Shadow

ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்

Curt Harper

“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து கொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன்.

நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாகp பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ, அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக் கொடுப்பதில் மாறவேண்டும்.

திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம். ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம். அதுவரை இடைவிடாது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் ஆர்வம் அறிந்து நாம் கற்றுக் கொடுப்பது என்பது அவசியம். இந்தனை முயற்சிகளுக்கும் பொறுமை அவசியம். ஆனால் முயற்சிகள் எப்போதும் தோற்றுப் போகாது. ஒருநாள் பெற்றோர் வியக்கும்படி பிள்ளைகள் கற்றுக் கொண்டிருப்பார்கள்.

கர்ட் ஹர்பெர் (Curt Harper) என்பவருக்கு இன்று 50 வயதாகிவிட்டது. இரண்டு வயதில் ஆட்டிசம் என்று அடையாளம் காணப்பட்டவர். தொடர்ந்து பெற்றோர் முயற்சியில் இன்று கர்ட் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக சொல்கிறார். 17 ஆண்டுகளுக்கு மேலாக அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமிக்கவராக இருக்கும் கர்ட், பலருக்கும் பயிற்றுவிற்பவராகவும் இருக்கிறார்.

சமைக்கிறார், கார் ஓட்டுகிறார், வேலைக்குப் போகிறார், கற்றுக் கொடுக்கிறார், விளையாடுகிறார். ஃபோன் பேசுகிறார். மொத்தத்தில் பிறரைச் சார்ந்திருக்காமல் தன் தேவைகளைப் பூர்த்திச் செய்து தன் வாழ்க்கையை தானே வாழ்கிறார்.

கர்ட் ஹர்பெர் பற்றிய இந்த ஆவணப்படத்தை, ஆட்டிச நிலைக்குழந்தையின் பெற்றோர் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

– யெஸ். பாலபாரதி