
இவ்வாண்டைச் சூர்யாவின் தீபாவளியாக மாற்றியுள்ளார் இயக்குநர் ஜித்து மாதவன்.
மிகத் திறமை வாய்ந்த காவல்துறை அதிகாரியான DSP இன்பராஜ், தனது வேலையை ராஜினாமா செய்கிறார். ஏழு வருடங்களுக்கு முன், அவர் கைது செய்த சீரியல் கில்லரின் பாணியில், மீண்டும் ஒரு கொலை நிகழ்கிறது. தவறான நபரை இன்பராஜ் சிறையில் அடைத்ததாகப் புகார் எழ, புதிதாய் நிகழும் சீரியல் கொலைகளின் சூத்திரதாரியைத் தானே பிடிக்க முடிவு செய்கிறார். பார்வைக் குறைப்பாட்டினால் பாதிக்கப்படும் இன்பராஜ், மேலும் மூவரை விசாரணையில் சேர்த்து, சாமர்த்தியமான தொழிற்முறைக் கொலையாளியைக் கண்டுபிடிப்பதுதான் படத்தின் முடிவு.
இன்பராஜின் தந்தை இருதயராஜாக நடித்துள்ள ஆனந்த்ராஜ் படத்தின் கலகலப்பிற்கு உதவுகிறார். பள்ளி மாணவர்களின் பின்னாடியே பள்ளிக்கூடத்திற்குக் கிளம்புவது, நஸ்ரியாவை ஆன்ட்டி என அழைப்பது என தனது கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். இன்பராஜின் உயரதிகாரியாக வரும் லாலின் நகைச்சுவை இலக்கைச் சரியாக அடையவில்லை. ஆனால், நஸ்ரியாவின் தந்தை மனோகரனாக நடித்துள்ள கஜராஜ் அவ்விலக்கை அடைந்துள்ளார். லுங்கி பாய்ஸ் புகழ் ராஜ்பிரியன், இன்ஸ்பெக்டர் சிபியாக நடித்திருந்தாலும், கலகலப்பிற்குப் பெரிதும் உதவவில்லை. இன்பராஜை வெறுக்கும் இன்ஸ்பெக்டர் வினோத் எனும் சுவாரசியமான பாத்திரத்தில் நடித்துள்ள சுரேஷ் மதியழகன் நன்றாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டுள்ளது.
கொலை செய்வதையும், இறந்த உடல்களை அப்புறப்படுத்துவதையும் ஒரு தொழிலாக ரசித்துச் செய்யும் கூலான க்யூட் (cool & cute) வில்லன் ஈஸ்வரனாக பிரேமலு புகழ் நஸ்லென் நடித்துள்ளார். படத்தின் இரண்டாவது நாயகன் போல் திரையில் தன்னிருப்பை அழுத்தமாகப் பதிந்துள்ளார். படத்தின் முதற்பாதியில், இரண்டே காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கும்படி டொவினோ தாமஸ் அசத்தியுள்ளார். அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
குறும்புத்தனமான செய்கைகளால் மிக இலகுவாக ஈர்க்கிறார் மாயா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நஸ்ரியா. இன்பராஜின் கண்ணாகத் தன் வேலையைத் தொடங்கி, அவரது இதயமாக மாறுகிறார். நாயகியாக மிளிர ரசிக்கும்படியான முகபாவனைகளே போதும் என்று படத்தில் பாடமெடுத்துள்ளார். தன் குறைகளை மறைக்க முயலும் இன்பராஜ் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் சூர்யா. தனது இயலாமையை அவர் எதிர்கொள்ளும் விதமும், அதைத் தாண்டிச் சாதிக்க அவர் போடும் முயற்சியும் படத்தின் எமோஷ்னல் கிராஃபிற்கு உதவியுள்ளது. ஹாட்-ட்ரிக் வெற்றிக்கு ஒர்த்தான மெனக்கெடலையும் நடிப்பையும் வழங்கியுள்ளார்.
ரோமஞ்சம், ஆவேஷம் முதலிய படங்களைப் போலவே, சினிமா பார்க்கும் அனுபவத்தை ஒரு கொண்டாட்டமாக மாற்றியுள்ளார் இயக்குநர் ஜித்து மாதவன். ஒரு ஜாலியான டார்க் காமெடி த்ரில்லர் படமாய், தீபாவளிக் கொண்டாட்டத்தை முழுமையாக்கியுள்ளது சீன்.

