32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review

Dinesh R சேலம் Published: 26/03/2026 2 நிமிட வாசிப்பு Updated: 09/04/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

எல்லா நம்பிக்கைகளும் முற்றிலுமாகத் தகர்ந்து விட, ஒரு கடைசி முயற்சி செய்து பார்ப்போம் என்று கையறு நிலையில் செய்யப்படுவதை, ‘ஹெயில் மேரி’ என்பார்கள். இப்பதம் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படுவதாகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பூமியைக் காப்பாற்ற, அப்படி மேற்கொள்ளப்படும் ஒரு கடைசி முயற்சிக்கு ப்ராஜெக்ட் ஹெயில் மேரி என பெயர் வைக்கிறார்கள். சூரியனை மெல்ல மங்கச் செய்கிறது ஆஸ்ட்ரோபேஜ் எனப்படும் நுண்ணுயிரி. அந்த ஆஸ்ட்ரோபேஜ்களைத் தடுக்காவிட்டால், அடுத்த முப்பது வருடங்களில் பூமியின் வெப்பம் பத்திலிருந்து பதினைந்து டிகிரி அளவிற்குக் குறைந்து பெரும் பாதிப்புகளை விளைவிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. ‘டெள சீ-டை (Tau Ceti)’ எனும் நட்சத்திரம் மட்டுமே இந்நுண்ணுயிரியின் பாதிப்பில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளது என்பதைக் கண்டறிகின்றனர். அந்நட்சத்திரம் மட்டும் எப்படி ஆஸ்ட்ரோபேஜ்களின் தாக்குதலில் இருந்து தப்பின என்று கண்டறியும் ஒரு தற்கொலை முயற்சியாக ஹெயில் மேரி திட்டம் உருவாக்கப்படுகிறது. அத்திட்டத்திற்குள், பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் அணுக்கூறு உயிரியலாளரான ரைலேண்ட் கிரேஸைக் கொண்டு வருகிறார் ஈவா ஸ்ட்ராட்.

மீண்டும் பூமிக்குத் திரும்ப வரமுடியாத அந்த விண்வெளி பயணத்தின் முடிவில், ரைலேண்ட் கிரேஸ் மட்டும் உயிர் தப்புகிறார். உடன் வந்த இருவர் இறந்து விடுகிறார். அண்டவெளியில் தனியாகச் சிக்கிக் கொள்ளும் கிரேஸி, எரிட் எனும் நட்சத்திரக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கிரகத்தில் இருந்து வந்திருக்கும், ஐந்து கால் கல் உயிரினமான ராக்கியைச் சந்திக்கிறார். இருவரது நோக்கமும் ஒன்றென அறிந்து நண்பர்களாகி, பார்வையாளர்களின் மனதைக் கனக்கச் செய்யும் சாகசத்தைச் செய்து பிரபஞ்சத்தையே மீட்கின்றனர்.

பரந்த விரிந்த விண்வெளியில் ஒற்றை மனிதராகத் திரை முழுவதும் வியாபித்துள்ளார் ரைலேண்ட் கிரேஸாக நடித்துள்ள ரையன் காஸ்லிங். இரண்டரை மணி நேரப் படத்தைப் பெரும்பாலும் தனியாளாகவே சுமந்து அசத்துகிறார். இது அவரது வாழ்நாளுக்கான படமாக என்றென்றும் அவரது மாண்பைப் போற்றும் படைப்பாக அமையும். ராக்கி என்ற அந்த வேற்றுகிரக உயிரினத்துடன் நாயகனுக்கு ஏற்படும் நட்பும், அந்த நட்பிற்காக இருவரும் செய்யும் தியாகமும், சயின்ஸ்-ஃபிக்ஷன் என்ற புள்ளியைக் கடந்து கிளாஸிக்கான ஒரு தளத்தை எட்டி விடுகிறது.

விண்வெளியில் ஒரு விஷுவல் கவிதை என்று சொல்லுமளவுக்குப் படம் அதி அற்புதமாக உள்ளது. ஐ-மேக்ஸ் போன்ற பெரிய திரையில் பார்க்க வேண்டிய படம். வழக்கமான சின்ன திரையில் பார்த்தாலுமே கூட, பார்வையாளர்களை விண்வெளியில் இழுத்து மிதக்க விட்டுவிடுகிறது பிராஜெக்ட் ஹெயில் மேரி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.