ஆஹாவில், மஹத் ராகவேந்திரா, தீபிகா சதீஷ், மானஸா செளத்ரி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இணைய தொடர் வெளியாகியுள்ளது. எமோஷ்னலான காதல் கதை என்பதால் ‘எமோஜி’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
எமோஷன்ஸை (உணர்ச்சிகள்) வரைபடங்களாகச் சித்தரிக்கப்படுவதை எமோட்டிகான் என்றோ, எமோஜி என்றோ அழைப்பார்கள். எமோஜி என்பது இரண்டு ஜப்பானிய சொற்களின் (E + moji) சேர்க்கையில் உருவான வார்த்தை.
பிரார்த்தனா எனும் பெண்ணைக் காதலித்து, தீக்ஷாவைக் கல்யாணம் செய்யும் ஆதவ், விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறான். பிரார்த்தனாவுடன் எப்படி காதல் மலர்கிறது, ஏன் தீக்ஷாவைக் கல்யாணம் செய்கிறான், மகிழ்ச்சியாக வாழும்போதே ஏன் விவாகரத்துச் செய்கிறான் என்பதே இத்தொடரின் கதை.
நாயகனின் நண்பனாக VJ ஆஷிக் நடித்துள்ளார். நடப்பனவற்றை எல்லாம் ராப் பாடல்களாக மாற்றும் ராப்பராக நிறைய பாடுகிறார். சனத் பரத்வாஜின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசையும் ரசிக்க வைத்தாலும், ஒரு மூடில் இருந்து இன்னொரு மூடுக்கு சட்டென சில காட்சிகளில் மாறுவதைத் தவிர்த்திருக்கலாம். அத்தகைய ஜம்ப் தொடரின் ஓட்டத்திற்கு சிறு நெருடலாக அமைந்துள்ளது.
தொடரின் முதல் மூன்று அத்தியாயங்களில் இளமைத் துள்ளலும், இன்றைய தலைமுறையின் மனப்போக்கையும் பிரதானப்படுத்தியுள்ளனர். ரொமெடி (Romedy) வகைக்குக் கொஞ்சம் மேலேயும், அடல்ட் காமெடிக்குக் கொஞ்சம் கீழேயும் இந்த மூன்று அத்தியாயங்களை வகைப்படுத்தலாம். இதற்கு, டெக்கத்லானில் பணிபுரியும் பிரார்த்தனாவாக நடித்துள்ள மானஸா செளத்ரி உதவி புரிகிறார். மூன்றாவது அத்தியாயத்திலேயே மானஸாவின் போர்ஷன் முடிவதால், அடுத்த நான்கு அத்தியாயங்களில் படத்தின் ஜானரும் எமோஷ்னல் ஜர்னியாக மாறுகிறது.
தீக்ஷாவாக தேவிகா சதீஷ். இரண்டாவது நாயகி போல் அறிமுகமாகி, தொடரின் நாயகியாகிறார். நான்காவது அத்தியாயத்தில் இருந்து தொடரைத் தாங்கும் தூணாகத் தன் நடிப்பால் வலு சேர்த்துள்ளார். காதல் வயப்படும்போது, ரிலேஷன்ஷிப் ப்ரேக் ஆகும்போது, க்ளைமேக்ஸ்க்கான முடிவை பலத்த யோசனைக்குப் பின் எடுக்கும்போது என உணர்வுகளைக் கச்சிதமாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார்.
கண்டதும் மருகிக் காதல் வயப்படுதல், காதலியைப் பிரிந்து துயருறுதல், தீக்ஷாவைத் தேடி பந்திப்பூர் வனத்திற்குச் செல்லுதல் என அனைத்துக் நேரத்திலுமே ஒரு மாதிரியான ரியாக்ஷனையே தருகிறார் மஹத் ராகவேந்திரா. அவரிடம், பென்சிலைத் தொலைத்துவிட்டு அசடாய்ப் புன்னகைக்கும் ஒரு குழந்தைமையின் எச்சம் தொக்கி நிற்கிறது. தேவைக்கு அதிகமாக அவருக்கு மைண்ட் வாய்ஸ் தந்துள்ளனர். ‘என்ன குடிக்கிறாங்க? ஓ, கள்ளு குடிக்கிறாங்களா?’ என விஷுவலிலேயே பார்வையாளர்கள் புரிந்து கொள்ளக்கூடிய விஷயத்திற்கும் ரன்னிங் கமென்ட்ரி கொடுப்பது போலுள்ளது. ஒரு பிரிவில் இருந்து மீண்டு, அடுத்த காதலுக்குள் நுழையும்போது, முன்னதைப் போலல்லாமல் ஒரு மெச்சூர்டான மனநிலையில் இருப்பதை தேவிகா தன் நடிப்பில் அநாயாசமாகக் கொண்டு வருகிறார். ஆனால் மஹத்தால், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் கன பரிமாணங்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றே சொல்லவேண்டும். தாடி வைத்தாலும் அவரது முகத்தினின்று குழந்தைமை மறையாததே அதற்குக் காரணம்.
இரண்டு கதாநாயகிகள் தேர்வில் ரசமான ரசனையைக் காட்டி ஈர்க்க வைக்கிறார் இயக்குநர் சென் S. ரங்கசாமி. ஏன் விவாகரத்து என்பதற்கு அவர் சொல்லும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அல்லது ஏற்கும்படி அவர் கன்வின்ஸ் செய்யவில்லை. காதலின் சுவையைக் கூட்டும் கன்னிகளில் ஒன்று காத்திருப்பு. அதை ஒரு காரணமாகச் சொல்லி அழுவாச்சி முகங்களோடு நீதிமன்ற படியேறுகின்றனர். பேச வேண்டிய இடத்திலும் கூடப் பேசாமல் எமோஜிகளால் நிரப்பும் ஒரு ஜெனரேஷன் எடுக்கும் அவசர முடிவுகள் எப்படியிருக்கும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றது தொடரின் முடிவு. 😱