Shadow

பைரி விமர்சனம்

புறா பந்தயத்தில் ஏற்படுகின்ற முன்பகை சிலரின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதே பைரி திரைப்படத்தின் ஒன்லைன்.

தமிழ் சினிமாவில் Cult movies வகையறா சினிமாக்கள் மிக மிக குறைவு. தமிழ் சினிமாவில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட கொண்டாடப்பட்ட கல்ட் மூவிஸ் என்று சொன்னால், ஆரண்ய காண்டம், சுப்ரமணியபுரம், புதுப்பேட்டை, பருத்தி வீரன், சூது கவ்வும் போன்ற திரைப்படங்களைக் கூறலாம். விக்ரம் வேதா மற்றும் பீட்ஸா படங்களைக் கூட ஒரு வித்த்தில் கல்ட் திரைப்படங்களாக எடுத்துக் கொள்ளக் கூடும்.

இது போன்ற திரைப்படங்களில் என்ன இருக்குமென்றால் யதார்த்தம் ரத்தமும் சதையுமாக இருக்கும், யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான கதைகூறும் முறை இருக்கும். எல்லாக் கதாபாத்திரங்களும் சரி தவறுகள்: கலந்து படைக்கப்பட்டு இருப்பார்கள். திரைமொழியில் சொல்ல முயன்றால் Grey Shade அதாவது நல்லவனென்றும் சொல்ல முடியாத கெட்டவன் என்றும் சொல்ல முடியாத தன்மையுடன் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கும். வாழ்க்கை முறையில் சிறுபான்மையாகக் கருதப்படும் விசித்திரமான விதிவிலக்கான வாழ்க்கை வாழ்பவர்கள் இப்படங்களின் முக்கிய கதை மாந்தர்களாக இருப்பார்கள்.

இப்பொழுது உதாரணப் படங்களை எடுத்துப் பாருங்கள். ஆரண்யகாண்டம், சுப்ரமணியபுரம், புதுப்பேட்டை, பருத்தி வீரன், விக்ரம் வேதா, பீட்ஸா போன்ற படங்கள் ரத்தமும் சதையுமாக படமாக்கப்பட்டு இருக்கும்.. தன் முதலாலியின் ஆசை நாயகி சுப்புவை அடையும் சப்பை, குடி கூத்தடித்துக் கொண்டு கொலை செய்ய அலையும் சுப்ரமணியபுர நாயகர்கள், தன் நண்பனின் தங்கைக்கு திருமணமேடையில் வலுக்கட்டாயமாக தாலி கட்டிவிட்டு, தன் முதலாளியைப் போட்டுத் தள்ளிவிட்டு அவர் இட்த்திற்கு வரும் தனுஷ், காதலைப் பற்றியோ காதலியைப் பற்றியோ கவலையின்றி கண்டவளையும் மேய்ந்து விட்டு, குஸ்தி வாத்தியாரை குண்டியில் குத்தும் வீரன், நல்ல வாழ்க்கை வாழ தப்பு செய்தால் தப்பில்லை என்று வாழும் சூது கவ்வும் விஜய் சேதுபதி, வைரங்களை கொள்ளையடிக்க முயலும் விஜய் சேதுபதி இப்படி இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாமே Grey கதாபாத்திரங்கள் தான். இவர்கள் வாழ்ந்து வரும் வாழ்க்கையும் விதிவிலக்கான விசித்திரமான வாழ்க்கை முறை தான். ஆக இதுதான் Cult திரைப்படங்கள்.

வெகுகாலங்கள் கழித்து அது போன்ற ஒரு கல்ட் திரைப்படமாக வந்திருக்கும் திரைப்படம் தான் “பைரி” முன் சொன்னது போல் புறா பந்தயத்தில் ஏற்படும் பகையும் விளைவுகளும் தான் கதை. நாயகன் ராஜலிங்கம், அவன் நண்பன் அமல், இவர்களின் நண்பர்கள் கூட்டம், இவர்களை வழிநடத்தும் ரமேஷ் பண்ணையார், இவர்களின் எதிராளியாக வந்து நிற்கும் ரவுடி சுயம்பு இவர்கள் தான் பைரியின் முக்கிய கதாபாத்திரங்கள்.

