Shadow

Blue Star விமர்சனம்

மற்றுமொரு ஆடுகளத்தின் கதை.  ஊரில் இரண்டு கிரிக்கெட் அணிகள். அவர்களிடையே ஜாதி ரீதியிலான பிளவு. இரண்டு அணிகளும் முட்டிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் திரிய, வர்க்கம் அவர்கள் இருவரையுமே இன்னும் கீழாகத்தான் பார்க்கிறது என்கின்ற உண்மை ஒரு கட்டத்தில் முகத்தில் அறைய, இரு அணிகளும் கைகோர்த்து வர்க்கத்தை ஜெயிப்பதே இந்த “ப்ளூ ஸ்டார்” படத்தின் கதை.

படத்தின் துவக்கம் மிக மெதுவாகச் செல்கிறது. கதையற்ற காட்சிகளின் கோர்வையாக மட்டுமே கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும் படம், காலணி அணியினருக்கும், ஊர்க்கார அணியினருக்குமான 3 பால் மேட்சில் தான் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குப் பின்னர் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் விதிகளுக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, விளையாட்டுக்கே உண்டான சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்வதால் திரைப்படம் பரபரப்பாகச் செல்கிறது.  க்ளைமாக்ஸ் காட்சியில் பிரம்மாண்டமான கிரிக்கெட் போட்டியுடன் படம் முடிவுக்கு வருகிறது.

ரஞ்சித்தாக அசோக் செல்வன்.  களையான காலனி பையனுக்கான தோற்றத்துடன் நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.  தாயாக வரும் லிசியிடம் விளையாட்டுத்தனம் கலந்த அன்பு, தம்பியிடம் கண்டிப்புடன் கூடிய அன்பு, தன் ஏரியாவில் கிரிக்கெட்டில் கெத்து காட்டி, தன் குருநாதராகத் திகழும் இம்மானுவேல் ஆகிய பகவதி பெருமாள் மீது மரியாதை கலந்த அன்பு, காதலி ஆனந்தியாக வரும்  கீர்த்தி பாண்டியனிடம்  நட்புடன் கூடிய அன்பு என வெரைட்டியான நடிப்பைக் காட்டி இருக்கிறார்.  சாந்தனுவுடன் முறைத்துக் கொண்டு திரியும் இடங்களும், நட்பாகத் திரியும் இடங்களும் ரசனையானவை.

ராஜேஷ் ஆக வரும் சாந்தனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியான படம். ஊர்க்கார இளைஞனாக  திமிலுடன் திரிவதும், வட்டி வாங்க வந்த இடத்தில் தன் வயதுக்கு மூத்தவர்களை திமிருடன் பேர் சொல்லி அழைத்து அரட்டுவதும் என அடாவடியுடன் இருக்கும் கதாபாத்திரம், தன்னை இன்னொருவன் அப்படிக் கீழாக நடத்தும் போது, அதிலிருக்கும் வலியை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் கதாபாத்திரம். நிறைவாகச் செய்திருக்கிறார். கடைசி வரை தனக்கான தயக்கத்தை முழுவதுமாக உடைக்காமல் நெருங்கியும் நெருங்காமலும் அசோக் செல்வனுடன் பழகும் காட்சிகளில் கதைக்கும் கதாமாந்தர்களின் மனநிலைக்கும் நியாயம் சேர்க்கிறார்.

ரஞ்சித் தம்பியாக வரும் சாம் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சாம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  ப்ருத்வி பாண்டியராஜன் முதன்முறையாகத் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் நிருபித்திருக்கிறார். தன் அண்ணனுடனான முரண்பாட்டால் கோவித்துக் கொண்டு அலையும் காட்சிகளிலும், கிரிக்கெட் ஆடும் காட்சிகளில் என்ன சொல்கிறார்களோ அதற்கு எதிராக செயல்புரியும் இடங்களிலும் ஆடியன்ஸ் மனதினைக் கொள்ளையடிக்கிறார்.

இம்மானுவேல் ஆக வரும் பகவதி பெருமாளுக்கு நினைவுகூரத்தக்க மற்றொரு அற்புதமான கதாபாத்திரம். தன் காலனி பசங்களுக்கு கிரிக்கெட் காட் ஃபாதர் போல இருக்கும் பக்ஸ்  சுமக்கும் புறக்கணிப்பின் வலி சொல்லப்படாத ஒன்று. கால் நரம்புகள் துண்டிக்கப்பட்டு எம்.சி.எஃப் கிரவுண்டில் பிறர் ஆடும் கிரிக்கெட்டை கவனித்தபடி புல்வெட்டும் பணியில் ஈடுபடும் அவரின் கதாபாத்திரம், திறமை இருந்தும் கிரிக்கெட்டை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் பல்வேறு திறமைசாலிகளின் அடையாள பிம்பமாக நெஞ்சில் பதிகிறது.  அவர் கூறும் “வெறுப்பு அழிவுக்குத் தான் இட்டுச் செல்லும்” என்கின்ற  வசனம் இன்றைய தலைமுறை பாலபாடமாக வாழ்க்கையில் எடுத்துச் செல்ல வேண்டியது.

