Shadow

பிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

alien-and-bigg-boss

ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார்.

இயக்குநர் அமீர், “எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாகப் பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகைத் தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்றார்.

இயக்குநர் யு.கவிராஜ் பேசும்போது, “இப்படத்தின் தலைப்பு எதைக் குறிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பொதுவாக ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கடவுள் என்று தான் கூறுவார்கள். ஆனால், இந்தப் படம் அறிவியல் சார்ந்த படம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகத் தான் இருந்து வருகிறது. அதேபோல், வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? என்று கேள்விக்கான பதிலாக இந்தப் படம் இருக்கும். இது போன்று அறிவியல் சார்ந்த விஷயங்களைத் தமிழில் ஹாலிவுட் தரத்திற்குக் கொடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் தமிழில் நல்ல திரைப்படங்கள் உருவாகும்” என்றார்.

நடிகர் ஆரி, “ஏலியன் வைத்து எடுக்கும் படத்தில் நான் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். இயக்குநர் கவிராஜ்க்கு கிராஃபிக்ஸ் பற்றிய அறிவு இருக்கிறது. அவர் பாதி கதை கூறும்போதே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

அறிவியல் புனைகதைகள் மற்றும் ஏலியன் சார்ந்த விஷயத்தைப் படமாக்க ஹாலிவுட்டில் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்வார்கள். ஆனால், நாங்கள் அந்தத் தரத்திற்கு இணையாக EFX என்று சொல்ல கூடிய கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ஒரு வருடம் உழைத்திருக்கிறோம்” என்றார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

>> ஒளிப்பதிவு – லக்‌ஷ்மன்
>> படத்தொகுப்பு – கௌதம் ரவிச்சந்திரன்
>> கலை – பி.சேகர்
>> இசை – கார்த்திக் ஆச்சார்யா
>> சண்டை – டேஞ்ஜர் மணி