ARM: Ajayante Randam Moshanam – அஜயனின் இரண்டாம் திருட்டு
நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மூவரின் கதை. களரி வீரனான கேலு, வீரனின் மகனான திருடன் மணியன், திருடனின் பேரனான அஜயன் என படத்தில் மூன்று நாயகன்கள், மூன்று குணாதிசயங்கள், மூன்று காதல்கள், மூன்று கதைகள் உள்ளன.
காலத்தை வாகனமாகக் கொண்ட ஓர் அருவ பிரபஞ்ச பயணியின் குரலில் படம் தொடங்குகிறது. விண்கல்லால் செய்யப்பட்ட விளக்கைத் தனது வீரத்தின் பரிசாகக் கொண்டு வருகிறார் கேலு. காதலுக்காகவும், துரோகத்திற்குப் பழிவாங்கும்விதமாக அவ்விளக்கைக் கவருகிறார் மணியன். சாதிய அடுக்குமுறையில் இருந்தும், திருடனின் ரத்தம் என்ற ஏளனத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள, அவ்விளக்கை மீட்கிறார் அஜயன்.
கேலுவான டோவினோ தாமஸ்க்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்க்குமான காதல் எட்டாக்கனியாக உள்ளது. ஊராரிடம் பெரும் பெயரைச் சம்பாதித்தாலும், இவரது வாழ்க்கை ஒரு துயர காவியம். திருடன் மணியனான டோவினோ தாம்ஸ்க்கும், சுரபி லக்ஷ்மிக்கும் இடையேயான காதலின் கால அளவு சிறியதாக இருந்தாலும், அது ஒரு முழுமையை எய்தும் காவிய காதலாகும். மனைவியின் ஆசையை நிறைவேற்ற ஒருவன் எந்த அளவிற்குப் போகிறான் என்பதற்குச் சிறந்த உதாரணமாக மணியனைக் கைகாட்டலாம். ஊரையே எதிர்க்கும் தினவும், இடுப்பில் மணியைக் கட்டி ஒலியெழுப்பிக் கொண்டே வந்து திருடும் வேகமும் சாகசமும், மிகச் சிறந்த காதலனாகவும் பரிணமிக்கும் மணியன் பாத்திரம் மற்ற இரண்டு நாயக பாத்திரங்களையும் மீறி ஈர்க்கிறது. விதவையாகி, முதுமை எய்திய பிறகும் அந்தக் காதலைத் தனது கண்களில் பெருமையாகத் தேக்கி வைத்துள்ளார் சுரபி லக்ஷ்மி. ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி கண்களில் காணக் கிடைக்காத காதலாக அது அமைந்துள்ளது. அஜயனான டோவினோ தாமஸின் காதலியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
மூன்று கதைகளிலுமே கேரளத்தில் நிலவி வரும் சாதிய மனோபாவத்தைப் பதிந்துள்ளார் இயக்குநர் ஜித்தின் லால். மூன்று கதாபாத்திரங்களுக்குமான வேறுபாட்டை மிக அழகாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார் டோவினோ தாமஸ். மணியன் பாத்திரத்திற்கு நேரெதிரான மனநிலையும், உடற்மொழியும், முக பாவனையும் கொண்டுள்ளது அஜயன் கதாபாத்திரம். பிரமாதப்படுத்தியுள்ளார் டோவினோ தாமஸ். அஜயனின் நண்பனாக நடித்துள்ள பசில் ஜோசஃபின் வழக்கமான நகைச்சுவை இல்லாவிட்டாலும், ஒரு துணை நடிகராகப் படத்திற்கு உதவியுள்ளார். அஜயனின் அம்மாவாக நடித்துள்ள ரோகினியும், எடக்கல் கோட்டையின் வாரிசாக வரும் ஹரிஷ் உத்தமனும் நன்றாக நடித்துள்ளனர். உடை வடிவமைப்பு, கலை இயக்கம், ஒளிப்பதிவு எனப் படத்தின் அத்தனை அம்சங்களும் சிறப்பாக உள்ளன. சண்டைக் காட்சிகளை இன்னும் ரசிக்கும்படியாக அமைத்திருக்கலாம்.
நாயகியுடன் மனமொத்து ஊரை விட்டுச் செல்வதை அஜயனின் இரண்டாவது திருட்டு எனக் குறிப்பிடுகின்றனர். ஒரு பெண் தன் காதலனோடு மனம் விரும்பிச் சேர நினைப்பதைத் திருட்டு எனக் கூறிக் கொச்சைப்படுத்தாமல் இருந்திருக்கலாம் இயக்குநர். கேலுவின் வீரக்கதையாலும், மணியனின் அசாத்தியமான சாகசக்கதையாலும் ஈர்க்கப்பட்டு, அந்தப் பாரம்பரியத்தில் வரும் நாயகனை, நாயகி தான் காதலிக்கிறாரே அன்றி, அந்தக் காதல் நாயகனின் முன்னெடுப்பு இல்லை. அதனால் நாயகியின் மனதை அஜயன் திருடினார் என்று கூடச் சொல்லமுடியாது. நாயகனின் காதலை ஏற்றுக் கொண்டார் என்பதே சரியாக இருக்கும். திருடப்படுவதற்கு நாயகியின் மனமோ, நாயகியோ ஒரு பொருள் இல்லை.