தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன்.
அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது.
சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே வேலையாகப் போய்விட்டதென அவர் சொல்வதை யாரும் காதில் வாங்கவேயில்லை. ஆனால், நாயகியான போதும்பொண்ணு, “நான் அந்த சாதியைச் சேர்ந்த பையனைக் காதலிக்கவில்லை. எனக்கு உன்னைத்தான் பிடிக்கும். அவனைக் கூடப் பிறந்தவனா நினைச்சுத்தான் பழகுறேன்” என்று நாயகனிடம் சொன்னதும், ஒட்டுமொத்த கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கும் சாதிப்பேய் போய்விடுகிறது. ‘படிக்கும் பொழுது ஏன் காதல்? கொஞ்சம் நாள் வெயிட் செய்யலாமே!’ என்ற கேள்வியைத் தவிர்த்துப் பார்த்தால், மிக நாசூக்காகப் பிரச்சனையைப் பூசி மெழுகியுள்ளார் இயக்குநர் அன்பழகன்.
மற்ற சாதியைச் சேர்ந்தவர்களைக் காதலிக்காமல் இருந்தாலே சாதிப் பிரிவினை ஒழிந்துவிடும் என்ற அரிய கருத்து முன் வைக்கப்படுகிறது. படிக்கவே கூடாத சாதியைச் சேர்ந்த ஒரு மாணவன் விபத்தில் இறந்தாலும், அதை அவர்கள் சாதியைச் சேர்ந்த கட்சியினர் எப்படி இடையில் புகுந்து பணம் சம்பாதிக்கப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என க்ளைமேக்ஸில் பரபரப்பாகப் பதிந்துள்ளார். இயக்குநர் மிகக் கவனமாக இருந்தும், அவரது சார்புத்தன்மை அப்பட்டமாய்த் தெரிகிறது.
சாட்டையில் அரசுப் பள்ளிகளின் அவலங்களைச் சுட்டிக் காட்டிய அன்பழகன், இம்முறை நேரடியாக சாதியைக் கையிலெடுத்துள்ளார். கல்லூரி மாணவர்கள் மத்தியிலும், பேராசிரியர்கள் மத்தியிலும் நிலவும் சாதி மனப்பான்மையைப் பட்டும் படாமலும் தொட்டுள்ளார். சமுத்திரக்கனியின் வசனங்களிலும், படத்தின் கருவிலுமுள்ள தீவிரத்தன்மை, படத்தின் திரைக்கதையில் இல்லை.
போதும்பொண்ணாக அதுல்யா ரவியும், பிரின்சிபலின் மகன் ப்ழனியாக யுவனும் நடித்துள்ளனர். இடைவேளையில் சாட்டையைச் சுழற்றும் முக்கிய வேலை அதுல்யா ரவிக்கு என்றால், தான் திருந்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்களையே திருத்திவிடும் முக்கியமான பணி யுவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நாடாளுமன்றம் தொடங்குவதால் அவர்கள் ஆளுமைத்திறன் அதிகரிக்குமென ஊக்கமளித்து, அதில் ஜனநாயகமும் இருக்கவேண்டுமெனச் சொல்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் ஒட்டுமொத்த கல்லூரிக்கும், ஒரு வகுப்பில் இருந்தே பிரதமர், துணை பிரதமர், முக்கிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது ஜனநாயகப் படுகொலை என்பது தமிழ்ப் பேராசிரியர் தயாளனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்குப் புரியாமல் போய்விடுகிறது. அவருக்கு, குடும்பங்கள் கூடி அனுகூலமாய் முடித்து வைக்கும் ஒரு அழகான காதல் அத்தியாயம் உண்டு. பெற்றவர்கள் சம்மதத்துடனான காதலுக்கு சமுத்திரக்கனியோ, இயக்குநர் அன்பழகனோ எதிரியில்லை என்பதை பார்வையாளர்களாகிய நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். வழக்கம் போல், சமுத்திரக்கனியின் சாட்டை பிரன்சிபலான தம்பி ராமையா மேல் வீசப்பட்டது போல் தெரிந்தாலும், இயக்குநர் அன்பழகன் தான் குறி வைத்த இலக்கில் கச்சிதமாக வீசியுள்ளார்.