Shadow

கபிலவஸ்து விமர்சனம்

Kabilavasthu-movie-review

பொதுக் கழிப்பறையில் பிறந்த முருகன், அங்கேயே வளர்ந்து வேலை செய்கிறான். அந்தக் கழிப்படத்தை ஒட்டி வாழும் நடைபாதை மனிதர்களைப் பற்றிப் படம் பேசுகிறது.

கபிலவஸ்து என்பதைக் காரணப் பெயராகக் கொள்ளலாம். லும்பினியில் பிறந்த சித்தார்த்த கெளதமர், இளவரசனாக வளர்ந்தது கபிலவஸ்துவில்தான். புத்தா ஃப்லிம்ஸ் என்பது படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர் என்பது உபத்தகவல்.

சொந்த நாட்டிலேயே, குடியுரிமை அடையாளம் ஏதுமற்று அகதிகளாக வாழும் நடைபாதை மக்கள் வாழுவதற்குப்படும் சிரமங்களைப் பதிந்துள்ளார் இயக்குநர் நேசம் முரளி. தெருவோரங்களில், சாலை ஓரங்களில் உண்டு, உறங்கி, மடிந்து போகும் மனிதர்களைப் பற்றியது கபிலவஸ்து படம். எந்தக் கணக்கெடுப்புக்கும் அடங்காததாலும், கேட்பாரற்ற நிலை இருப்பதாலும், வழக்குகளை முடிக்க போலீஸ்காரர்களால் பலிகடாவாக்கப்படுகிறார்கள். வீடற்ற ஃபிளாட்பாரவாசியிடம் தட்டிப் பறித்த 200 ரூபாயைத் திருப்பித் தர விரும்பாத ஒரு வீட்டு ப்ரோக்கர், காவல்துறைக்கு 2000 ரூபாய் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களையே சிறைக்கு அனுப்புகிறான்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டிக் கொலை செய்பவனிடம் பணம் வாங்கிக் கொண்டு, “ஃப்ளாட்பாரத்தில் வசிப்பது தவறு” எனப் பாதிக்கப்பட்டவர்களைத் துரத்த அதிகாரத்தால் முடிகிறது. சொந்தம் என யாராவது இறந்தவரின் உடலுக்கு உரிமை கொண்டாடினால், அவர்களையும் அதிகாரம் விட்டு வைப்பதில்லை.

நடைபாதையில் வசிப்பவர்களைப் பற்றிய மிக முக்கியமான பதிவாக அமைந்துள்ளது இப்படம். படத்தின் பிரதான கதாபாத்திரமமான முருகனாக இயக்குநர் நேசம் முரளியே நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக டயானா எனும் பாத்திரத்தில் நந்தினி நடித்துள்ளார். பழைய பொருட்களை வாங்கும் கடையில் பணி புரியும் டயானா, அங்கே கிடைக்கும் கூலிங் கிளாஸை முருகனுக்கு என எடுத்து வைக்கும் காட்சி, அவர்களது காதலை விளக்குகிறது. திருமணமானதும் கட்டண கழிப்பறையிலேயே, அகல் விளக்குகளால் அலங்கரித்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். கழிப்பறையில் கூட அவர்களை வாழ விடமாட்டேங்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் மன்சூர் அலிகான்.

வேளாங்கண்ணி எனும் பாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாவின் ஒரே ஆசை, ஒரு வீட்டில் வசிக்கவேண்டும் என்பது. அதற்காகப் பள்ளி நேரம் போக, மற்ற நேரத்தில் அவர் உழைக்கத் தொடங்குகிறார். அவருக்கு உதவ சில நல்லுள்ளங்களும் கிடைக்கிறார்கள். ஆனால், கையில் காசிருந்தும் அவரால் ஒரு வீட்டிற்கு வாடகைக்குப் போகமுடியவில்லை என்பதுதான் முகத்தில் அறையும் யதார்த்தம்.

வாடகைக்குக் கூட வீடு கிடைக்காத ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? எண்ணற்றவர்கள் அப்படி இன்னும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என தேர்தல் வாக்குறுதிகளால் நிரம்பும் இந்நேரத்தில், இப்படம் வெளியாகியிருப்பது நெஞ்சைக் கனக்கச் செய்யும் நகைமுரணின்றி வேறென்ன?