Shadow

பூமராங் விமர்சனம்

Boomerang-movie-review

ஆஸ்திரேலியப் பழங்குடியினர்கள் (aboriginals) பயன்படுத்திய எறி ஆயுதத்தின் பெயர் தான் பூமராங். அவற்றை வீசி எறிந்தால், இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் வீசியவரிடமே திரும்பும். பழந்தமிழர்களிடமும், இதே தொழில்நுட்பத்திலான “வளரி” எனும் ஆயுதம் உபயோகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆயுதத்திற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பைக் குறியீட்டுப் பெயராகத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

“லைஃப் இஸ் எ பிட்ச்” என்ற க்ளைமேக்ஸில் வில்லனிடம் சொல்ல வந்து, பிட்ச் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், ‘லைஃப் இஸ் எ பூமராங்’ என்பார் படத்தின் நாயகன். எந்த வினையை விதைத்தானோ அதே வினையால் அறுக்கப்படுவான் என்கிற பொருளில் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, இரண்டு நதிகளை இணைப்பதில் ஈடுபடும் சக்தி என்பவரைக் கொன்ற வில்லனை, சக்தியின் முகத்திலேயே வந்து பழி தீர்க்கிறார் சிவா. யாரைக் கொன்றாரே, அவரே திரும்பி வந்து பழி தீர்க்கிறார்.

தீ விபத்தில் சிக்கி சக்தியின் முகம் 90% சிதைந்து விட, சிவாவின் முகத்தைச் சக்திக்கு ‘முகமாற்று அறுவைச் சிகிச்சை’ செய்கின்றனர். சிவா என நினைத்து, சக்தியைக் கொல்லப் பார்க்கின்றனர் சிலர். யார் அவர்கள், ஏன் தன்னைக் கொல்லப் பார்க்கின்றனர், சிவா யாரெனத் தெரிந்து கொள்ள, சக்தி முயல்வதுதான் படத்தின் கதை.

90% சிதைந்த முகம், சிகிச்சை, அதர்வா – மேகா ஆகாஷ் காட்சிகள், அதர்வாவைக் கொல்ல நடக்கும் முயற்சிகள் எனப் படத்தின் முதற்பாதி, கண் சிமிட்டும் நேரத்தில் முடிந்துவிடுகிறது. சதீஷின் நகைச்சுவை செல்ஃப் எடுக்கவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் வரும் ஆர்.ஜே.பாலாஜி, சகட்டுமேனிக்கு சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி, நல்லதொரு குணசித்திரக் கதாபாத்திரமாகப் பரிணமிக்கிறார். கதநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தாலும், இந்துஜாவின் கதாபாத்திரம் மனதில் நிற்குமளவு உள்ளது.

முதற்பாதியில், ‘எவடு’ எனும் தெலுங்குப் படமும், இரண்டாம் பாதியில், ‘கத்தி’ படமும் நினைவில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதர்வா, ஆர்.ஜே.பாலாஜி, இந்துஜா ஆகியோர் நதிகளை இணைக்க முயலும் காட்சிகள் எமோஷ்னலாக நன்றாக உள்ளன.

‘தேசமே கண் முழிச்சுக்கோ; ஒரு கூட்டமாய் கை பிடிச்சிக்கோ’ என்று பாடலும், எடுக்கப்பட்ட இடமும் விதமும் ரசிக்கும்படி உள்ளது. படத்தின் பலவீனம், அதன் க்ளிஷேவான வில்லன். அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்குப் படத்திற்கு இசையமைத்த ராதன், இப்படத்திற்கு இசையமைத்ததோடு, ‘தேசமே’ பாட்டின் பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவும், ராதனின் இசையும் படத்தை அழகாக்கும் காரணிகள். நதி நீர் இணைக்கும் பணி நிறைவடைந்ததா இல்லையா எனச் சொல்லப்படாததாலோ என்னவோ, படத்தில் ஒரு முழுமையை உணரமுடியவில்லை.