Shadow

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சிறுவயதில் சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்யப் போகும் போது இல்லாத தன்னம்பிக்கை முடி திருத்தம் செய்து முந்நூற்று அறுபது டிகிரி கண்ணாடிகளில் நம்மையும் திருத்தப்பட்ட நம் தலையையும் பார்த்து,, “ச்சே நாம கூட நல்லாதான்டே இருக்கோம்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வெளியேறும் போது தன்மானம் தாறுமாறாக ஏறியிருக்கும். நம்மை இப்படி அழகாக்கி அனுப்பிய சலூன் கடைக்காரர் மீது மரியாதை கலந்த அபிமானமும்,  அதே சீப்பு தான் வீட்டிலும் இருக்கிறது, ஆனால் இவர் சீவுவது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது என்கின்ற கேள்வியோடு வீடு திரும்புவோம். இந்த அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

அப்படி ஒரு அனுபவம் தான் படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும்  முடி திருத்துநராக வரும் லால் இருவருக்கும் இடையே நடக்கிறது. மேற்சொன்னபடி அப்படியே நடக்காமல் அறிமுகம் வேறு ஒரு புதிய திணுசில் ரசிக்கும்படியே நடக்கிறது. தன்னை அழகுபடுத்தி அனுப்பிய அந்த அறிவிலும், கத்தரியைக் கையாளும் வித்தையிலும் மதிமயங்கிப் போய் அந்தத் தொழில் மீது மிகப்பெரிய காதலும் மரியாதையும் ஏற்பட்டுவிடுகிறது. இதனைத் தொடர்ந்து நாயகன் தன் பால்யம் முடிந்த இளமைப் பிராயத்தில் தன் தொழில் சார்ந்த வாழ்க்கையை முடி திருத்துநராக  ஆக்கிக் கொள்ள முயல்கிறான்.  அதற்கு பல்வேறு தடங்கல்களும் எதிர்ப்புகளும் வர, அதை மீறி நாயகன் அந்தத் தொழிலில் சாதித்தானா என்பதே  சிங்கப்பூர் சலூனின் மீதிக்கதை.

படத்தின் துவக்கத்தில் வரும் குழந்தைகளின் அத்தியாயமும், மாணவ பருவத்தின் எதிர்பாலின ஈர்ப்புடன் வரும் அத்தியாயமும் ரசனையாக இருக்கின்றன. முடி திருத்துநரான “சாச்சா”விற்கும் அந்த இரு சிறுபிள்ளைகளுக்குமான உறவு துவங்கும் புள்ளியில் சிரிப்பாணி அள்ளுகிறது. குழந்தைகளாகவும் மாணவர்களாகவும் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அவர்கள் வந்து போகும் காட்சிகளில் கதையோ, திரைக்கதை நகர்வோ பெரிதாக இல்லை என்றாலும் காட்சிகள் அலுப்பூட்டாமல் கலகலப்பாக நகர்கின்றன.

குழந்தை, மாணவ பருவ ஆர்.ஜே.பாலாஜியினை விடுத்து,  இளைஞனாக வளர்ந்து நிற்கும் ஆர்.ஜே.பாலாஜியிடம் கதை வரும் போது, கதையின் சுவை திசை மாறுகிறது.  சிறந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக மாற வேண்டும் என்பதை நோக்கி கதை நகரும் காட்சிகளில் பெரிய  சுவாரசியமோ, அழுத்தமோ இல்லை.

முதல்பாதியை, சிறுவர்களுக்கு  அடுத்து முழுவதுமாக ஆக்கிரமிப்பவர்  சத்யராஜ் தான். அவரின் கதாபாத்திர வடிவமைப்பு அருமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.  ஆர்.ஜே.பாலாஜியின் கருமித்தன மாமனாராக வரும் சத்யராஜ், பொண்ணின் கல்யாணத்தை முன்னிட்டு செய்யும் அட்ராசிட்டிகள் ஏ1 ரகம்.  கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும், எங்கு நடத்த வேண்டும் என்று அவர் விரிவாக விளக்கும் போது, ரோபோ சங்கர் அடிக்கும் டைமிங் ஒன் லைனர்கள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன.

