Shadow

நீ Forever விமர்சனம் | Nee ஃபாரெவர் review

அழகான ஆண் மட்டுமல்ல அனைவருக்குமே டேட்டிங் செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவேண்டுமென நினைக்கிறான் மகிழ்ச்சியற்ற அஜய். அநாதை ஆசிரமத்தில் வளரும் மதிக்கு சினிமா இயக்குநராக வேண்டுமென்ப்ச்து ஆசை. காதலிக்காமல், காதலின் அனுபவம் வாய்க்காமல் எப்படி டேட்டிங் செயலி உருவாக்க முடியும் என்று அஜயிடம் கேட்கப்படுகிறது; ஒரு காதல் கதையைப் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு மதியிடமும் வழங்கப்படுகிறது. இருவரும் காதல் என்றால் என்னவென்று அறிந்து கொள்ள ட்ரபிள் (Trouble) எனும் கைபேசி செயலியில் இணைகின்றனர். கழட்டி விடும் உள்நோக்கத்துடன் இருவரும் அறிமுகமாகி நல்லவிதமாகப் பழகுகின்றனர்.

நாயகனின் நண்பர்கள் ராக்கி, கூக்கியாக நடித்துள்ள பிரதோஷும், நோபல் ஜேம்ஸும் கொஞ்சம் கலகலப்பிற்கு உதவுகின்றனர். அஜயாக நடித்துள்ள சுதர்சன் கோவிந்த் நல்ல நாயக வரவு. நன்றாக நடனமாடுகிறார். சில காட்சிகளில் நன்றாக நடிக்கவும் செய்கிறார். ஆனால் கதாபாத்திர விவரணையில் உள்ள போதாமையும், அனுபவமின்மையும் பல இடங்களில் தெரிகிறது.

நாயகனின் தோழியாக நடித்துள்ள ஸ்னேகா சக்தி, அக்கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பான தேர்வு. அவரது முகத்தில் குறும்புத்தனம் கொப்பளிக்கிறது. நாயகிக்கு டேட்டின்க் டிப்ஸ் தரும் போதும் சரி, நாயகியின் சுயநலத்தை இடித்துரைக்கும் போதும் சரி, நல்ல தோழியாக நிறைவான நடிப்பை வழங்கி ஈர்க்கிறார். ஐஸ்வர்யா எனும் பெயரில் அறிமுகமாகி நாயகனை ஏமாற்றும் மதியாக அர்ச்சனா ரவி தோன்றியுள்ளார். ’80கள், ’90களின் நாயகி போல், நாயகன் மேல் காதல் வந்தும் அதை வெளிப்படுத்தாதவராக உள்ளதை ஏற்றுக் கொள்ள சிரமமாக உள்ளது.

மையப் பாத்திரங்களுக்கு இடையேயான சச்சரவு (Conflict) மிக மேலோட்டமாக உள்ளது. கண்டிப்புடன் வளர்க்கப்படும் தாத்தாவால் வாழ்க்கையில் மகிழ்ச்சியே போய்விட்டதெனக் கருதுகிறான் நாயகன். அதனால் தனக்கு நண்பர்களே இல்லையென வருத்தப்படுகிறான். பள்ளிகளில் நட்பு எப்படி உருவாகும் என்ற அடிப்படையைக் கூடப் பொருட்படுத்தாமல் இவ்விஷயத்தைக் கடந்து விட்டுள்ளார் இயக்குநர். திரைப்படம் இயக்குவதற்காக காதலிப்பது போல் நடிப்பதோடு மட்டுமல்லாமல், நாயகனின் பொள்ளாச்சி வீட்டுக்கே ஏமாற்றச் சென்று விடுகிறார் நாயகி. மையக் கதாபாத்திரங்களிடமே அடிப்படை அறமும் இல்லை, குறைந்தபட்சமாக அமர்ந்து பேசும் பொறுமையும் இல்லை. குற்றவுணர்வோடும், கொஞ்சம் தியாகி சுபாவத்தோடும் வலிய வருகின்றனர் கதாபாத்திரங்கள். அதனால் நாயகனும் நாயகியும் சேர்ந்தே ஆகவேண்டுமென்ற எண்ணம் தோன்றாமல், இதற்காகவா பிரிகிறார்கள் என்ற சலிப்பே ஏற்படுகிறது. ஐடியாவாக ஒரு முழு நீள ரொமெடி ஜானர் படமாகத் தோன்றினாலும், வலுவற்ற திரைக்கதையால் ‘லவ்லி ரெயின்ஸ் (Lovely Rains)’ -இன் மேஜிக்கையும் குளிர்ச்சியையும் முழுதாக உணர முடியாமல் போகிறது.