இது போன்ற ஒரு கல்ட் சினிமாவை தமிழில் பார்த்து வெகுகாலங்கள் ஆகின்றது. புறா பறத்தல், குடி கூத்து, காதலிக்க விருப்பமில்லை என்று சொன்னப் பின்னரும் விரட்டி விரட்டி காதலித்தல், தாயை மரியாதை இன்றி ஏசுதல், அடிக்கப் பாய்தல், புறாக்களின் மீதுள்ள பாசத்தால் எதிராளிகளைக் கொல்ல பாய்தல், நண்பன் அமலுக்காக பெற்ற தாய் உட்பட எவனையும் எதிர்க்க துணிதல், தனக்கு குரு போன்று இருக்கும், எல்லா ஆபத்து நேரத்திலும் தன்னையும் தன் நண்பர்கள் கூட்ட்த்தையும் காத்து நிற்கும் ரமேஷ் பண்ணையாரின் சொல்லையும், அறிவுரைகளையும் சமயங்களில் அறவே மதிக்காமல் திரியும், சரியும் தவறும் கலந்த ராஜலிங்கம் கதாபாத்திரத்தில் சையது மஜீத் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

உயிர் நண்பனாக வரும் அமல் கதாபாத்திரத்தில் இயக்குநர் ஜான் கிளாடியே நடித்திருக்கிறார். தன் மாற்றுத் திறனாளி அப்பாவிற்கு எல்லா சேவகமும் செய்து கொண்டு, புறாக்களின் பூர்விகத்தை பொய்யாகக் கூறி அதிக விலைக்கு விற்று, விற்ற காசை விலை மாதுக்கும் விடலை காதலிக்கும், சரக்கடிக்கும் நண்பர்களுக்கும் சர்வ சாதாரணமாக செலவழித்துக் கொண்டு, தன்னையும் தன் பிறப்பையும், தன் தாயையும் அவதூறாகப் பேசும் தன் நண்பன் லிங்கத்தின் தாயை சகித்துக் கொண்டு இன்னும் தன் நட்பை இறுகப் பற்றும் இறுக்கத்திலும், தன் நண்பனுக்காக யாரையும் எதிர்க்க துணியும் துணிச்சலிலும், உயிருக்கு பயந்து பதறும் பதட்டத்திலும் பட்டையைக் கிளப்பி இருக்கிறார் ஜான் கிளாடி.

நாயகன் லிங்கத்தின் அம்மாவாக வரும் விஜி சேகர் தன் வாழ்நாளுக்கும் சொல்லிக் கொள்ளும்படி நடித்திருக்கிறார். புறா பறத்தலிலும் பந்தயத்திலும் தன் கொழுந்தனும், அண்ணனும் பிற சொந்தங்களும் வாழ்க்கையினைத் தொலைத்தது போல் எங்கே தன் பிள்ளையும் வாழ்க்கையை தொலைத்துவிடுவானோ என்கின்ற பயத்தில், தன் பிள்ளைக்குக்கு புறா பறத்தல், புறா வளர்த்தல் தொடர்பான விடயங்களைக் கற்றுக் கொடுத்த தன் மகனின் உயிர் நண்பனை வார்த்தைகளால் வறுத்தெடுப்பதும், தன் சொல் பேச்சி கேட்காமல் புறா வளர்க்கப் போகிறேன் என்று சொல்பவனை “புறாவை மீனை ஆய்ற மாதிரி ஆஞ்சி புடுவேன் என்று சொல்லி மிரட்டுவதும், நான் படிக்கிறதையே விட்டுப் புடுவேன் என்று பதிலுக்கு மிரட்டும் மகனிடம் பணிவதும், பரீட்சை எழுதப் போகும் மகனை பயபக்தி மற்றும் நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புடன் அனுப்பி வைத்து காத்திருப்பதும், மகன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்று தெரிந்ததும் செத்துத் தொலை என்று சாபமிடுவதும், தன் பிள்ளையின் நண்பனைத் திட்டச் சென்ற இடத்தில் அவனின் தாயின் நடத்தையை அசிங்கப்படுத்துவதும், ஊனமுற்ற தகப்பனின் ஆண்மையை கேலி பேசுவதும், தன் மகன் பிழைப்புக்காக வெளியூர் போய்விட்டான் என்று சொன்னதும் அமலை சாப்பிட அழைப்பதும், அவனைப் பார்க்க ஆஸ்பத்திரி சென்று நிற்பதுமாய் அன்பு, ஆக்ரோஷமும், வெறுப்பு, கோபம், விரக்தி, அறுவறுப்பு கலந்த தன் மகனின் வாழ்க்கை நன்றாக இருந்தால் மட்டும் தனக்கு போதும் என்று எண்ணி வாழும் ஒரு அச்சு அசல் தாயின் கதாபாத்திரத்தை நம் கண் முன் நிறுத்துகிறார் விஜி சேகர்.

