கடாவர் (Cadaver) என்றால் உயிரற்ற உடல் எனப் பொருள்.
படப்பை காட்டுக்குள், காருடன் சேர்ந்து எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கிடைக்கிறது. முற்றிலும் உருக்குலைந்த அந்தச் சடலத்தைக் கொண்டு, போலீஸ் சர்ஜனான பத்ராவின் உதவியோடு கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண்கிறது காவல்துறை. கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலையாளி யார், கொலைக்கான மோட்டிவ் என்ன என்பது போன்ற விசாரணைக்கான பதிலே படத்தின் முடிவு.
இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ்க்குத் தமிழில் இது முதற்படம். மலையாளத்தில் அவரது முதற்படம் ஜோசஃப். இரண்டு படத்திற்குமான ஒற்றுமை என்னவென்றால், இரண்டின் கருவுமே ஏறக்குறைய ஒன்றேதான். சஸ்பென்ஸைத் தக்கவைக்க உதவும் ரஞ்சின் ராஜினுடைய பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
ஏசிபி (ACP) விஷாலாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். பத்ரா தான் மாஸ்டர் ப்ரெயின் என்பதால், இவரது பாத்திரத்திற்கான டீட்டெயிலிங் கம்மியாகவே உள்ளது. ஆனாலும் தன் கம்பீரமான ஸ்க்ரீன் ப்ரெஸன்சால் ஈர்க்கிறார். தனது மகனைக் கொலைகாரனிடம் பறி கொடுக்கும் தந்தை அலி ரகுமானாக இயக்குநர் வேலு பிரபாகரன் நடித்துள்ளார்.
நர்ஸ் பிரியாவாக, ரித்விகா நடித்துள்ளார். கதைக்கு உதவும் முக்கிய கதாபாத்திரம். என்றாலும், அவசர அவசரமாகத் தோன்றி மறைகிறார். இரண்டு இளம்பெண்களுக்குத் தந்தையாக மாறுபட்ட கேரக்டரில் ராட்சசன் வினோத் நடித்துள்ளார். காவல்துறை அதிகாரி மைக்கேலாக முனிஷ்காந்த் நடித்துள்ளார். காமெடியனாக அல்லாமல் குணச்சித்திர நடிப்பில் தோன்றியுள்ளார்.
அபிலாஷ் பிள்ளையின் திரைக்கதையில், பத்தாம் வளவு, நைட் ட்ரைவ் முதலிய மலையாளப் படங்கள் வெளியாகியிருந்தாலும், கடாவர் படமே அவரது எழுத்தில் உருவான முதற்படம். இயக்குநர் அனூப் எஸ். பணிக்கருடன் இணைந்து சுவாரசியமான திரைக்கதையை அமைத்ததால் தான், அமலா பாலே முன் வந்து இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.
மனைவி ஏஞ்சலையும், கர்ப்பத்தில் இருந்த குழந்தையையும் இழந்து, பொய்யான கொலை குற்றச்சாட்டிற்காக சிறையில் இருக்கும் வெற்றியின் வேடத்தில் திரிகுன் எனப் பெயர் மாற்றிக் கொண்ட ஆதித் அருண் நடித்துள்ளார். தங்கமகன் படத்தில் தனுஷின் உறவினராக நெகடிவ் ரோலில் நடித்திருப்பார். சிறையில் இருந்தவாறே எப்படி எல்லாக் கொலைகளையும் திட்டமிடுகிறார் என்ற சஸ்பென்ஸைத் தன் நடிப்பால் அதிகப்படுத்தியுள்ளார். அவரது காதல் மனைவியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.
மார்ச்சுவரியில் பிணங்களுக்கு மத்தியில் மிகவும் கேஷுவலாக உணவு உண்ணும் டாக்டர் பத்ராவா அறிமுகமாகிறார் அமலா பால். படிய வாரிய தலை, நெற்றியில் விபூதிக்கீற்று என கதாபாத்திரத்திற்காகத் தோற்றத்தில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் நல்ல ட்ரான்ஸ்ஃபர்மேஷனைக் காட்டியுள்ளார் அமலா பால். கதையின் நாயகியாகத் தனது முதற்படத் தயாரிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். பெண் தயாரிப்பாளர் என்ற வகையில், ‘ஹீரோ’யிசம் கடந்த ஜானர்களில் அமலா பாலிடமிருந்து மாறுபட்ட நல்ல படங்களை எதிர்பார்க்கலாம்.