உலகில் அதிக மக்களால் பார்க்கப்பட்டு வரும் நெடுந்தொடர். சொல்லப் போனால், பாகுபலி படத்தை விட பல மடங்கு கெத்தான, மாஸான தொடர் இந்த அரியணைகளின் விளையாட்டு.
HBO சானலில் அதிகாரப்பூர்வமாக சுமார் 1 கோடி பேர் இந்த நெடுந்தொடரைப் பார்த்திருக்கிறார்கள். இது தவிர உலகெங்கும் இணையதளங்களின் மூலம் தரவிறக்கிப் பார்த்தவர்கள் இன்னொரு 1 கோடி பேர் இருப்பார்கள். இந்த உலகில் இரண்டே வகையினர் தான் உண்டு. ஒன்று, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பாத்தவர்கள்; மற்றொன்ரு, இனிமேல் பார்க்கப்போகிறவர்கள் என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். கடந்த 10 வருடமாக தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வரும் நெடுந்தொடர் எனலாம்.
2011ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த டீவி சீரியல், வருடத்துக்குப் பத்து எபிசோட்கள் வீதம் இது வரை 7 சீசன்கள், 67 எபிசோட்கள் வந்துள்ளன (கடைசியாக வெளிவந்த 7 ஆவது சீசனில் 7 எபிசோட்கள் தான்). சராசரியாக ஒரு எபிசோட் ஒரு மணி நேரம். அடுத்த மாதம் 14 ஆம் தேதி இந்த நெடுந்தொடரின் 8 ஆவது சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இப்பவே உலகம் முழுக்க GoT காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
2014ஆம் ஆண்டு தான் நண்பர்கள் மூலம் இந்தத் தொடர் பற்றிக் கேள்விபட்டேன். இந்தத் தொடரைப் பார்க்காகவர்களை மனிதர்களாகவே பார்க்காத சில க்ரூப்பும் இருப்பதாக அறிந்த போது, அப்படி என்ன, அவ்ளோ பெரிய அப்பாடக்கரா இந்த சீரியல் என்ற மிதப்புடன் தான் பார்க்க ஆரம்பித்தேன். இதுவே நான் பார்க்கத் துவங்கிய முதல் ஆங்கில டீவி சீரியல். அப்பவே மொத்தம் 40 எபிசோட்கள் பார்க்கவேண்டியிருந்தது. முதல் எபிசோட் பார்த்ததுமே ஒருவித மாயச்சூழலில் சிக்கிக்கொண்ட உணர்வு.
40 எபிசோடையும் 10 நாட்களில் (ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 8 மணி நேரம்) இந்த சீரியலைப் பார்த்து முடித்தேன். எனது பள்ளிக்காலத்தில் முதன்முதலில் பொன்னியின் செல்வனையும், சிவகாமி சபதத்தையும் இப்படி நேரம் காலமே தெரியாமல் படித்த உணர்வு மீண்டும் ஏற்பட்டது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், இந்த டீவி சீரியல் ஓர் அனுபவம். It has to be experienced.
ஜார்ஜ் மார்ட்டின் எழுதிய, “பனி – நெருப்பு பாடல் (A Song of Ice and Fire)” எனும் நாவலைத் தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டிருக்கிறது. பழங்கால கிரேக்க வாழ்க்கை முறையை ஞாபகப்படுத்தும் “வெஸ்டிரோஸ் மற்றும் ஈசோஸ்” ஆகிய கற்பனை நிலப்பரப்பில் இந்தக் கதை நிகழ்வதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். வெஸ்டிரோஸ் உலகில் மொத்தம் ஏழு நாடுகள். ஒவ்வொறு நாட்டையும் ஒரு வம்சம் ஆண்டு வருகிறது. இந்த வம்சங்கள் அனைத்தும் தனித்துவமான அடையாளம், பின்னணி கொண்டவை. இந்த ஏழு நாடுகளைக் கட்டுப்படுத்தும் பேரரசு – இரும்பு அரியணை. இந்த அரியணையைக் கைப்பற்ற ஏழு நாட்டு அரசவம்சங்களுக்குள் நடக்கும் போரட்டம், துரோகம், சூழ்ச்சி, அதற்கான தந்திரங்களே மொத்த கதையின் அடியிழை.