வில்லனான சுயம்பு கதாபாத்திரத்தில் வரும் வினு லாரன்ஸும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தன் வீட்டு முன்னால் பட்டாசு போட்டவன் எவன் என்பதை வேவு பார்க்க வரும் யுக்தி ஒருவித திகிலைக் கொடுக்கிறது. அவரின் உடல்வாகு, உடல்மொழி, எதையும் பொருட்படுத்தாத அசட்டை செய்யும் நடிப்பு போன்றவை கதைக்கும் காட்சிகளுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது. அவர் வளர்த்த புறாவை பந்தயத்தில் பறக்கவிடும் காட்சியில் மல்லுக்கட்டும் லிங்கத்தையும் சுயம்பையும் பார்த்து ஒட்டுமொத்த ஊரும் பதைபதைத்துக் கிடக்கிறது. ஊரில் இருக்கும் ஒட்டு மொத்த அரசியல்வாதியும் ஒவ்வொருவராக வந்து சமரசம் பேசியும் அடிபணியாத அகங்காரமும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி எண்ணிப் புழுங்கி கர்ஜிப்பதுமென தன் ஒட்டு மொத்த வில்லத்தனத்தையும் உருவத்தில் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்,

ஒட்டு மொத்த படத்தில் உடனே மனதை ஈர்க்கும் உத்தம கதாபாத்திரம் என்றால் அது ரமேஷ் பண்ணையார் தான். உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும், அன்பும் பண்பும் நிறைந்த பண்ணையாராக ரமேஷ் ஆறுமுகம் மனதில் நிற்கிறார். “மக்களே மக்களே அவசரப்படாதீங்க மக்களே என்று எதற்கெடுத்தாலும் எகிறிக் குதிக்கும் இளம் பட்டாளத்தை எச்சரிப்பதும், அவர்களுக்கு ஏதோவொரு ஆபத்து வரும் போது எதிரில் வந்து ஆதரவாக அவர்கள் பக்கம் நிற்பதும், பசங்க மேல கை வைக்க வேணாம்னு சொல்லுங்க என்று கர்ஜிப்பதும், என்னை மீறி அவுங்களைத் தொட்டுப் பாருங்க என்று சவால் விடுவதாகவும், அய்யா மீது கொண்ட மாறாத அன்புடன் கடைசியில் எல்லாற்றையும் அவர் பாதத்தில் இறக்குவதும், அமல்காக ஒவ்வொரு அரசியல்வாதியையும் அழைத்து வந்து சமரசம் பேச முயல்வதும் என ரமேஷ் ஆறுமுகம் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அமலின் தந்தையாக வரும் அந்த மாற்றுத் திறனாளியின் உடல்மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அத்தனை யதார்த்தம். அதிலும் குறிப்பாக மருத்துவமனையில் வரும் கடைசிக் காட்சியில், என் புள்ளைக்கு வேற யாரும் வேணாம்டா.. நான் உழைச்சி கஞ்சி ஊத்துறேண்டா.. மாதா எம் புள்ளைய காப்பாத்துவாடா என்று கதறும் இடத்தில் நம் இதயத்தைக் கணக்கச் செய்கிறார். லிங்கத்தின் காதலியாக வரும் மேக்னா எலன், அத்தைப் பெண்ணாக வரும் சரண்யா ரவிச்சந்திரன் இருவரில் சரண்யா ரவிச்சந்திரனே மனதில் நிற்கிறார். மேக்னா எலனுக்கு காட்சிகளும் குறைவு, அதில் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது.

