![](https://ithutamil.com/wp-content/uploads/2017/01/Sing-animation-movie-fi.jpg)
பிக்சார் அனிமேஷன் படங்களில், கதை சொல்லும் முறையில் ஒரு மேஜிக் இருக்கும். பொம்மையோ, காரோ, ரோபோவோ, எலியோ, மீனோ என இப்படி எதுவாக இருந்தாலும், அதை உயிருள்ள கதாபாத்திரங்களாக நம்மை உணரச் செய்து விடுவார்கள்.
இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட், தனதுமினியன்ஸ் எனும் கதாபாத்திர உருவாக்கத்தால், வயது வித்தியாசமின்றி அத்தனை ரசிகர்களையும் தன் பால்கவர்ந்தவர்கள். அவர்கள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹிட்டான மினியன்ஸ் படத்திலேயே கூட, பிக்சார் ஏற்படுத்தும் மேஜிக் இல்லாமல் இருந்தது. ஆனால், “சிங் (SING) படத்தில் மாயம் செய்துள்ளனர் இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட்.
பஸ்டர் மூன் எனும் கோலா கரடிக்கு, தன் தியேட்டரில் பிரம்மாண்டமான இசைப் போட்டி நடத்த ஆசை. கையிருப்போ தொள்ளாயத்து சில்லறை மட்டுமே இருக்கிறது. தனது அசிஸ்டென்ட்டான பச்சை ஓனானிடம் 1000 டாலர்கள் பரிசுத் தொகை என அறிவிக்கச் சொல்கிறார். ஆனால், மூதாட்டியான பச்சை ஓனானின் பொம்மைக் கண் கீ-போர்ட்டில் விழுந்து, தவறுதலாக ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை என அறிக்கையில் பிரசுரமாகி விடுகிறது. அப்பரிசுத் தொகை நிறைய போட்டியாளர்களை ஈர்த்து விடுகிறது. உண்மை தெரியாத பஸ்டரோ, மிக அற்புதமாக தேர்வை நடத்துகிறார். கார்த் ஜென்னிங்ஸின் கற்பனைக்குக் கட்டியம் கூறும் காட்சிகள் அவை. போட்டியில் கலந்து கொள்ளும் நத்தை, மைக் மீது படர்ந்தவாறு பங்கு கொள்ளும். இப்படி ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு விதமாய்ப் பங்கு கொள்ளும். போட்டியில் வெல்லும் ஒட்டகச்சிவிங்கியிடம், போட்டியில் வென்று விட்டதாக அறிவிக்கிறது பஸ்டர் மூன். ‘என்னிடமா பேசுகிறீர்கள்?’ என நீண்ட கழுத்துதின் காரணமாக, எங்கேயோ மேலிருந்து கேட்கிறது. ஒவ்வொரு முறையும் எப்படி ஒட்டகச்சிவிங்கியுடன் பேசுவதென போட்டியின் முடிவை மாற்றிக் கொள்கிறது பஸ்டர் மூன்.
படம் மனதிற்கு நெருக்கமாவது, கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழலையும் மனநிலையையும் நம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிவதால்தான். ரோசிட்டா எனும் ‘ஹவுஸ் ஒய்ஃப்’ பன்றிக்கு, 25 குட்டிகள் உள்ளனர். அவர்களை எழுப்பி பள்ளிக்கு அனுப்புவதிலேயே பெரும்பாலான நேரம் செலவாகிறது. பாடுவதில் விருப்பமுள்ள ரோசிட்டா எப்படி தன் நேரத்தை வடிவமைத்துக் கொள்கிறார் என்பது மிகச் சுவாரசியமான காட்சி. தயக்கத்தில் இருந்து மீண்டு அவர் பாடிக் கொண்டே நடனமாடுவது அற்புதம்.
பாடகராகும் ஆசையில் ஜானி எனும் மனிதக் குரங்கு, கொள்ளையில் ஈடுபடும் தன் தந்தையைச் சிக்கலில் மாட்டிவிடும். மகனின் முகத்தில் விழிக்க விரும்பாத ஜானியின் தந்தை, சிறையில் இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக தன் மகனின் பாடலைக் கேட்க நேரிடுகிறது. சிறையில் இருந்து தப்பி, தன் மகனிடம் போய் பேசும் காட்சி, நமக்குப் பழக்கமானதுதான் என்றாலும் நெகிழ்ச்சியடைய வைக்கத் தவறவில்லை.
மீனா எனும் யானைக்கு, மேடை ஏறுவதென்றால் நடுக்கம். ஆனால், அவள் குரல் மிக வசீகரமாய் இருக்கும். தேர்வின் பொழுது பாடாமலே வெளியேறி விடுவாள். விரக்தியில் வழியிலுள்ள ஒரு மரத்தை ஓர் எத்து விடுவாள். அம்மரத்திலுள்ள இலைகள் எல்லாம் கொட்டிப் போகும். இன்னொரு வாய்ப்பைக் கேட்டு மீண்டும் போகும் பொழுது, பஸ்டர் மூனின் தியேட்டரில் வேலை கிடைக்கிறது. முக்கியமான நேரத்தில் தியேட்டர் இடிந்து தூள் தூளாகி விடுகிறது. எல்லாம் போனதென பஸ்டர் மூன் நடைப்பிணமாகி விடுகிறார்.
இலைகள் எல்லாம் உதிர்ந்த மரம் துளிர்க்கத் தொடங்குவதைக் காணுகிறாள் மீனா. ‘சிங்’ படத்தின் மையக்கருவே இதுதான். நம்பிக்கையை விதைப்பது. அந்த நம்பிக்கையை பஸ்டர் மூனுக்கு மீனா அளிக்க, இடிந்த தியேட்டரிலேயே மீண்டும் பரிசில்லா இசை நிகழ்ச்சி தொடங்குகிறது. அந்த இசை நிகழ்ச்சி, பஸ்டர் மூனின் வாழ்க்கையிலும், அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் வாழ்விலும் எத்தகைய மாயங்களைச் செய்கிறது என்பதுதான் படத்தின் முடிவு.
இடிந்த தியேட்டரில் நிகழும் இசையும், நடனமும் மனதைப் பரவசத்திற்கு இட்டுச் செல்கிறது. ஆஷ் எனும் முள்ளம்பன்றி, தன்னை மறந்து பாடும் பொழுது, அதன் உடம்பில் இருந்து முட்கள் பறந்து சென்று சுற்றியிருப்பவர்களைத் தாக்குவது சுவாரசியமான கற்பனை. படம் முடியும் பொழுது, நம்மை ஒரு குதூகலமான மனநிலையில் லயிக்கச் செய்கிறது. படம் முடிந்து கிரெடிட் போகும் பொழுது வரும் பின்னணி இசையையும் தவறாமல் கேட்கவும். இசையமைப்பாளர் ஜோபி டால்பொட் (Joby Talbot) அமர்க்களப்படுத்தியுள்ளார்.
சிங் – பரவசம்.