குறிப்பாகத் தற்போது இரும்பு அரியணையில் இருக்கும் லானெஸ்டர் பரம்பரை, வடதுருவப் பகுதியை ஆட்சி செய்யும் ஸ்டார்க் பரம்பரை, ஏற்கனவே பதவியில் இருந்து துரத்தப்பட்ட டார்காரியன் பரம்பரை ஆகிய மூன்று குடும்பங்கள் இந்தக் கதையின் ஆதார சக்தி.
இது தவிர வடக்கில் ஓங்கி வளர்ந்த மிகப்பெரிய, மிக நீண்ட பனிச்சுவருக்கு அப்பால் இருக்கும் வெள்ளை நடையாளர்கள் என்று அழைக்கப்படும், உயிர் பெற்ற லட்சக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும் பிரேதக்கூட்டம் வெஸ்டிரோஸ் நிலப்பரப்பை அழிக்கப் படையெடுக்கிறது. அந்தப் பனிச்சுவரைப் பாதுகாக்க, தமது வாழ்நாளை ஒப்படைத்த ப்ரதர்ஹிட், பிரேத கூட்டம் நாட்டுக்குள்ளே வராமல் பார்த்துக்கொள்கிறது. கிழக்கே கடலைத் தாண்டிப் பாலைவனத்தில் இருக்கும் நாடோடிக்கூட்டம் என மகாபாரதக்கதையைப் போல பல கிளைக்கதைகளுடன் இதன் நிகழ்வுகள் நீண்டு சென்று கொண்டேயிருக்கும்.
இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் காலம். அடுத்த மாதம் ஏறக்குறைய இந்தத் தொடரின் அடுத்த சீசன் வெளியாகும் போது நாமும் நமது ஜனநாயக கடமையை ஆற்றிக்கொண்டிருப்போம். பல கட்சிகள், அவர்களின் கொள்கைகள், தனிப்பட்ட தலைமையின் விருப்பு வெறுப்புகள், வாரிசு அரசியல் என எல்லாம் இருந்தாலும் கூட்டணிகள் டெல்லியின் அரியணையைக் கைபற்றுவதை சார்ந்தே அமையும். நீதி, நியாயம் எல்லாம் இரண்டாம் கட்டம். ஏறக்குறைய இந்தத் தொடரின் கதைக்களனும் இதே போன்று இருப்பது சுவாரசியம் தான்.
அரசியல், சமுதாயம் என்றில்லாமல், இந்த நெடுந்தொடரின் காட்சிகளை நமது அன்றாட வாழ்வில், அலுவலகச் சூழலில், மேலாண்மை முறைகளில் நிறையவே தொடர்புப்படுத்திப் பார்க்கலாம். குறிப்பாக ஸ்ட்ராடிஜி பற்றிய பல மேலாண்மைத் தத்துவங்களை இந்த நெடுந்தொடரின் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் வழியே நாம் கற்றுக் கொள்ளமுடியும். ஒருவகையில் இந்த நெடுந்தொடர் நமக்கெல்லாம் ஒரு பாடம்.
இந்த சீரியலில், கதாபாத்திரங்களின் கட்டமைப்பை மறக்கவே முடியாது. எந்தக் கதாபாத்திரமும் முழுவதும் நல்ல பாத்திரம் என்றோ, முழுவதும் கெட்ட பாத்திரம் என்றோ பிரித்துப் பார்க்க முடியாதபடி, ஒவ்வொரு கதாபாத்திரமும் தீதும் நன்றும் கலந்தே இருக்கும். குறிப்பாக டயனரிஸ் டார்காரியன், நெட் ஸ்டார்க், ஜான் ஸ்னோ, டைரியன் லானெஸ்டர், செர்சி லானெஸ்டர் ஆகிய கதாப்பாத்திரங்கள் சாகாவரம் பெற்றவை. விதியின் சூதாட்டத்தில் மனிதர்கள் எப்படியெல்லாம் அலைகழிக்கப்படுகிறார்கள் என்பதை ஆழமாக வெளிப்படுத்துகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு டயனரிஸ் கேரக்டர் ரொம்பப் பிடிக்கும். ஏதுமறியாத இளம் பெண், மிகப்பெரிய சக்தியாக தலைவராகப் பரிணாமம் பெறுவதைச் செம்மையாக திரைக்கதையாக்கி இருப்பார்கள். ஒருவகையில் உலக அளவில், காட்சி ஊடகத்தில் சித்தரிக்கப்பட்ட மிக வலுவான பெண் ப்ரொட்டகானிஸ்ட்டாக டயனரிஸைக் குறிப்பிடலாம். அதற்கிணையாக, செர்சி. உலகமகா வில்லி.