புறாக்களின் வகை, புறா வளர்த்தலில் இருக்கும் நுணுக்கங்கள், அவை பறக்கும் முறைகளை வைத்து அதனை இனம் பிரிப்பது, அதன் தண்ணீர் தாகம், இணையுடன் இணைவதில் இருக்கும் தாகம், இறக்கை அடிக்கும் வேகம், பறந்து திரியும் காலம் என இயக்குநர் கிளாடி டீட்டெயில் ஆக புறா வளர்த்தல் மற்றும் பறத்தல் பற்றி வகுப்பெடுத்தது சிறப்பு.

இதுவரை இல்லாத அளவிற்கு நாகர்கோவில் வட்டார வழக்கை பிசிறின்னு “பைரி” படத்தில் இடம்பெறச் செய்த நேர்த்திக்கு ஒரு பூங்கொத்து. இதுவரை அதிகமாகப் பேசப்படாத அய்யாவழி வாழ்க்கை முறை அதன் நுணுக்கங்களுடன் சமரசமின்றி பதிவு செய்த அழகுக்காக மீண்டும் படக்குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

மிகப்பெரிய கூட்டத்தினை படத்தின் அத்தனைக் காட்சிகளிலும் வைத்துக் கொண்டு அவர்களிடம் மிக இயல்பான நடிப்பை தன் முதல் படத்திலேயே அநாயசமாகப் பெற்று மையக் கதாபாத்திரங்கள் துணை கதாபாத்திரங்கள் என எல்லோரையும் மிகச் சிறப்பாக நடிக்க வைத்து, நம்மை ஆச்சரியக் கடலில் மூழ்கடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடியின் அசாத்தியமான திறமைக்கும் பாராட்டுக்கள்.

ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது. நாகர்கோவிலின் நிலப்பரப்பை அதன் வெக்கையும், செம்மையும் கலந்து காட்சிபடுத்தியிருக்கிறது. சண்டைக் காட்சிகளில் எங்கிருந்து எப்படி காட்சிகளை சிறைப்படித்தார் என்பதை சில காட்சிகளில் யூகிக்க முடியாத அளவிற்கு திறம்பட ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். அருண்ராஜின் இசை படத்தின் துவக்கத்திலேயே பட்த்திற்கான Moodயை Set செய்யத் துவங்கிவிடுகிறது. படம் நெடுக விரவி இருக்கும் பதட்டத்தின் உணர்வலைகளை ஒருங்கே கடத்தியிருக்கிறது. சண்டை இயக்குநர் விக்கியின் உழைப்பு அபாரமானது. ஒவ்வொரு சண்டையும் ஊர்ப்புறங்களில் நடக்கும் உண்மையான சண்டைகளை திருட்டுத்தனமாக படம் பிடித்துவந்து காட்டிகிறார்களோ என்று எண்ணும் அளவிற்கு தத்ரூபமாக இருக்கிறது

அது போல் படத்தில் வரும் சிஜி ஷாட்டுகளுக்கும் தங்கமென்று தரச்சான்று கொடுக்கலாம். 35 நிமிடங்களுக்கு வரும் 950 சிஜி ஷாட்களில் எது உண்மை எது சி.ஜி என்றே தெரியாத அளவிற்கு சிஜி தொழில்நுட்பக் குழு பணியாற்றி இருக்கிறது. அவர்களுக்கு ஹாட்ஸ் ஆஃப்.

இப்படி பாராட்டுவதற்கு பல அம்சங்கள் பட்த்தில் இருந்தாலும் சில கேள்விகளும் இல்லாமல் இல்லை. புறா வளர்த்தலில் முதன் முதலாக பறக்கத் துவங்கும் புறாக்கள் எதன் அடிப்படையில் பிறந்த இடத்திற்கே மீண்டும் திரும்பி வருகின்றன, அது போல் போட்டி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை கூட பறந்து சென்று வரும் புறாக்கள் உண்டு என்றால் அவை போகின்ற இடத்தில் தரை இறங்கியிருக்காது என்பது எப்படி நிச்சயமாகத் தெரியும். அதை எப்படி வரையறை செய்கிறார்கள், அது அவ்வளவு தூரம் ஓய்வின்றி எப்படி பறந்தது..?? அது அப்படி பறந்திருக்கிறது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிப்பது எப்படி என்பதான அடிப்படையான கேள்விகளும் பதில்களும் படத்தில் இல்லை. இதனால் புறா பந்தைய போட்டிகள் போட்டியாளர்களின் கூச்சலினால் பதட்டம் நிறைந்ததாக இருக்கிறதே அன்றி பரபரப்பு நிரம்பியதாக இல்லை.

