Shadow

கார்மேனி செல்வம் – ஆணின் வலியைப் பேசும் படம்

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் ராமானுஜம், “பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்குள்ள பிரபலமான இசைக்கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம்” என்றார்

நடிகர் கோதண்டம், “இந்தப் படத்தை ‘ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்’ என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.‌ பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடியாது என்று சொல்வார்கள். அந்த வலி – யாராலும் தாங்க முடியாத வலி. மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.

ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி, ‘வாங்கித்தா’ எனs சொல்கிறான். அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித் தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே, அதை எதனோடும் ஒப்பிட முடியாது. இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக் கூட ஒரு கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்ற வலியைs சொல்வது தான் இந்தப் படம். பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தகப்பனாகவும் கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார். ‘கார் மேனி செல்வம்’ படத்தில் யாரும் நடிக்கவில்லை. அனைவரும் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள், இதனால் இந்தப் படம் பார்க்கும்போது ரசிகர்களுடன் எளிதாகக் கனெக்ட் ஆகும்.‌

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தைக் கட்டி, அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களைத் திரையிட வேண்டும். அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும். திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைக் கடந்து பலருக்கு வாழ்க்கை, லட்சியம்” என்றார்.

நடிகை அபிநயா சைகை மொழியில், “இந்தப் படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

எழுத்தாளர் செந்தமிழன், “இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களுடைய மன நெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் அதே மன நெருக்கடியைப் பதிவு செய்கிறது. அது ஆயுதப் போரினால் விளைவது அல்ல, சமூக உளவியல் போரினால் எழுவது.

இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அது போன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்தத் திரைப்படம், மிகவும் அழகாக, உணர்ச்சி அளவில் நேர்மையாகக் கேள்வி எழுப்புகிறது.

தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள் தான். நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.‌ சில நாட்கள் அங்குத் தங்கி இருக்கிறோம். தமிழர்களுக்குப் பல நாடுகளுக்குச் சென்று பரவி வாழ்வது புதிதல்ல. குற்றமும் அல்ல. கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு இருந்தாலும், உடல் நலமும், மன நலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான். ஆம் என்றால் அது உன் ஊர். இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல.‌ சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்தக் கேள்வி உரியது. இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது, மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம். வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான். அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்.‌ நான் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடனும் மன நலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்” என்றார்.

இயக்குநர் ராம் சக்ரி, “நான் இதற்கு முன் ‘குறையொன்றுமில்லை’ படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன். அதன் பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம் சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.‌

என்னுடைய முதல் படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதி திரட்டி உருவாக்கினேன்.‌ அவர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது. அவர் திரைக்கதையை முழுவதுமாகப் படித்துவிட்டு எனக்கு ஃபோன் செய்து, ‘ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இல்லை செல்வத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று தானே சொல்ல வருகிறாய்!’ என்று சொல்லும் போது, நான் சொல்ல நினைத்த விஷ‌யத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன், ‘நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார்’ என்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்ன போது, உடனே ஓகே சொன்னார். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போது வரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.‌

நடிகை அபிநயா படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.‌ படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்தக் கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது. இந்தப் படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.‌

இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய நடன இயக்குநருக்கு நன்றி. இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஏதேனும் கடன் நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.‌

நடிகர் சமுத்திரக்கனி, “கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரைச் சந்தித்து, ‘இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்! வாருங்கள் சேர்ந்து சொல்வோம்’ என்று இப்படத்தின் பணியைத் தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களைப் பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்தச் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.

மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷ‌மானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த ‘கார்மேனி செல்வம்’ படைப்பு.

பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷ‌யங்களைப் பேசி இருக்கிறோம். ‘கார் மேனி செல்வம்’ சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்தப்படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.

நிறைய சுமைகளைத் தூக்காதீர்கள். இ.எம்.ஐ என்ற பெயரில் சுமைகளைச் சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்தச் சுமையைச் சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்கள்” என்றார்.