Shadow

போங்கு விமர்சனம்

pongu movie review

ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ ரூமில் வேலை செய்கிறார் ‘ரேர் பீஸ்’ நட்டி. ஒரு கார் ஒன்றினை டெலிவரி செய்யப் போகும் பொழுது, அக்காரை எவரோ துப்பாக்கி முனையில் நட்டியை நிறுத்தி லவட்டிக் கொண்டு போய் விடுகின்றனர். இதனால் நட்டியின் வேலை போகிறது; கூடவே ‘பிளாக்-லிஸ்ட்’ செய்யப்படுவதால் நட்டி மற்றும் அவரது நண்பர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட, நட்டி தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்கிறார். அது அவரை எங்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.

பேச்சில், நடிப்பில் எனக் கொஞ்சம் கூட தன் முந்தைய படங்களில் இருந்து மாறிடாத நடராஜன். அவருக்கு ஜோடியாக ருஹி சிங் நடித்துள்ளார். ஹேக்கிங் செய்வதில் கில்லாடியான பாத்திரத்தில் நடித்துள்ளார். சி.சி.டி.வி. கேமிராக்களை முடக்குகிறார்; BMW காரின் கதவை அன்லாக் செய்கிறார். அவரது உதட்டசைவு வசனங்களோடு ஒத்துப் போவதால், சங்கடமின்றி அவரது அழகு மனதில் பதிகிறது.

நட்டியின் நண்பனாக அர்ஜூனன் நடித்துள்ளார். அவரை விட, அப்பாவியாக வரும் முனீஷ்காந்த் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில், கொஞ்ச நேரமே வந்தாலும் சாம்ஸ் செமயாகக் கலக்கியுள்ளார். வழக்கம் போல் ஆஜானுபாகு சரத் லோகிதஸ்வா வில்லத்தனத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். மதுரையைக் கைக்குள் வைத்திருக்கும் பாண்டியாக அறிமுகமாகும் அவர், ஆந்திர எம்.பி.யின் கையாளெனச் சித்திரித்து இருப்பது கதைக்கு ஒட்டவில்லை.

காவல்துறை உயரதிகாரியாக அதுல் குல்கர்னியைத் திரையில் பார்த்ததும் ஏற்படும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர். சிகரெட் பிடிப்பது, கை முஷ்டியை மடக்கி விட்டுக் கொள்வது, ஃபைல்களையும் சி.சி.டிவி காட்சிகளையும் மாறி மாறிப் பார்ப்பதென அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன.

கதைப்படி விறுவிறுப்பாகப் பயணிக்க வேண்டிய படம். ஸ்பீட் ப்ரேக்கராய் வரும் ஐட்டம் பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். கார் சேஸிங் காட்சிகளைப் பிரமாதப்படுத்தியுள்ளனர். இயக்குநர் தாஜ் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.