டெக்னிகலாகவும் இந்த சீரிஸ் செம்ம. ஒவ்வொரு எபிசோடும் ஒரு முழுத் திரைப்படத்துக்குறிய கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. காட்சிபடுத்தப்பட்ட லேண்ட்ஸ்கேபும் மற்றும் பின்னணி இசையும் (குறிப்பா, டைட்டில் கார்ட் இசை, மெஸ்மரைஸிங்) அற்புதமாக அமைந்திருக்கும். சில வருடங்களுக்கு அந்த இசையை எனது ரிங்டோனாக வைத்துக் கொண்டிருந்தேன். இளம் இயக்குநர்கள் கண்டிப்பாக இந்த நெடுந்தொடரை முழுமையாகப் பார்க்கவேண்டும். குறைந்தபட்சம் 50 கதைகளுக்கான கரு, இதில் கிடைக்கக்கூடும்.
இந்தத் தொடரின் பலவீனம் என்று பார்த்தால் நிச்சயம் இந்த சீரியல், கண்டிப்பாக அடல்ட்களுக்கான கன்டென்ட். மிக அதிக குரூரம், வன்முறை, அதிர்ச்சி தரும் காட்சிகள் இருக்கும். பல இடங்களில் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட நியூடிட்டியும் ஒரு குறை தான். அதே போல முதல் இரண்டு சீசன்கள் ஜெட் வேகத்தில் போகும். ஆனா, மூன்றாம் மற்றும் நான்காம் சீசன்கள் ஜவ்வாய் இழுத்திருப்பார்கள். மீண்டும் ஐந்தாம் சீசனிலிருந்து செம்மயா பிக்கப் ஆகியிருக்கும். அதே போல ஷாக் வேல்யூவிற்காக, நல்ல கேரக்டர்களையெல்லாம் பொட்டுப் பொட்டுன்னு கொன்று விடுவதைக் கதாசிரியர் ஜார்ஜ் மார்ட்டின் வழக்கமாக வைத்திருக்கிறார். அதுவே இந்த சீரியலை பார்ப்பவர்களுக்குப் பெரிய மன அழுத்தத்தைத் தரும். கடைசி சீசனில் எல்லா முக்கிய கேரக்டர்களும் சாகப் போகிறார்கள் என்று வேறு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் சுமார் 2 மாதங்கள் வெளிவரும் இந்த சீரியல், கடந்த வருடம் வெளிவரவில்லை. அடுத்த மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று, இந்த நெடுந்தொடரின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்போகுது. இதுவே இந்தத் தொடரின் கடைசி சீசன். உலகமெல்லாம் இருக்கும் ரசிகர்கள் இப்பவே இந்த டீவி சீரியலின் க்ளைமாக்ஸ் கொண்டாட்டத்துக்குத் தயாராயிட்டாங்க. சரித்திர, ஃபேண்டசி கதைகளில் ஈடுபாடும், பல மணி நேரங்கள் சீரியல் பார்க்கும் அளவுக்கு நேரமும் இருப்பவர்கள் தவறவே விடாமல் உடனே பார்க்கத் துவங்கலாம். இந்தியாவில் ஸ்டார் சேனல் இந்தத் தொடரை ஸ்ட்ரீம் செய்கிறது. முதல் எபிசோடிலிருந்து கூட ஹாட்ஸ்டாரில் பார்க்கமுடியும்.