கல்யாணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை தொழில் துவங்க மாமனார் உதவ வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வரும் போது, அவர் போட்டுக் கொடுக்கும் செக்கும், அதற்கு ரியாக்ட் செய்யும் ரோபோ சங்கர் மற்றும் அவரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் அப்ளாஸ் அள்ளுகிறார்கள்.

இதுமட்டுமின்றி ப்ரீயாக பீர் கிடைக்கிறது என்று வந்து, அங்கு  அவர் செய்யும் அலப்பறைகள், தாய்மாமன் காலத்து சத்யராஜ் என்னும்  லந்து கட்டும் நடிகனை மீண்டும் நம் கண் முன் நிறுத்துகிறது. பாருக்குள் நுழையும் போது அவரின் ஸ்டைலான நடையும், பணம் கேட்டுவிடுவார்களோ என்று தன் மாப்பிள்ளைகளைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதும், பின்னர் வேறு வழியின்றி மாப்பிள்ளைகளின் குடிகாரச் சங்கத்தோடு ஐக்கியம் ஆவதும், போதையில் செக்கை எடுத்து பணம் நிரப்பும் காட்சிகளும், போதை தெளிந்தவுடன் செக்கைத் தேடிக் கிடைக்காமல், வீடியோ பார்த்து விதர்த்துப் போய் நிற்கும் காட்சிகளில் பட்டாசு கிளப்புகிறார்.

நாயகன் ஆர்.ஜே.பாலாஜி இவர்களுக்குப் பிறகு தான் கவனம் ஈர்க்கிறார். தன் காமெடி கலகலப்புகளைக் கைவிட்டுவிட்டு சீரியஸாக தன் லட்சியத்தை அடைய அவர் உர்ரென்ற முகத்துடன் படம் முழுக்க வருவது ஏனோ ஒட்டவேயில்லை. படத்தின் முதல் காட்சியில் இருந்து, ‘சாகப் போகிறேன், சாகப் போகிறேன்’ என்று சதா அணத்திக் கொண்டே இருந்தாலும், அவர் சாகமாட்டார் என்பது நமக்குத் தெரிந்துவிடுவதால், அவர் இறந்துவிடுவாரோ என்கின்ற பயமோ பதட்டமோ நமக்கு வருவதே இல்லை.

காதல் கசந்து போய் கண்ணீர் சிந்தும் நேரத்தை விட, அந்த நேரத்தில் பெஸ்டிக்கு புரோட்டோ சாப்பிட்டுக் கொண்டே அவர் கொடுக்கும் விளக்கம் சிலாகிக்கும்படி இருக்கிறது. அந்த ஒற்றைக் காட்சி தவிர்த்து ஆர்.ஜே நம்மை வேறெங்கும் கலகலப்பூட்டவே இல்லை.  லால் சிறிது காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தன் பண்பட்ட நடிப்பால் மிளிர்கிறார்.

காதலியாக வரும் மீனாட்சி சவுத்ரியும், மனைவியாக வரும் ஆன் சீத்தலும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள் என்றாலும் இருவருக்குமே நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரம் இல்லை.  மற்றொரு ஹேர் ஸ்டைலிஸ்டாக வரும் ஜான் விஜய் வில்லனாக மாறாமல் இருந்ததே பெரும் நிறைவு, நண்பனாக வரும் கிஷான் தாஸ் குறையில்லாமல் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். தலைவாசல் விஜய், ‘உங்கப்பா சொன்னாலும் சரியாத் தான் இருக்கும்’ என்று சொல்லும் இடத்தில் கைத்தட்டல் ஒலி பலமாகக் கேட்கிறது.

ஹேர் ஸ்டைலிஸ்ட் தொழிலை தேர்ந்தெடுத்தப் பின்னர் அவர் அந்தத் தொழிலின் உச்சம் தொட்டால் தானே அவர் நாயகனாக இருக்க முடியும் என்கின்ற பழைய பாணியிலான கதையில் ஃபிக்ஸ் ஆகிப் போய், திரைக்கதையில் சுவாரசி,யத்தைக் கூட்ட, யாரை வில்லன் ஆக்குவது என்று தெரியாமல், பிரச்சனைகளை எப்படி உருவாக்குவது என்று குழம்பிப் போய், இறுதியில் இயற்கை சீரழிவை சம்பந்தமே இல்லாமல் கையிலெடுத்து இரண்டாம் பாதியில் ஏதோ கதை சொல்லி இருக்கிறார்கள்.