இரண்டாவதாக மிகமிக நல்லவராக காட்சிப்படுத்தப்படும் ரமேஷ் பண்ணையார் கதாபாத்திரம் புறா பறத்தல் போட்டிகளை முன்னெடுப்பதும் நெறிப்படுத்துவதும் செய்து வந்தாலும் கூட, தன்னைச் சுற்றி இருக்கும் இளைஞர்கள் புறா வளர்த்தலையும் பறத்தலையும் முழுநேர வேலையாகக் கொண்டு இயங்குவதால் அவர்கள் எதிர்காலம் வீணாகிறது என்பதை உணர்ந்து அவர்களை நல்வழிப்படுத்தும் காட்சி ஏன் இல்லை.

மூன்றாவது இப்படத்தில் போலீஸ்காரர்களின் பங்கு என்ன..?? அரசியல்வாதிகள் கூட சமரச பேச்சுவார்த்தையின் போது வந்து போகிறார்கள். ஆனால் போலீஸ்காரர்கள் துள்ளத் துடிக்க இரண்டு கொலை முயற்சி நடந்தும் கூட மருந்திற்குக் கூட கதைக்குள் வராமல் இருக்கிறார்களே ஏன்..? அமலைப் பாதுகாப்பது தான் இப்போதைய தேவை என்றால் ரமேஷ் பண்ணையாருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவனை சரணடையச் செய்து மிகப் பாதுகாப்பான ஒரு சிறைக்கு அவனை அனுப்பி இந்தப் பிரச்சனையினை ஆறப் போட்டிருக்கலாமே…? சமரசம் பேச வரும் எவருமேவா இதைப் பற்றிப் பேசவில்லை.

நான்காவதாக புறா வளர்ப்பவர்களையும் புறா பறத்தலையும் செய்யும் அனைவரையும் வசைபாடி, தன் பிள்ளையை அவர்களிடம் இருந்து பிரிக்கத் துடிக்கும் லிங்கத்தின் தாய், ரமேஷ் பண்ணையார் அடைந்த வெற்றியைப் பார்த்துத் தான் தன் வீட்டிலும் தன் பிள்ளை கூடு போட்டான் என்பது தெரிந்தும், ரமேஷ் பண்ணையாரை ஏன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. புறா பறத்தலில் ஆதர்ஷ நாயகனாக இருக்கும் ரமேஷ் பண்ணையாரிடமே அதனை வெறுத்து ஒதுக்கும் லிங்கத்தின் தாய் அடைக்கலம் அடைவது முரணாகத் தெரிகிறது.

அது போக இது போன்ற கல்ட் திரைப்படங்களில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல் கதாபாத்திரங்கள் அனைத்தும் பார்வையாளனிடமிருந்து துண்டாடப்படுவது. ஏற்கனவே சொன்ன உதாரணப் படங்களான ஆரண்ய காண்டம், சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், புதுப்பேட்டை போன்ற படங்களிலும் மைய கதாபாத்திரத்தை நம்மால் எளிதாக பின் தொடரவும் முடியாது, அந்த மையக் கதாபாத்திரங்களுடன் நமக்கு எந்தவித பிணைப்பும் ஏற்பட்டிருக்காது. காரணம் இப்படங்களின் மையக் கதாபாத்திரங்கள் எல்லாமே கருப்பு வெள்ளை கதாபாத்திரங்கள். இயல்பான வாழ்க்கை வாழாமல் எங்கோ ஒரு மூலையில் எவரோ ஓரிருவர் வாழும் இயல்புக்கு மீறிய சிறுபான்மை வாழ்க்கை முறை வாழ்பவர்கள். இவர்களோடு பார்வையாளர்கள் இயல்பாக கனெக்ட் ஆக முடியாது. அதே பிரச்சனை தான் “பைரி” திரைப்பட்த்திலும் நட்ந்திருக்கிறது. பட்த்தில் புறா வள்ர்ப்பதையே முழுநேர வேலையாகக் கொண்டு வாழும், அதன் வெற்றிக்காக அதன் உயிருக்காக சுத்தியலைக் கொண்டு தாக்கி மனித உயிரை எடுக்கத் துணியும், தன் வீட்டின் மேற்கூரை ஓடுகளை உடைக்கத் துணியும் கருப்பு வெள்ளை கதாபாத்திரங்கள் பார்வையாளர்களுக்கு அந்நியப்படுகிறார்கள்.