ரஞ்சித் மற்றும் சாம் இருவரின் தாயாக வரும் லிசி, கர்த்தர் தொடர்பான கருத்தாக்கங்களை காட்சிக்கு காட்சி தெளித்துக் கொண்டிருக்கும் ஒரு பரம வைராக்கியமான கிறிஸ்துவ அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக  நடித்திருக்கிறார். ஒவ்வொரு செயலையும்  கர்த்தரின் நடபடிகளுடன் ஒப்பிட்டு அவர் கூறும் வசனங்கள் கதையோடு சேர்ந்து காட்சிகளை கனமாக்குகிறது.

ஆனந்தியாக வரும் கீர்த்தி பாண்டியனின் கதாபாத்திரம் ஒரு கவிதை. ”கிரவுண்டுல ஒரே ஒரு தடவை பேட்டிங் செய்யணும்டா” என்று தன் ஆசையைக் காதலனிடம் கூறும் இடத்தில் கண்ணில் நீர் கோர்த்துக் கொள்கிறது. வாழ்க்கை குறித்தான, கேளிக்கை குறித்தான, லட்சியங்கள் குறித்தான,  காதல் மற்றும் கணவன் குறித்தான கனவுகளுடன் வாழ்ந்து, வீட்டின் தலைவாசல் படிக்கட்டோடு அந்தக் கனவுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு வாழும் எத்தனையோ இளம்பெண்களின் வாழ்க்கைக்கு ஒற்றைச் சாட்சியாகத் திரையை ஆக்கிரமிக்கிறார் கீர்த்தி. அவர் பேசும் அரக்கோணம் பாஷையைக் கேட்கும் போது, அசோக் எப்படிக் காதலில் விழுந்தார் என்பதற்கான நியாயம் புலப்படுகிறது.

சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் திவ்யா துரைசாமி பளீச்சென நம் பார்வைகளில் நிறைகிறார். ப்ருதிவியின் ஜோடியாக வரும் அவர் தெருவோர முனைகளில் கடந்து போகும் போதும், வரும் போதும் காட்டும் அந்தக் கடைக் கண் பார்வை, ஓராயிரம் கதை சொல்கிறது. ரஞ்சித்தின் தகப்பனாக வரும் இளங்கோ குமரவேல், மகனின் கனவைத் தூக்கி அலையும் தகப்பனை கண் முன் நிறுத்துகிறார்.

கிரிக்கெட் கோச்-சாக நடித்திருப்பவர், மாவட்ட அளவில் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள், அசோக் செல்வன் மற்றும் சாந்தனு அணியில் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள் இன்னபிற துணை கதாபாத்திரங்கள் என அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பக்கபலமாக இருப்பதோடு, “ரயிலைத் தள்ளும் மேகமே” பாடலில் தியேட்டருக்குள் தூறல் மழை சிந்துகிறது.  ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகன் அரக்கோணத்தின் அழகை அள்ளி வந்திருக்கிறார். ரயில் மற்றும் தண்டவாள காட்சிகள், கிரிக்கெட் மைதானத்தின் மேற்புர அழகு அனைத்தும் அட்டகாசமாக திரைச்சட்டகத்துக்குள் குடிபுகுந்திருக்கிறது.

இயக்குநர் ஜெயக்குமார் தான் வாழ்ந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டு, அதில் கிரிக்கெட் என்னும் விளையாட்டின் களத்தைப் புகுத்தி, அதன் மூலம் வெறுப்பு அரசியலை விட்டு விலகி ஒன்று கூடுவோம் என்கின்ற கருத்தாக்கத்தை முன்னிலைப்படுத்தும் விதத்தில்  இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

திரைக்கதையின் சுவாரசியங்கள் குறைவுதான் என்றாலும் கூட, காட்சிகளில் இருக்கும் நேர்த்தியும், கதாபாத்திரங்களின் சிறப்பான நடிப்பும் ஈடு செய்கின்றன.

மொத்தத்தில் “ப்ளூ ஸ்டார்” ஒரு கலகலப்பான கிரிக்கெட் மேட்ச்.

– இன்பராஜா ராஜலிங்கம்