Shadow

மீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

ellam-mela-irukkaravan-pathupan-al

ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார்.

அவ்விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ” ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கிறவன் பார்த்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும் இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது.

இப்ராஹிம் ராவுத்தர், நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ் இனிமையாகப் பேசக் கூடிய கதாநாயகிக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர்கள் இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்த் அவர்களும் தான். இப்படத்தைத் தயாரித்துள்ள அவரது மகனுக்கு வாழ்த்துகள். கவிராஜ் இம்மாதிரி படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை.

பொதுவாக கதாநாயகிகள் மேடையில் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால், இலங்கைப் பெண்ணாக இருந்தாலும் தமிழில் பேசி அசத்திவிட்டார். ஆரியின் நடிப்பும், படம் தேர்வு செய்யும் பாணியும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் அமீர், “இப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது. விஜயகாந்திற்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரைச் செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள்? சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்.

மேலும், GV இல்லாத சினிமா என்பதே இல்லை என்று ஒரு காலம் இருந்தது. அப்படிப்பட்ட அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டார். அதுதான் சினிமா.

சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்தபின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் பயணிக்கும் போதே உங்களுடன் பயணித்தவர்களை உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்” என்றார்.

‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துபான்’ படத்தின் இயக்குநர் யு.கவிராஜ் பேசும்போது, “நான் சின்னத்திரையில் இருந்து வந்தவன். என் சேனல் சன் டிவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராவுத்தர் பிலிம்ஸின் அபுபக்கர் கதை கேட்டதும் என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்தார். அவரின் தந்தை இப்ராஹிம் ராவுத்தர் 1980, 90 களில் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்தார். அதேபோல அபுபக்கரும் வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் ஆரி, “ராவுத்தர் பிலிம்ஸ் அறிமுகமில்லாத பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். முகவரியில்லாத பலருக்கும் முகவரி கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இப்படத்தில் ஒப்பந்தமாகும் நேரத்தில் நான் நடித்த ‘நாகேஷ் திரையரங்கம்’ வெளியாகவிருந்தது. அப்படம் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் சம்பளத்தில் ஏற்ற இறக்கம் இருக்காது என்று கூறினார்கள் ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்தார்கள்” என்றார்.

தயாரிப்பாளர் முகமது அபுபக்கர், “தந்தையின் ஆசியுடன் முதல் படம் நடித்து தயாரித்திருக்கிறேன். படக்குழுவிற்கு நன்றி. என் தந்தையின் புகழ் குறையாத வண்ணம் மேலும், இது போன்று தரமான படங்களைத் தயாரிப்பதன் மூலம் பல தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்” என்றார்.