
பாட்டல் ராதா விமர்சனம்
குடி நோய், ஒரு மனிதனை என்ன செய்யும், அவன் என்னென்னவெல்லாம் இழக்கிறான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது படம். இது மற்ற நோய்களைப் போல் உடற்பாதிப்பையும், மன அழுத்தத்தையும், பொருளாதாரத்தையும் மட்டும் காவு வாங்காமல், அவற்றோடு சேர்த்து சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் மொத்தமாகக் காலி செய்துவிடும். அனைவராலும் ஒதுக்கப்படும் ஈனநிலைக்குத் தள்ளிவிடும். அப்படித் தள்ளப்படும் பாட்டல் ராதா என பெயரைப் பெற்ற ராதாமணியின் வீழ்ச்சியும் மீட்சியும்தான் படத்தின் கதை.
குடி நோயாளி வீட்டுக் குழந்தைகளின் கண்களில் தெரியும் பாரத்தை எதிர்கொள்வது மிகவும் கடினம். அந்த சிறிய மனங்கள் சுமக்கும் வலி மிகக் கொடுமையானது. ராதாமணியின் மகளை, 'பாட்டல்' என்ற பட்டப்பெயரில் அழைத்து, அச்சிறுமியைத் தனிமையில் தள்ளி விடுகின்றனர். ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவத்தில் நட்பில்லாமல் தனிமைப்படுத்திக் கொள்ளும் அவலம் எச்சிறார்க்கும் நிகழக...