கதை மாந்தர்களை பார்வையாளர்கள் எந்தக் காட்சியிலும், எந்த உணர்வின் அடிப்படையிலும் பின்பற்ற பின் தொடர முடியாமல் பின் வாங்குகிறார்கள். கிட்ட்த்தட்ட இந்த மனநிலையுடன் தான் முதல்பாதி காட்சிகள் முழுக்கவே கடக்கிறது.

இந்த இடத்தில் தான் சுப்ரமணியபுரமும், பருத்தி வீரனும், சூது கவ்வும் திரைப்படமும் ஆரண்ய காண்டமும் வித்தியாசப்படுகின்றன. பைரி, சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், சூது கவ்வும், ஆரண்ய காண்டம் இந்த ஜந்து திரைப்படங்களும் கருப்பு வெள்ளை கலந்த நாயக பிம்பங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவை. பெரும்பான்மை வாழ்க்கை முறையை கையில் எடுக்காமல், எங்கோ எவரோ வாழும் விதிவிலக்கான வாழ்க்கை முறையை கையிலெடுத்தவை.. இதனால் இப்படங்களில் ஆடியன்ஸ் உள்நுழைவதற்கான திறவுகோலை கண்ட்டையாமல் முட்டி மோதி வெளியேவே நின்றுவிடுவான்.

இந்தக் கூற்று உண்மையானால் எப்படி சுப்ரமணியபுரமும், பருத்தி வீர்னும், சூது கவ்வும் திரைப்படமும் பெரும் வெற்றி பெற்றது. ஒரே மாதிரியான கருப்பு வெள்ளை கலந்த கதாபாத்திரங்கள், வழக்கத்திற்கு விநோதமான வாழ்க்கை முறை கொண்டவர்களின் கதை என அதே சாயலில் வெளிவந்த ஆரண்யகாண்டம், புதுப்பேட்டை, பைரி போன்றவை ஏன் பெரிய வரவேற்ப்பை பெறாமல் போயின.

