ஏழு வருடங்களிற்குப் பிறகு, கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் இயக்குநர் முத்தையா. அடித்து வெளுக்கும் நாயகன், குலச்சாமியாக ஒரு பெண் கதாபாத்திரம், தறிகெட்டு திரியும் வில்லன் என்ற தனது டெம்ப்ளட்டிற்குள் விருமனையும் அடைத்துள்ளார்.
தனது தாயின் மரணத்திற்குத் தந்தை முனியாண்டி தான் காரணமென்ற எண்ணம், சிறுவன் விருமனின் மனதிலே ஆழமாகப் பதிகிறது. சாகும் முன், விருமனிடம், பணத்தை விட உறவுகள் புடை சூழ வாழ்வதே சிறந்தது என தந்தைக்கு உணர்த்தும்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறார் அவனது அம்மா முத்துலக்ஷ்மி. சுயநலத்தையும் அகங்காரத்தையும் ஆணவத்தையும் மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் முனியாண்டியை விருமன் எப்படி தன் வழிக்குக் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தின் அச்சாணி என்றால் முனியாண்டியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ்தான். அவரது பாத்திர அமைப்பை இன்னும் ஸ்திரப்படுத்தியிருந்தால், தானாக விருமனுக்கான சவாலும் ஹீரோயிசமும் அதிகமாகி இருக்கும். முனியாண்டியின் கிரியா ஊக்கி, பணமா ஈகோவா என்ற தெளிவின்மை சுவாரசியத்தை ஒரு மாற்று குறைவாக்குகிறது.
தேன் எனும் பாத்திரத்தில், நாயகியாக அதிதி ஷங்கர் அறிமுகமாகியுள்ளார். கிராமத்துப் பெண்ணாக அவரை ஏற்றுக் கொள்ளக்கூடிய நடிப்பை வழங்கியுள்ளார். நடிப்பை விட நடனமாடுவதில் கூடுதல் அபிலாஷை உள்ளவராக தெரிகிறார். சரண்யா பொன்வண்ணன் வழக்கம் போல் பாசமிகு அம்மாவாக நடித்துள்ளார். முத்தையாவும் தன் வழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல், அம்மாவான சரண்யாவிற்குக் கோயில் கட்டிவிடுகிறார்.
ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் போன்ற பழம் தின்று கொட்டை போட்டு நடிகர்களை விட, கருணாஸின் கதாபாத்திரம் ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. வசுமித்ர, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார் ஆகியோர் விருமனின் அண்ணன்களாக நடித்துள்ளனர். நாயகனின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பாத்திரங்களாக மட்டுமல்லாமல், இன்னும் சற்று ஆழமாக அவர்களது கதாபாத்திர வடிவமைப்பை வலுப்படுத்தியிருக்கலாம். கடைக்குட்டி சிங்கத்தில் வரும் கார்த்தியின் அக்கா கணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணாதிசயத்தைக் கொண்டிருப்பார்கள்.
விருமனாக முறுக்கிக் கொண்டு திரியும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. சூரியுடன் நகைச்சுவை, பிரகாஷ்ராஜுடன் மல்லுக்கட்டு, அதிதியுடன் காதல், அண்ணன்களிடம் பாசமென உணர்ச்சிகளால் நிரம்பிய விருமன் கதாபாத்திரத்துக்கு அற்புதமான நியாயத்தினைச் செய்துள்ளார். ஏலம் எடுக்குமிடத்தில் ஆர்.கே.சுரேஷைச் சிக்க வைக்கும் காட்சியும், அடுத்த நாள் மீண்டும் அவர்களை வசமாக ஓரிடத்தில் அடைத்து வைக்கும் காட்சியும் ரசிக்கவைக்கிறது. வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளும் ஆறுதல்.
வாழ்க்கை பாடுகளுக்காக ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் காலத்தில், உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதற்கான நேரமோ, அவசியமோ இல்லாமல் போய்விட்டது. இத்தகைய சூழலில், உறவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை மையக்கருவாகக் கொண்டு விருமனை உருவாக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா. பணம் பணமென முனியாண்டி உறவுகளை இழக்க, பாசத்தால் அனைவரையும் வசீகரிக்கிறார் விருமன்.
அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்?