திருவண்ணாமலைக்காரர் என அறிமுகமாகும் அரவிந்த்சாமியும், நடிகர் மற்றும் இயக்குநராகவே வந்து போகும் ஜீவா, லோகேஷ் கனகராஜ் போன்றோரும் ஒவ்வொரு காட்சிகளில் வந்து போகிறார்கள். ஏன் கதையில் சம்பந்தமே இல்லாமல் அவர்கள் வருகிறார்கள் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, அரவிந்த்சாமிக்கு, ஆர்.ஜே-வுக்கு ஊக்கம் கொடுக்கும் கதாபாத்திரமும், ஜீவா மற்றும் இயக்குநர் லோகேஷுக்கு  ஆர்.ஜே. பாலாஜிக்கு ஆதரவு கொடுத்து ட்விட் செய்யும் கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

முதல்பாதியில் முருகனைக் கும்பிடப் போனவன், இரண்டாம் பாதியில் இயேசுநாதரைக் காணப் போவதைப் போல் சம்பந்தமே இல்லாம எழுதப்பட்டு இருக்கிறது திரைக்கதை. ஆலமரம், அதன் கிளிகள், சதுப்பு நிலப் பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம், நகர்புறத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படும்  ஏழை எளிய மக்கள், டான்ஸ் போட்டி, வி.ஐ.பிகளின் வருகை என எங்கெங்கே திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போனக் குழந்தையைப் போல் திக்குதிசை தெரியாமல் அலையும் திரைக்கதையை இறுதிக்காட்சியில் இன்றைய முதல்வர் ஸ்டாலினை இழுத்துப் பிடித்து கொண்டு வந்து திரைப்படத்தை முடித்து வைக்கிறார்கள். நமக்கும் அப்பாடா முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு வருகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிஜி தொழில்நுட்பத்தோடு தொடர்புடைய காட்சிகளாக வருகிறது. எவையெல்லாம் சிஜி காட்சிகள் என்பதை சின்னக் குழந்தை கூடத் தெளிவாக சொல்லும்படி படு சொதப்பலாக இருக்கின்றன அக்காட்சிகள்.

பிடித்த தொழிலை செய்யத் துவங்கினாலே அது சாதனை தானே! அதன் மூலம் அவன் ஒரு சாதாரணனின் வாழ்க்கை வாழ்ந்தால் அதென்ன பெருங்குற்றமா? எந்தத்  தொழில் செய்தாலும் அதிலும் உச்சம் தொட வேண்டும் என்பதை நோக்கியே ஏன் தமிழ் திரைக்கதை ஆசிரியர்கள் பயணிக்கிறார்கள் என்று தெரியவில்லை.  அன்னபூரணி தன் குடும்பத்தின் தடைகளைத் தாண்டி சமைக்கச் சென்றால் மட்டும் போதாது, அவள் அதில் உச்சம் தொட வேண்டும், அதே போல் தான் ஹேர் ஸ்டெயிலிஸ்ட் ஆனால் மட்டும் போதாது, அதிலும் நாயகன் உச்சம் தொட வேண்டும் என்று ஏன் தான் பரபரக்கிறார்களோ தெரியவில்லை.

வேல்ஸ் ப்லிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை ரெளத்ரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா படங்களை இயக்கிய கோகுல் எழுதி இயக்கி இருக்கிறார்.  சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமோன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் சிங்கப்பூர் சலூன் முதல்பாதியில் ஆங்காங்கே கலகலப்பாகவும் இரண்டாம் பாதியில் கடுகடுப்பாகவும் நகருகிறது.

சிங்கப்பூர் சலூன் –  பிசிறில்லாமல் இன்னும் நல்லா ஒட்ட நறுக்கியிருக்கலாம்.

– இன்பராஜா ராஜலிங்கம்