காரணம் ஒன்று தான். ட்ரீட்மெண்ட். சுப்ரமணியபுரம், பருத்தி வீர்ன், சூது கவ்வும் படங்களின் முதல் பாதியில் பார்வையாளன் பின் தொடர்ந்தது நாயகனை அல்ல. அதில் வரும் காமெடியை, நகைச்சுவையை. சுப்ரமணியபுரம் திரைப்பட்த்தில் பூட்டிய வீட்டிற்கு முன் போதையில் சலம்புவதும், மைக் செட் போடுபவரை வைத்து செய்த காமெடிகளும் தான் பார்வையாளனை முதல் பாதியில் பட்த்திற்குள் இழுத்தவை, பருத்தி வீரனை எடுத்துக் கொண்டால் டக்ளஸ் வகையறா காமெடிகளும், சரவணன் மற்றும் கார்த்தியின் லந்து பேச்சுகளும் தான் முதல்பாதியில் பார்வையாளனுக்கான திறப்பு, நுழைவுகோல்.எல்லாம். சூது கவ்வும் திரைப்படத்தில் நாம் முதலில் ரசித்து படத்துடன் ஒன்றியதற்கு காரண கர்த்தாக்கள் நயன்தாராவிற்கு கோவில் கட்டியவன், ரூம் கொடுத்த ப்ரெண்டை எதிர்த்து சரக்கில் சம பங்குகொடுத்தவனுக்காக சண்டை போட்டவன், இதை சட்னி என்று சொன்னால் இட்லி கூட நம்பாது என்றவன் இவர்களால் தான். அதன் பின்னர் விஜய் சேதுபதியின் கோமாளித்தனங்களும் வீரனின் காதலும் சோகமும், சுப்ரமணியபுரத்தின் நட்பின் துரோகமும், காதலின் துரோகமும் நம்மை எளிதாக உள் இழுத்துக் கொண்டன.. ஆரண்யகாண்டம் திரைப்படம் ஓரளவிற்கு ரசிக்கப்பட்ட்தற்கு காரணமும் அந்த ப்ளாக் க்யூமர் காமெடிகள் தான். கமல் ரஜினியை வைத்து ஆண்டி வெறியன் அடிக்கும் காமெடிகள், சப்பையை வைத்து முன்னெடுக்கப்படும் காமெடிகள், சப்பை சுப்புவுடன் இருக்கும் போது தண்ணீர் கேன் போட வரும் பையன் இவைகள் தான் நம்மை உள்ளிழுத்தவை. வெகு ஜன பார்வையாளர்களுக்கு மேற்சொன்ன திரைப்படங்களில் முதல் திறப்பாக அமைந்தது அந்த காமெடிகளும் அந்த காமெடி செய்யும் கதாபாத்திரங்களும் தான்.   ஆனால் புதுப்பேட்டை திரைப்படத்தில் முதல்பாதியில் அல்ல முழுப் படத்திலும் காமெடி என்பது துளியும் இருக்காது. படம் முழுக்கவே ராவாக இருக்கும். “பைரி” திரைப்படத்தில் ஆரம்பத்தில் ஆங்காங்கே சில காமெடிகளை முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.

பைரியின் ஆரம்பத்தில் ஓரளவிற்கு நம்மை ஈர்க்கும் கதாபாத்திரமாக இருப்பது அமல் கதாபாத்திரம் தான். நண்பனின் அன்னை அந்த அளவிற்கு அசிங்கப்படுத்தியும் தன் நட்பை தொடரும் அமல் மீதும், அவனின் மாற்றுத் திறனாளி தந்தை மீதும் தான் பரிவும் அன்பும் தோன்றுகிறது,. லிங்கத்தின் மீது அதே உணர்வு ஏற்படுவதற்கான சூழல் திரைக்கதையில் எங்கும் அமையாமல் போனது சோகம். நாயகனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் அவனுக்காக அமல் வந்து நிற்கும் இடத்தில் தான் ஒரு வழியாக பார்வையாளன் தன்னை உள்நுழைப்பதற்கான திறப்பு திரைக்கதையில் கிடைக்கிறது.

அது போல் என்னதான் யதார்த்தம் இயல்பு என்று இருந்தாலும் கூட கடைசி க்ளைமாக்ஸ் காட்சியில் லிங்கத்தின் அம்மா வந்து பேசுவதை இயல்பான பார்வையாளனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போவதும் ஒரு குறை. அது போல் படத்தில் நினைத்து நினைத்து ரசித்து சிலாகிப்பதற்கான காட்சிகள் இல்லாமல் இருப்பதும் ஒரு பலவீனம். எந்த இலக்குமற்ற இளைஞர் பட்டாளம் புறா பந்தயத்தில் ஜெயிப்பதற்காக உயிர்ப்பலி வரை செல்வதெல்லாம் தவறான உந்துதலைக் கொடுத்துவிடுமோ என்கின்ற அச்சமும் ஏற்படுகிறது.

மொத்தத்தில் பைரி கதையாகவோ, திரைக்கதையாகவோ, கதையின் கருப்பொருளாகவோ பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் கதாபாத்திர வடிவமைப்பாலும் காத்திரமான நடிப்பாலும், முதல் படத்திலேயே குறை சொல்ல முடியாத அற்புதமான மேக்கிங்கினாலும் ”பைரி” முதல் பாகத்தை முடித்த விதம் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாலும், வழக்கத்தை மீறிய புதுவிதமான முயற்சியாக இருப்பதாலும் இந்த பைரிக்கு ஆதரவு கொடுக்கலாம்.

இன்பராஜா ராஜலிங்கம்