முதல் ஃப்ரேம் முதல் கடைசி ஃப்ரேம் வரை நேட்டிவிட்டி மாறாமல் நகைச்சுவையாக அதகளப்படுத்தியுள்ளனர்.
35 வயதில் தன் பேரனுக்குத் திருமணமானதற்காக முனியாண்டிக்குக் கிடாய் ஒன்றை நேர்த்திக் கடனாகப் பலி கொடுக்க வேண்டிக் கொள்கிறார் ஒரு கிராமத்துப் பாட்டி. உற்றார் உறவினர் புடை சூழ, புது மணத் தம்பதியருடன் தடபுடலாகக் கிராமத்திலிருந்து கிடாய், சேவல்களுடன் லாரி புறப்படுகிறது. வழியில், எதிர்பாராத விதமாய் நேரும் விபத்தால் ஒரு உயிர் பலி நேர்ந்து விடுகிறது. அதிலிருந்து கிடாய் வெட்டச் சென்றவர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் அட்டகாசமான கதை.
படத்தின் தலைப்பே அட்டகாசமான தற்குறிப்பேற்ற அணியாக வைத்துக் கலக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அதாவது இயல்பாய் நடக்கும் ஒரு விஷயத்திற்கு, கவிஞர் தன் கற்பனையை ஏற்றுவது ‘தன் குறிப்பு ஏற்றம்’ ஆகும். அதே போல், கிடாயை வெட்டச் சென்றவர்கள் கோயிலுக்கே போய்ச் சேராத கதைக்கு, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ எனத் தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர். ஏதாவது தலைப்பை வைத்து விட்டு, அதை க்ளைமேக்சில் எப்படியேனும் ஒரு வசனத்தில் கொண்டு வந்துவிடும் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் சினிமாவில், தலைப்பு விஷயத்திலேயே “அட!” போட வைக்கிறார் இயக்குநர்.
வயதைச் சொன்னால், டென்ஷனாகி விடும் ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார் விதார்த். ஆனால் அவரை நாயகன் என்றோ, கதையின் நாயகன் என்றோ சொல்ல இயலாது. அவரது பெயரைக் கூட, நாயகி ரவீணா ரவிக்குப் பெயருக்குப் பிறகே போடுகின்றனர். கதாநாயகியைப் பிரதானப்படுத்திய கதையோ என்ற ஐயத்தை அது எழுப்பியது. அப்படியும் இல்லை. படத்தில் வரும் கிராமத்து மாந்தர்கள், தங்கள் இயல்பான போக்காலும், நையாண்டியான பேச்சு வழக்காலும், படம் பார்க்கும் அனுபவத்தைக் கொண்டாட்டமாக்கியுள்ளனர். குறிப்பாக, படத்தின் முதற்பாதி மிக்க நிறைவைத் தருகிறது.
படத்தை ஒட்டுமொத்தமாகக் கொண்டாடவும், தனித் தனியாக ஒவ்வொரு வசனத்தைக் குறிப்பிட்டுக் காட்டிச் சிலாகிக்கவும், படம் தன்னக்கத்தே ஏராளமான கலகலப்பான கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கொண்டுள்ளது.. உதாரணமாக, ‘அரும்பாடுபட்டு அதைச் செய்தேன், இதைச் செய்தேன்’ எனச் சொல்லும் ஹலோ கந்தசாமி, விதார்த்தின் ஊர்க்காரர் கொண்டியாக வந்து லந்து விட்டுக் கொண்டிருக்கும் ஆறுமுகம் எனப் படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள். கிடா வெட்ட வருபவர், சமையற்காரர், லாரி டிரைவர், க்ளீனர், லாரி ஓனர், பூசாரி, ஊர்முழங்கி எனக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வடிவத்தில், குண வார்ப்புடன் தனித்துவமாக, அசல் கிராமத்து மனிதராய் வாழ்ந்துள்ளனர்.
நாயகனின் மாமா வக்கீல் வாசுதேவனாக வரும் ஜார்ஜைப் படத்தின் நாயகனாகச் சொல்லலாம். பாதி படத்திற்கு மேல் அறிமுகமானாலும், அவர் நிலைமையைச் சமாளிக்கும் விதம், அனைத்தையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சாதுர்யம் என அட்டகாசமான குணச்சித்திர நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். R.V.சரணின் ஒளிப்பதிவும், K.L.பிரவீனின் படத்தொகுப்பும், படத்தின் சுவாரசியத்தைத் தக்க வைக்கிறது. ஆனால், இந்தப் படத்தின் வெற்றிக்கு அதன் வசனகர்த்தாக்களான V.குருநாதனும், சுரேஷ் சங்கையாவுமே முழுமுதல் காரணகர்த்தாக்கள். அதுவும் பட முடிவில், ‘சாமான் இல்லாம என்னத்த வச்சுக் கிண்ட?’ எனச் சொல்லும் சமையற்காரராக வரும் சித்தன் மோகனின் உடற்மொழி ஒன்று போதும் இயக்குநரின் குசும்பைப் பறைசாற்ற!
கோயிலுக்குச் சென்றவர்கள், ஒரு பிணத்தை வைத்துக் கொண்டு படும்பாடும், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதமும் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கண்டிப்பாகத் தரும். இப்படத்தைத் தமிழில் வந்திருக்கும் உலக சினிமா என நாம் மார்தட்டிச் சொல்லிக் கொள்ளலாம்!