய காட்சிகள்தான். படத்தின் முக்கியமான ஒரு பகுதி நீருக்கடியில் நடைபெறுவதால், அதற்காக முன்கூட்டியே நிறைய திட்டமிட வேண்டியிருந்தது.

படத்தின் முன்தயாரிப்புப் பணிகளின்போதே காட்சிப் பிரிப்பு, காட்சிகளை மனதில் உருவகப்படுத்திப் பார்ப்பது (Pre-visualization) உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டோம். நீருக்கடியிலேயே நேரடியாகப் படப்பிடிப்பையும் நடத்தினோம். இதற்காகப் பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவர்களைப் பயன்படுத்தினோம். நடிகர்களுக்கும் அதற்கேற்ற பயிற்சியும், சூழலுக்குப் பழகுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இது சவாலான பணியாக இருந்தாலும், திட்டமிட்டபடி சிறப்பாகச் செய்து முடித்தோம்” என்றார்.

நடிகர் அர்ஜுன் தாஸ், “அர்ச்சனா மேடம் இந்தப் படத்தில் என்னுடைய அம்மாவாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு ஒரு சிறப்பான நினைவு இருக்கிறது. ‘கைதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்த முதல் விருது ஜீ விருது தான். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது அர்ச்சனா மேடம். அதன்பிறகு அவர் தொகுத்து வழங்கும் விருது விழாக்களில் எனக்கு விருது கிடைப்பது வழக்கமாகிவிட்டது. அதனால் அவரை என்னுடைய அதிர்ஷ்ட தேவதை என்று அழைப்பேன். இந்தப் படத்திலும் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். இயக்குநர் மதுமிதாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். ஆரம்பத்தில் அவரை மேடம் என்று அழைத்தாலும், எங்களுடைய நீண்ட பயணத்திற்குப் பிறகு இப்போது மதுமிதா என்று நட்புடன் அழைக்கிறேன். இதற்கு முன்பு ஒரு படத்திற்காக என்னை ஆடிஷனுக்கு அழைத்திருந்தார். அப்போது ஆடிஷன் செய்து அனுப்பினேன். அவர் அதைத் தேர்வு செய்ததாகத் தகவல் வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ‘ஜான் டோ’ படத்திற்காக மீண்டும் என்னைத் தொடர்புகொண்டு இந்தக் கதாபாத்திரத்திற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று கூறினார். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். மதுமிதா மிகவும் அர்ப்பணிப்புடன், முழுமையாகத் திரைப்படத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் இயக்குநர். ஒரு பெண் இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு ஒட்டுமொத்த படையையே வழிநடத்தும் ஒருவராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்குத் துணையாகத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு இசையமைத்த முஜீப் மஜீத் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என்னுடைய சகோதரி மாளவிகாவும் இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். குடும்பத்தினருக்காகப் பாடல் பாடுவதற்கு அவருடைய குரலைப் பரிசோதித்துப் பார்க்கும்படி மதுமிதாவிடம் கேட்டேன். அவர் ஆடிஷனில் தேர்வானது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் மட்டுமல்ல; இதில் வலுவான உணர்வுபூர்வமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் த்ரில்லராகவும் இருக்கும்” என்றார்.

இயக்குநர் மதுமிதா, “எந்த ஜானரில் திரைப்படம் உருவாக்கினாலும் மனித உணர்வுகள்தான் என்னுடைய படங்களின் முக்கிய அம்சமாக இருக்கும். ‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதை நடைபெறுகிறது. அர்ஜுன் தாஸ் கேரளக் காவல்துறை அதிகாரியாகவும், சஞ்சனா தமிழ்நாடு காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர்” என்றார்.

இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் (Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றியுள்ளார்.

அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு, அர்ஜுன் தாஸின் வித்தியாசமான கதாபாத்திரம், மதுமிதாவின் இயக்கம் எனப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.